நீரோடிய காலம் 9: கல்லணையெனும் கொண்டாட்டம்!


தென்பெரம்பூரிலிருந்து புறப்பட்டு திருக்காட்டுப் பள்ளியை நோக்கிப் பயணித்தோம். எப்படிப் பார்த்தாலும் கூப்பிடு தூரத்தில் எல்லாத் திசைகளிலும் காவிரி ஏதாவது ஒரு ரூபத்தில் ஓடிக்கொண்டுதான் இருந்தாள். சிறுசிறு கிராமங்கள். ஆடிப்பெருக்கைச் சிறுவர்கள்தான் உற்சாகமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.



ஆடிப்பெருக்கன்று சப்பரம் செய்து அதை இழுத்துக்கொண்டு போய் ஆற்றில் விடுவது வழக்கம். அதன் தொடர்ச்சியை வழிதோறும் பார்க்க முடிந்தது. அட்டைகள், மெல்லிய பலகைகள், மரச்சக்கரங்கள், குச்சிகள் போன்றவற்றைக் கொண்டு சிறுவர்கள் அழகழகாகச் சப்பரம் செய்திருந்தார்கள். அவற்றில் வண்ணக் காகிதங்களும் ஒட்டியிருந்தார்கள். ஆட்டமும் பாட்டமுமாகச் சப்பரங்களை இழுத்துக்கொண்டு சென்றார்கள். நம்மைப் பார்த்ததும் காரை வழிமறித்து உண்டியலை நீட்டினார்கள்.

சிறுவர்களின் கூட்டுப் பங்களிப்பு, அவர்களுடைய விளையாட்டை அவர்களே வடிவமைத்துக்கொள்ளும் திறமை போன்றவற்றுக்கு இதுபோன்ற மரபுகள் பெருந்துணை புரிகின்றன. அந்தக் கிராமத்தில் அடுத்த தலைமுறைச் சிறுவர்கள் இப்படி சப்பரம் செய்து இழுத்துச் செல்வார்களா என்று தெரியவில்லை.

திருக்காட்டுப்பள்ளியை அடைந்தபோது மதியம் இரண்டு மணி. தென்பெரம்பூர் போலில்லாமல் அங்கே மக்கள் குதூகலமாக ஆடிப்பெருக்கைக் கொண்டாடிக்கொண்டிருப்பது தெரிந்தது. மாலைநேரங்களில் மக்கள் பொழுதுபோக்குவதற்கு ஏற்ற இடம்.
குடமுருட்டியைப் பற்றிச் சின்ன வயதிலிருந்து நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். காவிரி அளவுக்கு நிதானமில்லாத நதியென்றும் அது சுழித்துக்கொண்டோடும்போது ஆள் அகப்பட்டால் அப்படியே உள்ளே வைத்து அழுத்திவிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய அப்பா சிறுவராக இருந்தபோது அருகில் உள்ள ஊரில் கொஞ்ச காலம் இருந்திருக்கிறாராம். அப்போது குடமுருட்டியில் ஒருநாள் குளிக்கச் சென்றபோது சுழலில் சிக்கிக்கொண்டுவிட்டாராம்.
நல்லவேளை, கரையோரத்தில் காலைக்கடன் கழித்துக்கொண்டிருந்த ஒருவர் பார்த்துவிட்டு என் அப்பாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினாராம். இப்போது அப்பா இல்லை. குடமுருட்டியில் அந்த ஆபத்பாந்தவன் அந்த நேரத்தில் வந்திராவிட்டால் இப்போது நானும் இருந்திருக்க மாட்டேன். அந்த நபரை நன்றியுடன் நினைத்துக்கொண்டு குடமுருட்டியைப் பார்த்தேன். அன்று குடமுருட்டியைவிட காவிரியில் அதிகம் தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தார்கள். அதனால், வாலைச் சுருட்டிக்கொண்டு குடமுருட்டி ஓடிக்கொண்டிருந்தது.

குடமுருட்டியை ஓரக்கண்ணால் ஏளனமாகப் பார்த்தபடி காவிரி துள்ளியோடிக்கொண்டிருந்தாள். ஆடிப்பெருக்கை முன்னிட்டு மக்கள் ஆற்றுடன் உள்ள தங்கள் பூர்வ உறவை அங்கு புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகளுக்கு அது விளையாட்டுக்குரிய மற்றுமொரு தருணம். காவிரியிலிருந்து குடமுருட்டி பிரியும் இடத்தில் குடமுருட்டியைக் கடந்து காவிரியின் தென்கரையில் அமர்ந்துகொண்டோம். அங்கு புதுமணத் தம்பதிகள் தங்கள் மணமாலையை இருவருமாக சேர்ந்து காவிரி நீரில் விட்டார்கள். புதுப்பெண்களின் வெட்கம் ஆற்றின் சுழித்தோடும் நீரில் அழகாகப் பிரதிபலிக்க வெட்கத்துக்குக் கூடுதல் அழகு சேர்கிறது.

காவிரிக் கரையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் ஆடிப்பெருக்கன்று காவிரியும் அவளைத் தேடி வரும் பெண்களும் எவ்வளவு அழகாக இருப்பார்கள் என்று! கைக்குழந்தையுடன் ஒரு தம்பதியினர் வந்து சடங்குகள் செய்துவிட்டு, காவிரியில் கால் நனைத்தனர். ஒருவேளை, திருமணம் ஆனவுடன் ஏதோவொரு காரணத்தால் ஆடிப்பெருக்கு அவர்களுக்கு சாத்தியமில்லாமல் போயிருக்கலாம், அல்லது காவிரியில் தண்ணீர் இல்லாமல் கூட இருந்திருக்கலாம். அந்தக் குழந்தையை ஏந்திக்கொண்டு அந்தத் தாய் நடக்கும்போது காவிரியே குழந்தையை ஏந்திக்கொண்டு சென்றதுபோல் இருந்தது.

நாடோடி இன மக்கள், வடக்கிந்தியர்கள் அங்கே பலூன், விளையாட்டுப் பொருட்களுடன் ஆடிப்பெருக்குக்கே உரித்தான கருகமணி, காதோலை, பேரிக்காய், பொரி போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தார்கள். ஆடிப்பெருக்கு அழகான சம்பிரதாயம்தான். ஆனால், தாங்கள் கொண்டுவந்த பொருட்களால் மக்கள் ஆற்றங்கரையையும் ஆற்றையும் இந்த அளவுக்கு மாசுபடுத்த வேண்டுமா என்று தோன்றியது? மக்கக்கூடிய பொருட்கள் என்றால் பிரச்சினையில்லை. அவற்றைக் கொண்டுவந்த பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்றவற்றால் அந்த இடத்தின் அழகே குறைபட்டுப்போனது போல் இருந்தது.

பலரும் கட்டுச்சோற்றை அவிழ்த்துச் சாப்பிட ஆரம்பித்தார்கள். நமக்கும் பசி கிளம்ப, நாங்கள் கொண்டுவந்த கட்டுச்சோற்றை அவிழ்த்துச் சாப்பிட்டோம். மறக்காமல், நாங்கள் சாப்பிட்ட இடத்தைச் சுத்தமாகவே விட்டுவிட்டுவந்தோம்.
அடுத்தது கல்லணை. திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மேற்கே 16 கி.மீ. தூரம் பயணித்துக் கல்லணையை அடைந்தோம்.

அங்கேதான், மெரினாவுக்கே சவால் விடுக்கும் கூட்டத்தைக் கண்டோம். ஆடிப்பெருக்கையே மறைக்கும் அளவுக்கான கூட்டம் அது. அங்கே ஆடிப்பெருக்குக்குரிய சடங்குகள் செய்வதற்கு வாய்ப்பில்லை என்றாலும் விடுமுறையில் அருகிலுள்ள ஊர்களின் மக்களுக்கு இதைவிடப் பெரிய பொழுதுபோக்கு இடம் வேறொன்றும் கிடையாது என்பதால் அவ்வளவு கூட்டம்.

கல்லணையைப் பார்ப்பதற்கென்றே, கல்லணையில் காவிரி புரளும் அழகைப்  பார்ப்பதற்கென்றே வெளியூரிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் நிறைய பேர் வந்திருப்பதைக் காண முடிந்தது.

இன்னும் பயன்பாட்டில் உள்ள, உலகத்திலேயே பழமையான அணை கல்லணைதான். கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கரிகால மன்னன்தான் இந்த அணையைக் கட்டுவித்தான். காவிரியின் போக்கை ஒழுங்குபடுத்தி, காவிரிப் படுகையின் பாசனத்தை மேம்படுத்தும் நோக்கில் செய்திருக்கலாம். அணை என்று வழக்கத்தில் சொன்னாலும் கல்லணை உண்மையில் ஒரு நீரொழுங்கி (ரெகுலேட்டர்). அங்கு பிரியும் ஆறுகளின் நீரோட்டத்தைக் கூட்டவோ குறைக்கவோ அது உதவும். தண்ணீரைத் தேக்க உதவாது. திருச்சிக்கு மேற்கே காவிரியின் குறுக்கே முக்கொம்பில் இருப்பதும் ரெகுலேட்டர்தான். அதை மேலணை என்பார்கள். குடந்தைக்கு வடக்கே கொள்ளிடத்துக்குக் குறுக்காக அணைக்கரையில் இருப்பது கீழணை. அதுவும் ரெகுலேட்டர்தான்.

19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கல்லணையின் திறனை மேம்படுத்தும் நோக்கில் விஸ்தரிப்புக் கட்டுமானங்களைச் செய்தார்கள். ஆகவே, கரிகால் சோழனுக்கும், கல்லணையை விஸ்தரித்த ஆங்கிலேயப் பொறியாளர் சர் ஆர்த்தர் காட்டனுக்கும் அங்கே சிலை வைத்திருந்தார்கள்.

ஒட்டுமொத்தத் தஞ்சை மண்ணின் நீர்ப்பாசனத்தை நிர்வகிக்கும் இடம் என்று கல்லணையைப் பற்றிக் கூறலாம். ஏனெனில், தஞ்சையின் மிக முக்கியமான பாசன ஆறுகள் இங்கிருந்து பிரிகின்றன. காவிரியிலிருந்து வெண்ணாறு பிரியும் இடம் இதுதான். அதே போல் கல்லணைக் கால்வாயும் (Grand Anaicut Canal -ஜி.ஏ. கனால்) இங்கிருந்துதான் தொடங்குகிறது.

இந்தத் தொடரைக் காவிரிப் பாசனப் பரப்பில்தான் தொடங்கினேன். அடுத்ததாக வெண்ணாறு பாசனப் பரப்பு. இந்த இரண்டும் சேர்ந்தது பழைய டெல்டா. இந்தப் பழைய டெல்டாவில் சுமார் 12 லட்சம் ஏக்கருக்கு காவிரி, வெண்ணாறு நதிகளும் அவற்றின் கிளையாறுகளும் வாய்க்கால்களும் பாசனம் தருகின்றன. வடக்கே கொள்ளிடத்துக்கும் தெற்கே வடவாறுக்கும் இடையிலான பரப்புதான் பழைய டெல்டா. காவிரி டெல்டாவின் தெற்கே உள்ள பகுதிகளில் முன்பெல்லாம் மானாவாரி
விவசாயம்தான். கேணி, குளமெல்லாம் தோண்டிக்கொண்டு சமாளித்துக்கொண்டிருந்தார்கள். அந்தப் பகுதிகளுக்கும் காவிரி நீரைக் கொண்டுசேர்த்து, வளப்படுத்துவதற்காக 1925-க்கும் 1935-க்கும் இடைப்பட்ட பகுதிகளில் ஆங்கிலேயர்களால் வெட்டப்பட்டதுதான் இந்தக் கல்லணைக் கால்வாய். சுமார் இரண்டரை லட்சம் ஏக்கருக்கு இந்தக் கால்வாய் பாசனம் தருகிறது. ஆக, தஞ்சைக்கும் புதுக்கோட்டையின் ஒருசில பகுதிகளுக்கும் சேர்த்து சுமார் பதினான்கரை லட்சம் ஏக்கருக்கு காவிரி நீர் பாய்ச்சுகிறது.

கல்லணையிலிருந்து கொஞ்ச தூரத்தில் கொள்ளிடம் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. கல்லணையில் தண்ணீர் அதிகமாக ஓடினால் கொள்ளிடத்துக்கு அதைக் கொண்டுசெல்வதற்கு உள்ளாறு என்ற இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
தமிழர்களின் நீர்மேலாண்மையின் பெருமையையும் வரலாற்றையும் சொல்லும் காட்சியகங்கள், சிலைகள், பூங்கா என்று கல்லணை பொலிந்துகொண்டிருந்தது. சாதி, மத பேதமில்லாமல் காவிரி அங்கே எல்லோரையும் ஈர்த்துக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. திரும்பும் வழியில் திருவையாற்றையும் பார்க்க வேண்டும் என்பதால் கல்லணை தோகூரிலிருந்து காவிரியின் வடகரை வழியாகத் திருவையாற்றுக்குப் புறப்பட்டோம்.

மாலை ஐந்து மணியளவில் திருவையாற்றை அடைந்தோம். ஊருக்குள் எவ்வளவு புதுமை வந்திருந்தாலும் காவிரி ஒரு அழகான பழமையுணர்வைத் தந்துகொண்டிருந்தாள். கூடவே, தியாகையரின் பாடல்கள் மிதந்த பூமி வேறு அது. தியாகையர், ஐயாறப்பன் கோயில் போன்றவற்றோடு திருவையாறுக்கு இன்னொரு விசேஷம்தான் அங்குள்ள புஷ்யமண்டபப் படித்துறை. ஆடிப்பெருக்கின் மாலைப் பொழுதாயினும் அங்கு கூட்டம் நெரித்தது. ஆண், பெண், சிறுவர்கள், மணமானவர்கள், மணமாகாதவர்கள் என்று எல்லோரும் தலை வாழையிலை போட்டு தேங்காய், வெற்றிலைப் பாக்கு, காதோலை, கருகமணி, மஞ்சள் நூல், பழத்தோடுகாவிரியை அவரவர்கள் வழியில் வழிபட்டார்கள். பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நூலை அணிவித்துக்கொண்டார்கள். மாலை நேரக் கதிரவனின் சாய்கதிர்கள் காவிரியில் பட்டு எல்லோர் மீதும் பளபளத்துக்
கொண்டிருந்தது. காலையிலேயே இங்கு வந்திருக்கலாமோ என்ற எண்ணத்துடன் திருவையாற்றிலிருந்து புறப்பட்டோம்

(சுற்றுவோம்...)

x