கண் துஞ்சாது கடமையாற்ற வேண்டும்!


ஜா புயலின் அகோரத் தாண்டவத்தால் டெல்டா கிராமங்கள் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டன. புயல் கொண்ட தங்களது வாழ்வாதாரங்களை எப்படி மீண்டும் கட்டமைக்கப் போகிறோம் என்ற கவலையே டெல்டா மக்களின் உயிரை உருக்கிக் கொண்டிருக்கிறது.

புயல் தாக்கத்தின் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க அரசும் அதிகாரிகளும் ஆங்காங்கே நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். என்றாலும், தங்களை யாருமே வந்து பார்க்கவில்லையே என்ற ஆவேசக் குரல்களும் ஆங்காங்கே எதிரொலிக்கத்தான் செய்கின்றன. அமைச்சர்கள் சொல்வது போல், அனைத்தையும் ஒரே மூச்சில் சரிசெய்துவிட முடியாதுதான் என்றாலும், பள்ளிகளிலும் முகாம்களிலும் பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ உதவிகளைத்தாமதிக்காமல் செய்ய வேண்டியது அரசின் கடமை. இதில் எந்தச் சாக்குப் போக்கும் சொல்லக் கூடாது. ஏதோ பெயரளவுக்குக் கடமையாற்றினோம் என்றிருக்காமல் அமைச்சர்கள் இந்த விஷயத்தில் கண் துஞ்சாது கடமையாற்ற வேண்டும். அப்போதுதான் ஆட்சிக்கு எதிரான அவச் சொற்களைத் துடைத்தெறிய முடியும்.

புயல் நிவாரணப் பணிகளுக்காக முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது தமிழக அரசு. நிவாரணப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல் முறையாக செலவுசெய்து, பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது.

அதேசமயம், நிவாரணப் பணிகளுக்காக 16,341 கோடி ரூபாயைத் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் முதல்வர். முந்தைய  பேரிடர் காலங்களில் தமிழக அரசு கோரிய நிவாரணத் தொகையில் 10 சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு வழங்கியிருக்கிறது.  அப்படியில்லாமல் பாதிப்பின் வீரியத்தை உணர்ந்து  தமிழக அரசுக்குத் தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது. 
 

x