சைஸ் ஜீரோ 17: தாய்மை எனும் பெரும் பேறு


ருஜுதா திவேகர்
readers@kamadenu.in

தாய்மை ஓர் உன்னதமான வலியால் அடையும் பேறு. ஆனால், இந்தியா போன்ற சில நாடுகளில் தாய்மையடைவது தொழிற்சாலை உற்பத்தியைப்போல் பார்க்கப்படுகிறது. திருமணமான 30-வது நாளிலேயே ``என்ன... விசேஷம் ஏதும் உண்டா?’’ என்ற விசாரணைகளுடன் சொந்தங்கள் சூழ்ந்து கொள்கின்றன.

இந்தக் கேள்விக்கு, ஆம் என்று சொல்லிவிட்டால்தான் ஆண்மை நிரூபணமாகும் என்பதுபோல் ஓர் ஆணும், இல்லை என்று சொல்ல நேர்ந்தால் ஏச்சும் பேச்சும் சேருமோ என்ற பதற்றத்தில் பெண்ணும் திருமண நாள் முதலே நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள்.

அவசரம் வேண்டாம்

சூழல் நிர்பந்தத்துக்காக, குழந்தைப் பேறில் அவ்வளவு அவசரப்படத் தேவையில்லை. ஒரு பெண், குழந்தை பெற்றுக்கொள்வதற்கு தாம்பத்ய உறவு மட்டும் முக்கியம் என்று நினைத்தால் இல்லறம் நிச்சயம் தொழிற்சாலைதான். ``இந்தச் சமூகத்தின் முன் உங்கள் திருமணம் நடந்துவிட்டது. நீங்கள் இருவரும் பாலுறவு கொண்டு பிள்ளை பெற்றுக் கொள்ள லைசன்ஸ் கிடைத்துவிட்டது. உடனே பிள்ளையைப் பெற்றுக் கொடுங்கள்’’ என்று கட்டளையிடுவதற்கு சமம் அது.

தாய்மை இப்படி எட்டப்படக்கூடாது. இயல்பாக அரங்கேற வேண்டும். பெண்ணானவள் மனதளவிலும் உடலளவிலும் பிள்ளைப் பேறுக்குத் தயாராக வேண்டும். புரிதலும் காதலும் கூடி, பெண் ஊட்டச்சத்து மிகுந்த உணவை உண்ண ஆரம்பித்து வாழ்வியலை மாற்றிய பின்னர் கருத்தரித்தலே குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் ஆரோக்கியம் சேர்க்கும்.

கர்ப்பத்துக்கு முன் கவனிக்கவும்

ஒருவேளை அமெரிக்கா செல்லப்போகிறோம் என வைத்துக்கொள்ளுங்கள். குறைந்தது ஓராண்டுக்கு முன்னதாகவே விசா வேலைகள் தொடங்கி ஒவ்வொன்றாகக் கவனித்துச் செய்வோம். புதிதாக ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறோம் என்று எடுத்துக்கொள்வோம் அத்தனை மெனக்கிடலுடன் ரெஸ்யூமைத் திரும்பத் திரும்ப செதுக்கி முழு திருப்தி வந்த பின்னரே அதை அனுப்பிவைப்போம். இப்படியெல்லாம் கவனம் செலுத்துவதுபோல் எப்போதாவது பெண்கள் கர்ப்பத்துக்கு முன் உடலை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்களா? இந்தக் கேள்விக்கு எத்தனை சதவீதப் பெண்களால் ஆம் என்று சொல்ல முடியும் எனத் தெரியவில்லை.

ஆனால், கர்ப்பத்துக்கு முன் பெண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆயத்தமாக வேண்டும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் பெண்ணின் முழு சக்தியும் கிரகிக்கப்பட்டுவிடுகிறது. அந்த வேளையில் கூடுதல் ஊட்டச்சத்து இருந்தால் மட்டுமே அவளால் பிரசவத்தை ஆரோக்கியமாகத் தாக்குப்பிடிக்க முடியும்.

இல்லாவிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை தாயின் உடலில் தேங்கியிருக்கும் சத்துக்களை ஒரு ஒட்டுண்ணி உறிவதைப் போல் உறிந்துவிடும். வெறும் கூடாக மட்டுமே தாய் இருக்க நேரிடும்.



சத்து மாத்திரைகளா? சம்பிரதாயங்களா?

சில பெண்கள் கர்ப்பம் தரித்தவுடன் மருத்துவர் தரும் இரும்புச் சத்து, கால்சியம் சத்து மாத்திரைகளை வரப்பிரசாதம் போல் பாவித்து சரியாக உண்பார்கள். தவறில்லை. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால், அது உண்மையிலேயே சத்து சேர்க்கும் மாத்திரைகளாக இருக்க வேண்டும். வெறும் அடையாளமாக இருந்துவிடக் கூடாது. அதற்கு கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் இருந்தே சமச்சீரான சத்தான சரியான இடைவெளியில் உணவு உண்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மூலம் உங்கள் உடலுக்கு கார்போஹைட்ரேட்ஸும், புரதமும், கொழுப்பும் பெறப்பட்டால் நீங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ளும் சத்து மாத்திரைகள் மாயாஜாலம் போல் வேலை செய்யும். இல்லையேல் அவை வெறும் சம்பிரதாயமே.

உடல் எடையும் கர்ப்பமும்

கர்ப்பம் தரிக்க தாமதமாகிறது என்று மருத்துவரிடம் சென்றால் அவர் முதலில் பரிந்துரைப்பது உடல் எடைக் குறைப்பு. ஆனால், இந்த உத்தரவில் உள்ள அர்த்தத்தைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். எடையைக் குறைக்கிறேன் என்று க்ராஷ் டயட் சென்று, இருக்கும் சத்துக்களை எல்லாம் இழந்து நிற்கக்கூடாது.

முதலில் டீ, காபியை நிறுத்துங்கள். புகைக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதை விட்டொழியுங்கள். பின்னர் நான் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ள 4 உணவுக் கொள்கைகளைப் பின்பற்றி உணவைத் திடமிடுங்கள். இயல்பாக உடல் எடைக் குறைப்பு நடக்கும். சீரான உணவுப்பழக்கங்களால் ஹார்மோன்கள் அளவு சீரடையும். அப்போது கர்ப்பம் தரிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உடல் அளவில் உருவாகும்.

கர்ப்ப கால உணவு: சில டிப்ஸ்

1.    காலை எழுந்த 10 நிமிடங்களில் ஏதாவது ஒரு பழம். அத்துடன் ஒரு கையளவு உலர்ந்த பழங்கள் சாப்பிடவும்.
2.    அதிலிருந்து சரியாக ஒரு மணி நேரத்தில், காலை உணவுக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை எடுத்துக்கொள்ளுங்கள். பிரெட், பிஸ்கெட், ஊறுகாய், சாஸ் வகைகள் கூடவே கூடாது.
3.    காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் மதிய உணவை முடித்துவிடுங்கள். அதற்கு மேல் தள்ளிப்போடவே கூடாது.
4.    மதிய உணவில் காய்கறிகள், பருப்பு, அரிசி சாதம் இருக்கட்டும். இல்லாவிட்டால் முழு கோதுமை, கம்பு, சோளம்கூட சாப்பிடலாம்.
5.    மதிய உணவு முடித்து இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் மோர் குடிக்கலாம். உப்போ, சர்க்கரையோ சேர்க்காமல் அருந்துவது நலம். தேவையானால் ஜீரகமோ அல்லது மிளகோ சேர்த்துக் கொள்ளலாம்.
6.    ஒருநாளைக்கு ஒரு வேளைக்கு மேல் காபியோ டீயோ கூடாது. அதுவும் வீட்டில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் மட்டுமே அனுமதி.
7.    பாலாடைக் கட்டி, பனீர், பீநட் பட்டர், வெள்ளை வெண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றில் சிறிதளவு மாலை 6 மணியளவில் இருந்து 7 மணிக்குள் எடுத்துக் கொள்ளவும்.
8.    இரவு 9 மணிக்குள், ஒரு கப் வேக வைத்த காய்கறிகள் சாப்பிடவும்.
9.    பகல் நேரத்தில் எவ்வளவு தூரம் சுறுசுறுப்பாக இயங்க முடியுமோ அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்கலாம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்க்கவும்.
10.    கர்ப்ப காலம் முழுவதுமே அதிகமாக தண்ணீர் அருந்துவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.
11.    வைட்டமின் மற்றும் மினரல் தேவைகளுக்காக வழங்கப்படும் மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ளுங்கள்.

இப்படி உணவுமுறையை நெறிப்படுத்தாமல், இரண்டு உயிர்களுக்காக சாப்பிடுகிறேன். குழந்தைக்காக சாக்லேட் கேக் சாப்பிடுகிறேன். மசக்கைக்காக ஊறுகாய் சாப்பிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு கண்டதையும் உண்பது உங்கள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதற்கான அடையாளமே தவிர இயல்பானது அல்ல. டயட்டை வாழ்வியல் முறையாக பழகிக்கொண்டிருந்தீர்கள் என்றால், கர்ப்ப காலத்தில் இதுபோன்ற அசாதாரண உணவு விருப்பங்கள் உண்டாகாது.

குழந்தைக்காக மட்டுமே அல்ல

தாம்பத்ய உறவு, சந்ததிகளை உருவாக்குவதற்காக என்றாலும்கூட அதையும் கடந்து இரண்டு மனங்களுக்கு இடையேயான காதலின் சாட்சியாக இறுதி வரை அது இருக்க வேண்டும். எனவே, கர்ப்ப காலத்துக்குப் பின்னரும்கூட தாம்பத்யம் இனிக்க வேண்டும் என்றால் அது கர்ப்ப காலத்துக்கு முன்னதாகவும் கடமையாக இல்லாமல், குழந்தை எனும் முடிவைப் பெறுவதற்கான முயற்சியாக மட்டும் இல்லாமல் மனங்களின் ஐக்கியமாக இருந்திருக்க வேண்டும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் குடும்ப உறவுகளின் நிலையும் பெண் உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தாம்பத்யம் மனம் உவந்து உடல் கரைந்து மீட்டப்படும் நாதமாக இருக்கட்டும்.

மகப்பேறுக்குப் பின்னர் கடைப்பிடிக்க வேண்டியவை:

கிரிக்கெட் உலகின் கடவுள் என்றழைக்கப்பட்ட காலத்தில்கூட சச்சினுக்கு சில போட்டிகளில் இருந்தோ இல்லை சில தொடர்களில் இருந்தோ விலக்கு அளிக்கப்பட்டது. ஏன் தெரியுமா? அவரது அந்தப் பெயர் என்றும் நிலைக்க வேண்டும் என்றால் சீரான ஓய்வு தேவை என்பதற்காக.

அதைப்போலத்தான் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்றால் தாய்க்கு சரியான ஓய்வும் பராமரிப்பும் தேவை. பாரம்பரியமாக வீட்டில் செய்யப்படும் மகப்பேறுக்கு பிந்தைய மசாஜ்களை மேற்கொள்ளலாம். அப்போது நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆனால், அவை எல்லாம் ஒவ்வாமை ஏற்படுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல், குழந்தை பிறந்த பின்னர் 40 நாட்களுக்கு கணவர் வீட்டுக்கு வரவே கூடாது என்றெல்லாம் எந்த விதிமுறையும் இல்லை. பெரும்பாலும் பெண்களுக்கு தாய் வீட்டில் அதிகளவில் ஓய்வு கிடைக்கும் என்பதால் அவ்வாறு சொல்லப்படுகிறது. ஒருவேளை புகுந்த வீடுதான் உங்களுக்கு சவுகரியமான இடம் என்றால் குழந்தை பெற்ற கையுடன் அங்கு செல்லலாம். குழந்தை பேறுக்குப் பிந்தைய மன நலமே சிறந்த உடல் நலத்தை நல்கும். எங்கிருந்தால் உங்கள் உடலுக்கு ஓய்வும் உள்ளத்துக்கு புத்துணர்ச்சியும் கிடைக்குமோ அங்கேயே இருங்கள்.

அப்புறம், எதைச் சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது? என்ற குழப்பம் நிறையவே ஏற்படும். குழந்தைப் பேறுக்குப் பின்னால் அதீததமான கலோரிகள் தேவைப்படும் என்பதால் சற்றும் தயங்காமல் சாப்பிடுங்கள். ஆனால், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுங்கள். இந்தக் காலத்தில் டயட் என்று எதையும் நீங்கள் பின்பற்றத் தேவையில்லை. அது உங்களைச் சோர்வில் ஆழ்த்திவிடும். ஆனால், பொறுப்புணர்ச்சியுடன் சாப்பிடுங்கள். இது குழந்தைக்கான பால் சுரப்பை சீராக்கி பாலூட்டுவதையும் எளிமையாக்கும்.

பேறுகாலமும் உடல் எடையும்

பேறுகாலத்திற்குப் பின்னர் எப்போது உடல் எடை குறையும் என்பதுதான் பெரும்பாலான இளம் தாய்மார்களின் முதல் கவலையாக இருக்கும். குழந்தைப் பேறுக்குப் பின்னர் தாய்ப்பால் புகட்டுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இதனால், உடல் எடை சற்று அதிகமாகத்தான் இருக்கச் செய்யும். தாய்ப்பால் நிறுத்திய பின்னர் முதல் மாதவிடாயைப் பெற்றதிலிருந்து உடல் எடை குறையத் தொடங்கும். அதுவரை இருக்கும் இயல்பான பருமனை ரசியுங்கள். அதுவும் ஓர் அழகுதான். தாய்மை மிளிரும் அழகு.

மகப்பேறின் போது எலும்பின் அடர்த்தி குறைகிறது. கால்சியம், குரோமியம், இரும்புச் சத்து ஆகியன அதிகளவில் குறைகின்றன. எனவே, மகப்பேறுக்குப் பின்னர் நீங்கள் பழகும் டயட்டும் நீங்கள் பின்பற்றும் உடற்பயிற்சிகளும் உங்களது லீன் பாடி வெயிட் எனப்படும் உடலில் உள்ள கொழுப்பின் அளவுக்கும் மொத்த உடல் எடைக்கும் இடையேயான விகிதாச்சாரத்தை சீராக வைக்க உதவும் வகையில் அமைய வேண்டும்.

மகப்பேறுக்குப் பிந்தைய உணவுக்கான மாதிரி சார்ட்

நான் ஏற்கெனவே கூறியதுபோல் மகப்பேறுக்குப் பின் உடல் இழந்த ஊட்டச்சத்தையெல்லாம் திரும்பப் பெற அதிக கவனத்துடன் உணவை உட்கொள்ள வேண்டும். அதன்படி எனது க்ளையன்ட் ஒருவருக்காக நான் தயாரித்த மாதிரி அட்டவணையைப் பகிர்கிறேன். அவர் வட இந்தியர் என்பதால் அவரது பழக்கத்துக்கு ஏற்ப இந்த அட்டவணை இருக்கும்.

காலை 7 மணி    ப்ரோட்டீன் ஷேக்
காலை 8 மணி    2 முட்டைகளின் வெள்ளைக்கருவுடன் இரண்டு ஸ்லைஸ் டோஸ்ட்
காலை 10 மணி    பழ ருசி கொண்ட தயிர்
மதியம் 12 மணி    சாதம். மீன் குழம்பு கொஞ்சம் காய்கறி
மதியம் 2 மணி    கொஞ்சம் வேர்க்கடலை
மாலை 4 மணி    வெஜ் சாண்ட்விச்
மாலை 8 மணி    ஆலிவ்கள் சேர்க்கப்பட்ட காய்கறி சூப்
இரவு 10 மணி      அரைக் கரண்டி புரதப் பவுடர் சேர்க்கப்பட்ட பானம்.

இந்த க்ளையன்டுக்கு பி6, பி12 மற்றும் ஒமேகா ஃபேட்டி ஆசிட்ஸ் மற்றும் வைட்டமின்கள் ஏ,சி,இ ஆகியனவற்றின் தேவை இருந்ததாலும் அவர் தாய்ப்பால் புகட்டியதால் அதற்கேற்ற ஊட்டச்சத்து தேவைப்பட்டதாலும் அவருக்கு இந்த டயட் பரிந்துரைக்கப்பட்டது. ஒவ்வொரு இளம் பெண்ணும் அவரது உடல்வாகுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படும் டயட்டை பின்பற்ற வேண்டியது முக்கியம்.

(டயட் நீளும்...)

x