இதையெல்லாம் குழந்தைகளிடம் சொல்லாதீங்க..!


பி.எம்.சுதிர்
sudhir.pm@thehindutamil.co.in

 

பேசுவது என்பது தனிக் கலை. பொது இடங்களில் மட்டுமல்ல, வீட்டில்கூட நாம் பேசும்போது, அது சரியாக இருக்குமா என்று யோசித்தே பேசவேண்டும். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளிடம் வார்த்தைகளை யோசித்துப்  பேச வேண்டும். நாம் பேசும் ஒருசில வார்த்தைகள் அவர்களைக் காயப்படுத்தவோ, மனநிலையைப் பாதிக்கவோ வாய்ப்பு உண்டு. அதனால் ஒரு சில விஷயங்களைக் குழந்தைகளிடம் நாம் சொல்லாமல் இருப்பது நல்லது. அப்படிச் சொல்லக்கூடாத வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

‘எனக்கு உன் மீது நம்பிக்கை இல்லை’

குழந்தைகள் ஏதாவது தவறு செய்தாலோ, தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினாலோ உடனடியாக சில பெற்றோர்கள் அவர்களைப் பார்த்து, “எங்களுக்கு உன் மீது நம்பிக்கை இல்லை, நீ எங்களை ஏமாற்றிவிட்டாய்” என்பதைப் போன்ற வார்த்தைகளைக் கொட்டிவிடுவார்கள். பெற்றோரைப் பொறுத்தவரை அது குழந்தைகள் மீதான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் சாதாரண சொற்களாக இருக்கலாம். ஆனால், குழந்தைகளுக்கோ அவர்களின் தன்னம்பிக்கையை அதிரடியாகத் தகர்க்கும் வார்த்தைகள் இவை.


எந்தக் குழந்தையும் தன்னம்பிக்கையுடன் வளரவேண்டும் என்றால், அவர்களைப் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களை நம்புகிறார்கள் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் இருந்தால்தான் அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். மாறாகத் தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று பெற்றோர்களே தெரிவித்தால் குழந்தைகள் மனதளவில் நொறுங்கிப் போய்விடுவார்கள். இதனால் அவர்களின் முன்னேற்றம் தடைபடும். எனவே, எந்தக் காலகட்டத்திலும் அவர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.

x