கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in
கோவையைச் சேர்ந்த ‘பாட்ஷா’ என்கிற இம்ரான்கானுக்கு ரஜினி என்றால் கொள்ளைப் பிரியம். பள்ளிப் பருவத்திலிருந்தே ரஜினி படமென்றால் முதல் ஷோ பார்க்காமல் தூங்கமாட்டார். 15 வயதில் ‘அமைதிப்புயல் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்’ ஆரம்பித்து, தன் செயல்பாட்டால் இதுவரை ரஜினியை நேரிலும் மூன்று முறை சந்தித்தவர்.
மகன் பாட்ஷா எந்நேரமும் ரஜினி, ரஜினி என்றே இருப்பது குறித்த கவலை பெற்றோருக்கு. 35 வயதாகியும் திருமணத்திற்கு காலந்தாழ்த்தி வந்த பாட்ஷா, சமீபத்தில்தான் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார். கோபியைச் சேர்ந்த பெண்ணை நிக்காஹ் செய்ய முடிவு செய்தார்கள் பெற்றோர்கள்.
என்னதான் உயிரைக் கொடுக்கும் ரசிகனான இருந்தாலும் ரஜினியைத் தனது திருமணத்துக்கு அழைப்பது முடியாத காரியம் என்பதால், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அனைவரையும் தனது திருமணத்துக்கு அழைத்து தடபுடல் செய்ய நினைத்தார் பாட்ஷா. அதற்காக ரசிகர் மன்றத்து நிர்வாகிகளுக்கும் நண்பர்களுக்கும் ஆசை ஆசையாய் திருமண அழைப்பிதழைத் தந்து அழைத்தார். கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியை அணுகி, அவர் தந்த பட்டியலின் படியும் மன்ற நிர்வாகிகள் 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பிதழ்களைத் தந்தார் பாட்ஷா. ஆனால், ஆசையாய் அழைத்தவர்களில் ஒருவர்கூட பாட்ஷாவின் திருமணத்துக்கு வரவில்லை.
அந்த விரக்தியில், ‘ரசிகர் மன்றத்தினரின் வாழ்த்துகளைப் பெறக்கூடவா எனக்குத் தகுதியில்லை?!’ என ரஜினிக்குக் கண்ணீர் கடிதம் எழுதியிருக்கிறார் பாட்ஷா. திருமணம் முடிந்துவிட்டாலும் ரஜினி மன்ற நிர்வாகிகள் தனது திருமணத்திற்கு வராமல் புறக்கணித்த வருத்தத்திலிருந்து இன்னமும் மீளவில்லை பாட்ஷா.