மானா பாஸ்கரன்
baskaran.m@thehindutamil.co.in
சென்னையைச் சேர்ந்த ஆசியரான பொற்கொடி பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். ‘கவுதம் மேனன் - திரைக்கதை போட்டி', ‘பிரபஞ்சன் கதைப் போட்டி'களில் பரிசு பெற்றவர். இவரது ‘வானம் விட்டு வாராயோ’ நாவல் பலரால் பாராட்டப்பட்டு விருதுகளையும் வென்றது. இவருக்குப் பிடித்தவை பத்து இங்கே...
ஆளுமை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தான் பணியாற்றும் களத்தில் 100 சதவீத உழைப்பைத் தந்து படிப்பிலும், நடிப்பிலும், ஆட்சியிலும் முதன்மை பெற்றவர். அச்சமின்மையின் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர். தைரிய லட்சுமி!
கதை: வி.எஸ்.காண்டேகரின் ‘சுவர்', சுஜாதாவின் ‘பெண்', ‘நிறமற்ற வானவில்'. பாலகுமாரனின் ‘மெர்குரி பூக்கள்', வாஸந்தியின் மனோதத்துவ எழுத்து, ரமணிசந்திரனின் காதல் கதைகள், அனுராதாரமணனின் எமோஷனல் எழுத்துகள்.
கவிதை: `சிதையா நெஞ்சு கொள்' என நிமிர்வை ஊட்டிய பாரதியின் கவிதைகள் அனைத்தும்.
இடம்: புத்தகங்கள் குவிந்திருக்கும் எல்லா இடமும், அது நடைபாதையாக இருந்தாலும்கூட!
நபர்: என் தாய் ரத்னா. 6 பெண்களைப் பெற்று, நல்வழியில் வளர்த்து ஆளாக்கி, 6 மருமகன்களைப் போற்றி, 6 சம்பந்தி வீட்டினரைப் பாராட்டிச் சீராட்டி, ஓய்வெடுக்க வேண்டிய வயதில், நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட கணவரை, குழந்தையைப் போல் பார்த்துக்கொள்ளும் அயராது உழைக்கும் இரும்புப் பெண்மணி; அன்பின் உறைவிடம்.