கனிஷ்காவுக்குக் கவலையென்றால் என்னவென்றே தெரியாது. அழுவதும் சோகமாக முகத்தை வைத்துக்கொள்வதும் அவளுக்குச் சிறு வயதிலிருந்தே பிடிக்காது. நேர் மறை எண்ணங்களாலும் செயல்களாலும் நிரம்பியவள் அவள். அதனால் எப்போதும் நண்பர்கள் சூழ இருப்பாள். அகத்தின் அழகு அவளது முகத்திலும் பிரதிபலித்தது. அதுவும் 14 வயதில் அடியெடுத்து வைத்த பிறகு அந்த அழகு பன்மடங்கானதுபோல் இருந்தது.
திடீர் மவுனம்
எப்போதும் புன்னகை சூடியபடி இருந்தவள்தான் இப்போது தன் குணத்துக்குச் சற்றும் தொடர்பில்லாத வகையில் விசனப்பட்டுக் கிடக்கிறாள். என்னதான் அவள் சிரித்துப்பேச முயன்றாலும் உள்ளுக்குள் கனன்றபடி இருக்கும் சோகம் சிறிதளவாவது முகத்திலும் பேச்சிலும் வெளிப்பட்டுவிடுகிறது. கனிஷ்காவின் நடவடிக்கைகள் பெற்றோருக்குப் புரியாத புதிராக இருந்தன. எதையுமே கேட்பதற்கு முன் சொல்லிவிடுகிறவளிடம் என்னவெனக் கேட்பது என இருவருமே தயங்கினர். அன்று பள்ளியில் இருந்து திரும்பியவள், உடைமாற்ற படுக்கை அறைக்குச் சென்றாள். நீண்ட நேரமாகியும் அவள் வெளியே வராததால் அம்மாவுக்குச் சந்தேகம் வந்தது. கதவைச் சாத்திக்கொண்டு என்ன செய்கிறாள் என யோசித்தாள். ஒரு வேளை வேறு ஏதாவது முடிவெடுத்துவிட்டாளோ எனப் பதறியவர், ஓடி வந்து கதவைத் தட்டினார். சிறிது நேரம் கழித்து கதவைத் திறந்தவள், எதுவுமே பேசவில்லை. பள்ளியில் ஏதும் பிரச்சினையா அல்லது வேறு யாராவது தொந்தரவு தருகிறார்களா என்று அப்பா கேட்டபோது அப்படி எதுவும் இல்லை என்று கனிஷ்கா சொன்னாள். அவளாகவே சொல்வாள் என்று பெற்றோரும் அவளிடம் கேட்பதை நிறுத்திவிட்டனர்.
ஆடையால் தெளிந்த சந்தேகம்
கனிஷ்காவின் பிறந்த நாளுக்கு ஆடை வாங்க அவளைக் கடைக்கு அழைத்துச் சென்றனர். அனார்கலி மாடலில் ஒரு உடையைத் தேர்ந்தெடுத்தவள் அங்கிருந்த விற்பனைப் பெண்ணிடம் எதையோ கேட்டாள். அந்தப் பெண்ணும் அவள் கேட்டபடி வேறொரு ஆடையை எடுத்துத் தந்தார். இரண்டும் ஒரே மாதிரிதான் இருந்தன. மகள் என்ன கேட்டிருப்பாள் என கனிஷ்காவின் அம்மா யோசித்தார். அவள் வேறொரு ஆடையைத் தேடிக்கொண்டிருந்தபோது மகளுக்குத் தெரியாமல் விற்பனைப் பெண்ணிடம் தன் சந்தேகத்தைக் கேட்டார். padded bra போல ஆடையிலேயே வைத்துத் தைத்திருப்பார்கள். அந்த மாடலைத்தான் கனிஷ்கா கேட்டிருக்கிறாள். அவள் தேர்ந்தெடுத்து வைத்த ஆடையை வாங்கிப் பார்த்தார். அந்த ஆடை உள்ளுக்குள் pad வைத்துத் தைக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் கனிஷ்காவின் அம்மாவுக்கு ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. தன் மார்பக வளர்ச்சி குறித்து அவள் கவலைப்படுகிறாளோ என நினைத்தார். கூச்சப்பட்டுக்கொண்டு அதைத் தன்னிடம் சொல்லத் தயங்கியிருக்கக்கூடும் என அவருக்குத் தோன்றியது. என்ன சொல்லி அவளிடம் பேச்சைத் தொடங்கலாம் என யோசித்தவர், ஆடையிலிருந்தே அதைத் தொடங்கிவிட்டார்.
மகளை அழைத்து அவளது ஆடைத் தேர்வைப் புகழ்ந்தார். “என்ன கனி டிரெஸ்ல இப்படி pad வச்சிருக்காங்க? எது இயல்போ அதுதானே ஆரோக்கியம். அதை விட்டுட்டு செயற்கையா இப்படி இல்லாததை இருக்கறதா காட்டுறதால என்ன நடந்துடும்?” என்ற அம்மாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென கனிஷ்காவுக்குப் புரியவில்லை. ஆனால், இதைப் பற்றி ஏராளமான கேள்விகள் இருப்பது அவளது முகத்தில் தெரிந்ததை அம்மா கண்டுகொண்டார். “சரி இப்போதைக்கு இந்த டிரெஸ்ஸையே வாங்கிடுவோம். வீட்டுக்குப் போய் பேசுவோம்” என்று அவளது விருப்பத்தை நிறைவேற்றினார்.
தோழிகளின் கிண்டல்
இரவு உணவுக்குப் பிறகு மகளை அழைத்துக்கொண்டு மாடிக்குச் சென்றார். எட்டாம் வகுப்பு படிக்கும் மகளுக்குப் பருவ வயதின் மாற்றங்கள் குறித்துத் தெரிந்திருக்கும் என அவர் நம்பினார். கனிஷ்கா இன்னும் பருவமடையவில்லை என்றாலும் நிச்சயம் அவளுடைய தோழிகள் மூலமாக இந்நேரம் பலவற்றை அவள் தெரிந்துவைத்திருப்பாள். இருந்தாலும் தன் பங்குக்கு அடிக்கடி சிலவற்றை மகளிடம் சொல்லியபடிதான் இருந்தார். அப்படி இருந்தும் மகளின் மனக்குறையைக் கண்டு பிடிக்காமல் விட்டுவிட்டோமே என்ற வருத்தம் கனிஷ்காவின் அம்மாவுக்கு. மகளிடம் பேச்சைத் தொடங்கினார். “இங்க பாரு கனிஷ்கா. எட்டு வயசுக்கு அப்புறம் ஆண், பெண் ரெண்டு பேரோட உடம்புலயும் நிறைய மாற்றங்கள் ஏற்படும். ஹார்மோன்கள் பத்தி நீ படிச்சிருக்கதானே. சிலருக்கு முதல்ல உயரம் கூடும். அதுக்கு அப்புறம்தான் எடை கூடும்” என்று சொன்ன அம்மாவைக் கேள்வியோடு பார்த்தாள் கனிஷ்கா.
‘இப்ப எதுக்கும்மா இதையெல்லாம் என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க’ என்பது போல இருந்தது அந்தப் பார்வை. “கொஞ்ச நாளா உன்னோட போக்கு சரியில்லை கனிஷ்கா. என்ன கேட்டாலும் எதையும் சொல்ல மாட்டேங்குற. உடல் வளர்ச்சி குறைவா இருக்குறதைப் பத்திதான் நீ கவலைப்படுறேன்னு நினைக்கிறேன்” என்று அம்மா சொல்ல, கனிஷ்கா அழுதுவிட்டாள். மகளின் தோளை ஆதரவாக வருடினார் அம்மா. “நீ சொல்ற எல்லாமே எனக்கும் புரியுதும்மா. ஆனா, ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப கிண்டல் பண்றாங்கம்மா. சிலதை எல்லாம் உங்கக்கிட்டகூட சொல்லவே முடியாதும்மா” என்று சொல்லிவிட்டு அழுகையைத் தொடர்ந்தாள்.
குழந்தையிலிருந்தே ஒல்லியான உடல்வாகுடன் இருந்தாள் கனிஷ்கா. உயரத்துக்கு ஏற்ற எடையுடன் அவள் ஆரோக்கியமாக இருந்ததால் அதைப்பற்றி வீட்டில் யாரும் பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. 14 வயதில் யாருமே எதிர்பார்க்காத திசையில் வந்து நிற்கிறது பிரச்சினை. கனிஷ்காவுக்கு இன்னும் மார்பக வளர்ச்சி தொடங்கவில்லை. அதில் கவலைப்பட ஏதுமில்லை என்று அவளுடைய அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. காரணம், இன்னும் சில மாதங்களில் அது நடந்துவிடும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், குழந்தை தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக்கொண்டு தாழ்வு மனப்
பான்மையிலும் அவமானத்திலும் குன்றியிருக்கிறாள் என்பதை அறிந்தபோது வேதனைப்பட்டார்.
விலகிய திரை
கனிஷ்காவுடன் படிக்கிறவர்களில் பெரும்பாலான குழந்தைகள் சற்றே பருமனானவர்கள். ஒல்லியாக இருந்தவர்களும் எட்டாம் வகுப்பு வந்ததுமே நன்றாக வளர்ந்துவிட்டனர். அவர்களில் சிலர்தான் கனிஷ்காவை மட்டம் தட்டிப் பேசியிருக்கின்றனர். “இவ என்னடி அப்படியே இருக்கா. ஒருவேளை பையனா இருப்பாளோ” என்ற கிண்டல் பேச்சு காதில் விழுந்தபோதுதான் கனிஷ்காவுக்குத் தன் உடல் எடை குறித்த சிந்தனையே வந்திருக்கிறது. அதன் பிறகு அதைப் பற்றியே சிந்திக்கத் தொடங்கினாள். ஏன் தனக்கு மட்டும் மற்ற பெண்களைப் போல மார்பகம் வளர்ச்சிபெறவில்லை என்று வேதனைப்பட்டாள். மார்பக வளர்ச்சி இருந்தால்தான் தன்னை அனைவரும் பெண் என நம்புவார்கள் என்று நினைத்தாள். தினமும் கண்ணாடி முன் நின்றபடி எப்போது தனக்கு மார்பகம் வளரும் என்று அழுதிருக்கிறாள். அதன் விளைவுதான் எப்போதும் சோகத்துடன் இருந்தது.
இந்த விஷயத்தில் தான் என்ன சொன்னாலும் மகள் சமாதானம் அடைய மாட்டாள் என்பது கனிஷ்காவின் அம்மாவுக்குப் புரிந்தது. அதனால் தங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அம்மாவை வெளியே உட்காரச் சொல்லிவிட்டு கனிஷ்காவிடம் பேசினார் மருத்துவர். அவர் பேசப் பேச கனிஷ்காவின் மகிழ்ச்சியை மறைத்திருந்த திரைகள் ஒவ்வொன்றாக விலகின. மருத்துவர் சொன்னவை எல்லாம் கனிஷ்காவுக்கு மட்டும்மல்ல; எல்லாப் பதின் பருவக் குழந்தைகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் பொருந்தும். அதைப் பற்றி அடுத்த இதழில் தெரிந்து கொள்வோம்.
(நிஜம் அறிவோம்...)