நீரோடிய காலம் 8: காவிரியின் வலது பக்க நுரையீரல்


காவிரியையும் காவிரி மண்ணையும் பார்க்க வேண்டுமென்றால் ஆடிப்பெருக்கு அன்று பார்க்க வேண்டும் என்பார்கள். ஆடிப்பெருக்குக்கு முந்தைய நாள் திருவாரூரிலிருந்து புறப்பட்டு காவிரிப் பாசனப் பரப்பில் ஒரு குறுக்குவெட்டுப் பயணத்தை மேற்கொண்டு, கொள்ளிடம் கடலில் கலக்கும் இடம்வரை சென்றுவிட்டு வந்தோம். அதாவது திருவாரூரிலிருந்து வடகிழக்குப் பயணம். ஆடிப்பெருக்கு அன்று எனது பயணத் திசை திருவாரூரிலிருந்து மேற்கு.



மன்னார்குடிக்கு அருகில் கோரையாற்றங்கரையில் உள்ள தெற்குப் படுகை என்னும் கிராமத்திலிருந்து பேராசிரியர் தங்க.ஜெயராமனுடன் என் பயணத்தைத் தொடங்கினேன். அங்கு ஓடும் கோரையாறு, அரிச்சந்திரா நதி, முள்ளியாறு, ஐயனாறு, மன்னார்குடியில் ஓடும் பாமணியாறு என்று ஆறுகளின் அணிவகுப்பைக் கடந்து தஞ்சாவூர் போகும் சாலைக்கு வந்துவிட்டோம். அடுத்ததாக வடுவூர் வழியாக ஓடும் வடவாறு. தென்பெரம்பூரில் வெண்ணாற்றிலிருந்து பிரியும் இந்த ஆறுதான் காவிரிப் பாசனத்தின் பழைய நஞ்சைக்கு மேற்கு எல்லை. அதை அடுத்து புது நஞ்சையை உருவாக்கிய ஜி.ஏ. கனால் (கல்லணைக் கால்வாய்) என்று அழைக்கப்படும் புதாறு.

தஞ்சைப் பகுதியின் முக்கியமான ஏரிகளுள் ஒன்றான வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமும் கூட. தண்ணீர் வந்து ஏரி நிரம்பத் தொடங்கியிருந்ததால் வெளிநாட்டுப் பறவைகள் அப்போதுதான் வரத்தொடங்கியிருந்தன. வடுவூரையும் கடந்து அரை மணி நேரத்தில் தஞ்சாவூர் வந்தது. தஞ்சை நகருக்குள் செல்லாமல் கிழக்குப் புறமாக புறவழிச்சாலையில் சென்று பள்ளியக்ரஹாரம் வழியாக ஓடிக்கொண்டிருக்கும் வெண்ணாற்றின் வடகரையில் ஏறினோம். அங்கிருந்து கரையிலேயே பயணித்து வெண்ணாற்றிலிருந்து வெட்டாறும் வடவாறும் பிரியும் தென்பெரம்பூருக்குச் செல்வதாகத் திட்டம். பிறகு, சற்று வடமேற்காகப் பயணித்து காவிரியிலிருந்து குடமுருட்டி பிரியும் திருக்காட்டுப்பள்ளி; அங்கிருந்து இன்னும் மேற்காகப் பயணித்து கல்லணை; கல்லணையை முடித்துவிட்டுத் திரும்பும்போது ஆடிப்பெருக்குக்குப் புகழ்பெற்ற திருவையாற்றின் புஷ்யமண்டபப் படித்துறையைப் பார்ப்பது; இதுதான் திட்டம்.


வெண்ணாற்றின் வடகரை வழியாகக் கார் நுழைந்தது. பள்ளியக்ரஹாரம் வரைக்கும் சாலை கொஞ்சம் பரவாயில்லை. ஆனால், அதற்குப் பிறகு ஒரு கார் அகலத்துக்கும் சற்று அதிகமாகத்தான் அந்தக் கரைவழிச் சாலை இருந்தது. அதிலும் இரண்டு பக்கங்களும் சீமைக் கருவேல மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்திருந்ததால் அந்தச் சாலை வழியே செல்வதே ஒரு கரும்பச்சைக் குகை வழியாகச் செல்வதுபோல்தான் இருந்தது. இடது பக்கம் தளுக்குச் சிரிப்புடன் குடத்தில் தண்ணீர் அள்ளிச் செல்லும் பெண்போல நிறைந்து ஓடிக்கொண்டிருந்தது வெண்ணாறு. வலது பக்கம் கொஞ்ச தூரம் போனால் வெட்டாறும் அப்படியேதான். வெண்ணாற்றிலும் வெட்டாற்றிலும் தண்ணீர் ஓடுவது தற்போதைய யதார்த்தம். அதற்கும் முன்பு பல ஆண்டுகளாகக் காவிரிப் பிரச்சினையாலும் இயற்கை பொய்த்ததாலும் அந்தப் பகுதி ஆற்றுப் பாலைவனம்போல்தான் இருந்திருக்கும். அதனால்தான் தண்ணீருக்கு நடுவிலும் இவ்வளவு வறட்சியான தோற்றம்.

இடையே ஒரு இடத்தில் இறங்கி வெண்ணாற்றில் கால் நனைத்தோம். அங்கே நிறைய பேர் குளித்துக்கொண்டிருந்தார்கள். அப்புறம் கொஞ்ச பேர் கரையில் குடித்துக்கொண்டும் இருந்தார்கள். இதுவும் தஞ்சையின் யதார்த்தம்தான். தஞ்சையின் குடிகாரர்கள் அந்தக் கால ஜமீன்தார்களின் நேரடி வாரிசுபோல் மைனர் வாழ்க்கை வாழ்பவர்கள். ஏ.சி. பார்களைவிட சொகுசான, இயற்கையான ஆற்றங்கரை, பாலக்கட்டை, கரையோரத் தோப்பு என்று சுகவாசியாக டாஸ்மாக்கை வாழ வைத்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த இடத்தில் ஆற்றின் போக்கில் குறுக்கே படுக்கையணை (bed dam) கட்டியிருந்ததால் தண்ணீர் சற்று அருவி மாதிரி விழுந்து ஓடியது. அந்தச் சத்தமே அலாதியாக இருந்தது. அங்கிருந்து மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தோம். கொஞ்ச தூரத்தில் தண்ணீர் விழும் சத்தம்போலவே ஏதோ கேட்டது. ஓட்டுநரை நிறுத்தச் சொன்னேன். அது சில்வண்டுகளின் சத்தம். ஒரே மாதிரியாகவும் அதே சமயத்தில் நிறைய உள் இழைவுகள் கொண்டதாகவும் இருந்தது அந்தச் சத்தம்.
“காவிரிப் பிரதேசத்தோட சத்தங்களைப் பத்தி மட்டும் தனியாக நிறைய எழுதலாம். அவ்வளவு வகைகள் உண்டு. நிலப்பரப்பு ஓவியம், கடற்பரப்பு ஓவியம் போன்று காவிரிக்கு ஒலிபரப்பு ஓவியம் ஒன்றை அதன் சத்தங்களைப் பதிவுசெய்வதன் மூலம் உருவாக்கினால் அழகாக இருக்கும். இங்குள்ள எல்லா சத்தமுமே ஏதோ ஒரு வகையில காவிரியோட சத்தம். காவிரி சலங்கை கட்டி நடக்கிற சத்தம். காவிரி நடக்காம கிடந்தாலும் அதும் சத்தம்தான். காவிரிக் கரையில வீடு உள்ள ஒவ்வொருத்தருக்கும் பயிர்கள் மூலமாவும் இந்தச் சத்தங்கள் மூலமாவும்தான் காவிரி உயிர் கொடுக்குறா. ஒரு வாழ்நாளையே இந்தச் சத்தங்களைக் கேட்டுட்டுக் கடத்திடலாம்” என்று சிலாகித்தார் தங்க.ஜெயராமன்.



கொஞ்ச தூரம் கடந்திருப்போம். திரண்டு ஓடும் வெண்ணாற்றின் நடுவே சில மாட்டுவண்டிகள். “அடப் பாவமே, பாலம் இல்லாததால் குறுக்கே இப்படிக் கடக்கிறார்கள் போல்” என்று நினைத்துக்கொண்டு இன்னும் கொஞ்சம் கண்ணை இடுக்கிக்கொண்டு பார்த்தபோதுதான் அவர்கள் மணல் அள்ளிக்கொண்டிருப்பது தெரிந்தது. நாம் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து சத்தம் போட்டார்கள். ‘உசுரோட ஊருக்குப் போகணும்’ என்கிற ஆசையில் கார் ஓட்டுநர் வண்டியைக் கிளப்பிப் பின்னம்டயர் பிடரியில் அடிக்க ஓட்டினார்.

கொஞ்ச தூரத்தில் அந்தக் குறுகலான கருவேலங் குகைவழிச் சாலையின் நடுவே, மதியம் சரியாக ஒரு மணி ஆகும் அந்த நேரத்தில், இரண்டு பேர் பைக்கை நிறுத்திவிட்டு இந்திரலோகத்தார்போல் சோம பானம் அருந்திக்கொண்டிருந்தார்கள். அருகே மிக்சர், தண்ணீர் பாக்கெட்டுகள் எல்லாம் இரைந்து கிடந்தன. காரைப் பார்த்ததும் சாவதானமாக எழுந்து நகர்ந்து, நகர்த்திக்கொண்டு, நாங்கள் அகன்றதும் மறுபடியும் கச்சேரியைத் தொடர்ந்தனர். காவிரியின் நிலப்பரப்பை சத்தங்களால் மட்டுமல்ல யூஸ் அண்ட் த்ரோ கப்புகளாலும் இன்று அளந்துவிடலாம் என்று எனக்குத் தோன்றியது.



தென்பெரம்பூரை நெருங்கிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு இடப் பக்கம் வெண்ணாறும் வலப்பக்கம் வெட்டாறும் நெருங்கி ஓடிக்கொண்டிருந்தன. நடுவே நாங்கள் வந்த பாதை. எங்கள் பாதைக்கும் வெட்டாற்றுக்கும் நடுவே நிறைய செங்கல் சூளைகளை வரிசையாகப் பார்க்க முடிந்தது. காவிரி பொய்த்ததன் அடையாளம் அது. அருகிலுள்ள கிராம மக்களோ, வேறு மாவட்டங்களிலிருந்து பிழைக்க வந்த மக்களோ அவற்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். கிட்டத்
தட்ட கொத்தடிமை வாழ்க்கைதான். தங்க.ஜெயராமன் சொல்வதுபோல் காவிரிக் கரையில் ஒரு வாழ்நாளைக் கழித்தோமென்றால் இந்த யதார்த்தங்களையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டுமெனத் தோன்றியது.
தென்பெரம்பூர் வந்தாயிற்று. வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினோம். வெண்ணாற்றுக்கு இரண்டு கைகள்போல வடவாறும் வெட்டாறும் பிரிய நடுவே கட்டுமஸ்தான உடலுடன் வெண்ணாறு ஓடத் தொடங்கும் இடம் அது. ராஜேந்திரன் கால்வாய், ஜம்புக காவேரி என்று இரண்டு கால்வாய்களும் அங்கிருந்து பிரிகின்றன. ஜம்புக காவேரியைக் காக்காய் காவேரி என்றும் அழைப்பார்களாம்.

ரெகுலேட்டருக்கு முன்பு ஒற்றைப் பேருருவாய் வெண்ணாறு வந்துகொண்டிருந்தது. காவிரியுடன் போட்டிப் போட தமிழ்நாட்டில் அதன் பிள்ளையான வெண்ணாற்றால்தான் முடியும்போல.

அவ்வளவு தண்ணீர்ப் பரப்பிலும் ஆடிப்பெருக்குக்குரிய மக்கள் உற்சாகத்தைக் காண முடியவில்லை. கொஞ்ச தூரத்தில் காவிரி ஓடுவதால் அங்குதான் நிறைய மக்கள் சென்றிருப்பார்கள் என்று அங்குள்ளவர்கள் கூறினார்கள். மேலும், நாம் சென்றது மதிய வேளை என்பதால் காலையிலேயே புதுமணத் தம்பதிகள் வந்து தாலிப்பெருக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.

அங்கிருந்து வெண்ணாறும் அதன் கிளை ஆறுகளும் கால்வாய்களும் எவ்வளவு பரப்புக்குப் பாசனம் தருகின்றன என்ற தகவல் அடங்கிய கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது.

வெட்டாறு 1,00,575 ஏக்கர், வெண்ணாறு 2,81,601 ஏக்கர், புது வடவாறு 43,091 ஏக்கர், பழைய வடவாறு 14,959 ஏக்கர், ராஜேந்திரன் கால்வாய், ஜம்புக காவேரி ஆகிய கால்வாய்கள் முறையே 1,492 ஏக்கர், 6,300 ஏக்கர் ஆயக்கட்டுக்குப் பாசனம் தருகின்றன. பழைய வடவாற்றில் இப்போது பாசனம் இல்லை. காவிரிப் படுகையின் வலது பக்க நுரையீரல் என்று அந்த இடத்தைச் சொல்ல வேண்டும். என்றாலும் அருகிலுள்ள ஊர்களில் போதுமான அளவு பசுமை இல்லை என்றே தோன்றியது. எப்போதாவது காவிரி தலையைக் காட்டுவதால் வந்த வினை இது.

ஆடிப்பெருக்கின் உற்சாகமான கேந்திரங்களான திருக்காட்டுப்பள்ளியும் கல்லணையும் அழைப்பதால் தென்பெரம்பூருக்குப் பிரியாவிடை கூறிப் புறப்பட்டோம்.

(சுற்றுவோம்...)

x