பதறும் பதினாறு 17: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!


ஆண் குழந்தைகள் எள் முனையளவு வளர்ந் தால் பெண் பிள்ளைகள் நெல் முனையளவு வளர்வார்கள் என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். “என்ன இந்தப் பொண்ணு பிச்சக்காய் மாதிரி பெருக்குது” என்றும் சொல்வார்கள். வட தமிழக கிராமங்களில் விளையும் ஒருவகைக் காய் பிச்சக் காய். இன்று காலை அந்தக் காயைப் பார்த்துவிட்டு மறுநாள் பார்க்கும்போது பருத்துவிட்டிருக்கும். ஒரே இரவில் அபரிமிதமாக வளர்ந்துவிடும். அந்த அளவுக்குப் பெண் குழந்தைகளின்  வளர்ச்சி இருக்கும் எனச் சொல்வார்கள்.

தேவையில்லை ஒப்பீடு

பருவ வயதில் இருபாலருக்கும் வேகமான வளர்ச்சி இருக்கும் என்றாலும் ஆண்களைவிடப் பெண்களுக்குப் பருவ வளர்ச்சி விரைவாகத் தொடங்கிவிடும்.

உடலின் உள்ளும் புறமும் ஏற்படும் மாற்றங்கள், இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி போன்றவை பருவமடைதலின் அங்கங்கள். பருவமடைவது என்பது இயற்கையான, ஆரோக்கியமான நிகழ்வு. இது பொதுவாகப் பெண்களுக்கு 10 முதல் 11 வயதிலும் ஆண்களுக்கு 11 முதல் 13 வயதிலும் தொடங்கும். வாழ்க்கை முறை மாற்றத்தால் இப்போது பருவ வளர்ச்சி விரைவாகவே தொடங்கிவிடுகிறது. பெண்களுக்கு எட்டு வயதிலும் ஆண்களுக்கு ஒன்பது வயதிலும் பருவ மாற்றம் ஏற்படத் தொடங்கும். இதில் அச்சப்படவோ பதற்றப்படவோ ஏதுமில்லை. சிலருக்குப் பருவ வளர்ச்சி 18 மாதங்களில் நிறைவுபெறலாம். சிலருக்கு இது ஐந்து ஆண்டுகள் வரை நீளலாம். தவிர, ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் தனித்துவமானது என்பதால் இதில் ஒப்பீடு தேவையில்லாதது.

தூண்டிவிடும் ஹார்மோன்கள்

குறிப்பிட்ட பருவம் தொடங்கியதும் ஆண், பெண் இருவருக்கும் மூளையின் தூண்டுதலில் முக்கியமான சில ஹார்மோன்கள் சுரக்கும். அவை பருவ வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வேலையைச் செய்யும். வியர்வைச் சுரப்பி, எண்ணெய்ச் சுரப்பி ஆகியவற்றை விரைந்து செயல்பட இவை தூண்டும். அதனால்தான் பருவ வயதில் சிலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றும்; வியர்வை நாற்றம் ஏற்படும். பருவ வயதில் சுரக்கும் ஹார்மோன்களில் முக்கியமானது எஃப்.எஸ்.ஹெச் (Follicle Stimulating Hormone) எனப்படும் தூண்டல் ஹார்மோன். பெண்களில் இந்த ஹார்மோன் சினைப்பையைத் தூண்டிவிட்டு, பெண்களுக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனைச் சுரக்கச்செய்யும். கருமுட்டை உற்பத்தியையும் ஊக்குவிக்கும். ஆண்களில் இந்தத் தூண்டல் ஹார்மோன், விதைகளைத் தூண்டிவிட்டு ஆண்களுக்கான ஹார்மோனான டெஸ்ட்டோஸ்டீரானைச் சுரக்கச் செய்வதுடன் விந்து சுரப்பைத் துரிதப்படுத்தும். இவையெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாத மாற்றங்கள்.

மாற்றங்கள் நல்லது

ஹார்மோன்கள் சுரப்பதன் தொடர்ச்சியாக நம் கண்களுக்குப் புலப்படும் வகையில் சில மாற்றங்களும் நடக்கும். ஆண், பெண் இருபாலருக்கும் உயரம் அதிகரிக்கும், எடை கூடும். கைகளுக்கு கீழும் மறைவிடங்களிலும் ரோமம் வளரும்.
ஆண்களுக்கு முகத்தில் மீசையும் தாடியும் அரும்பும். விதைப்பை விரிவடைந்து விதைகள் பெருப்பதுடன் ஆணின் இனப்பெருக்க உறுப்பும் வளரும். சிலருக்கு இரண்டு விதைகளும் ஒரே சீராக வளராது. ஒன்று பெரிதாகவும் மற்றொன்று சிறியதாகவும் இருக்கக்கூடும். இது இயல்பானது. இதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், இதற்காகத்தான் அகிலேஷ் கவலைப்பட்டுக்கொண்டு யாரிடமும் பேசாமல் மன உளைச்சலில் தவித்தான்.

பேசுவதும் தீர்வு

அகிலேஷின் அப்பா தன் மருத்துவ நண்பரிடம் தன் மகனின் பயம் குறித்துக் கேட்டபோது அவருக்குக் கிடைத்த பதில்தான் இது. உடல் மாற்றம் குறித்து மகனிடம் பேசாதது தவறு என அகிலேஷின் அப்பா நினைத்தார். பல பெற்றோர் பருவ வயதில் இருக்கும் தங்கள் குழந்தைகளிடம் பேச நினைத்தாலும் எப்படி ஆரம்பிப்பது, எதைப் பேசுவது என்ற குழப்பத்திலேயே எதையும் பேசாமல் தவிர்த்துவிடுகின்றனர். அதன் விளைவாக, குழந்தைகள் தங்களுக்குத் தோன்றுகிற கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் தவிக்கின்றனர் அல்லது வெவ்வேறு வகைகளில் தவறான பதில்களைப் பெறுகின்றனர்.

இதைத் தவிர்க்க, பருவ வயதில் ஏற்படக்கூடிய உடல், மன மாற்றங்களைப் பற்றிப் பெற்றோர் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்காகத் தங்களுக்குத் தெரிந்த தகவல்களையெல்லாம் செய்தி வாசிப்பதுபோல குழந்தைகளிடம் கொட்டித் தீர்க்க வேண்டியதும் இல்லை. பொதுவான விஷயங்களைத் தனக்குத் தெரிந்தவருக்கோ தனக்கோ நடந்ததைப் போல அவர்களிடம் சொல்லலாம். மருத்துவ நண்பர் சொன்ன தகவலை அகிலேஷிடம் சொன்னார் அவனுடைய அப்பா.
இன்னொரு தகவலையும் அவனிடம் சொன்னார். பருவ வயதில் சில குழந்தைகளுக்குத் தலையும் முகமும் பெரிதாகும். கால்களைவிட கைகள் நீளமாகும். இதனால் உடலின் மேல்பகுதி, இடுப்புக்குக் கீழே உள்ள பகுதியைவிடப் பெரிதாக இருப்பதுபோலத் தோன்றும். இதுவும் இயல்புதான். போகப்போகச் சரியாகிவிடும் என்று அப்பா சொன்னதை ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டான் அகிலேஷ்.



குரலில் ஏற்படும் மாற்றம்

பருவ வயதில் ஏற்படும் வளர்ச்சிகளில் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரத்யேக மாற்றங்களில் குரல் உடைவதும் ஒன்று. சிலருக்குத் தொண்டைப் பகுதியில் வீக்கம் போல உருண்டையாக வளரும். இதை ஆடம்ஸ் ஆப்பிள் என்பார்கள். அதுவரை மழலைக் குரலில் பேசிக்கொண்டிருந்தவர்களின் குரல் கரகரப்பாக மாறும். சிலருக்குக் குழந்தையின் குரலாகவும் இல்லாமல் பெரியவர்களின் குரலாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் சில மாதங்கள் இருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் கேலிக்கு உள்ளாகக்கூடும். ஆனால், நாளடைவில் குரல் உடைந்து பெரியவர்களின் குரல் போல ஆகிவிடும். அதனால் அதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

இயல்பான வளர்ச்சி

இப்போது கௌதமின் கவலைக்கு வருவோம். பருவ வயதில் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஹார்மோன் சுரப்பால் சில ஆண் குழந்தைகளுக்கும் மார்பகம் பெரிதாகக்கூடும். இது இயல்பானதுதான். பருவ வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் இந்த வளர்ச்சி தடைபட்டுவிடும் அல்லது குறைந்துவிடும். இதற்காகப் பயப்படத் தேவையில்லை. இது கௌதமின் பெற்றோருக்குத் தெரிந்திருந்தது. ஆனால், கௌதமைத்தான் பயம் ஆட்டிப்படைத்தது. அவனுடைய பெரியப்பா மகனிடம் சொல்லி கௌதமிடம் பேசச் சொன்னார்கள். அதன் பிறகுதான் கௌதம் இயல்புக்குத் திரும்பினான். கௌதம் எதற்காகக் கவலைப்பட்டானோ அதேபோன்ற ஒன்று கனிஷ்காவை ஆட்டிப்படைத்தது. ஏழாம் வகுப்பு படிக்கும் அவள் அதைத் தன் தோழிகளிடம்கூட பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அப்படி என்ன கவலை அவளுக்கு?

(நிஜம் அறிவோம்...)

x