என்று பிறந்தவள் என்று ஆய்வாளர்களாலும் அறிஞர் பெருமக்களாலும் அறுதியிட்டு உரைக்க முடியாத அளவுக்குத் தொன்மையும் மேன்மையும் உடைய தாய்த் தமிழுக்கு ஆண்டு தவறாமல் விழா எடுப்பதில் தேவகோட்டை கந்தர்சஷ்டிக் கழகத்துக்குப் பெரும் பங்குண்டு.
கந்தக் கடவுளை தத்தம் சொந்தக் கடவுளாகக் கருதுகிற செட்டிநாட்டுப் பெருமக்கள் தமிழுக்கும் சமயத்துக்கும் கல்விக்கும் நல்கிய கொடையையும் புரிந்த தொண்டையும் எழுதத் துவங்கினால் ஆயுள் இருக்கிற வரை எழுதலாம். வரலாற்றுப் பெருமையும் வள்ளல் குணமும் கொண்ட நகரத்தார், சமூகம் தந்த அறிஞர்களையும் கவிஞர்களையும் தமிழ்கூரு நல்லுலகம் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூரும். கந்த சஷ்டியை நெஞ்சில் வைத்து தமிழை நினைவில் வைத்து சஷ்டி நாட்களில் தேவகோட்டை கந்தசஷ்டிக் கழகம் எடுத்து வருகிற தமிழ் விழாவில் பங்கெடுக்க தமிழறிஞர்கள் நான் முந்தி நீ முந்தி என்று படையெடுப்பது ஆண்டுதோறும் நடக்கிற, அரங்கேறுகிற அற்புத அனுபவம். தேவகோட்டை கந்தசஷ்டிக் கழகத்தில் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்தால் தனக்கு ஒரு புதிய தகுதி கிடைத்ததாகப் பெருமிதப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
பத்து நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் விழாவை முன்னெடுக்கிற உபயதாரர் களுக்குள்ளேயே ஒரு போட்டி இருக்கும். முதலிடமும் முத்தான இடமும் எங்களையே சாரும் என்று ஒவ்வொரு நாளும் கந்தசஷ்டி விழாவில், பெற்றெடுத்த மகளின் மணவிழாவில் காட்டுகிற அக்கறையைக் காட்டுவார்கள். மாட மதுரையில் டால்ஃபின் பள்ளியை நிறுவி நிர்வகித்து வரும் டால்ஃபின் இராமநாதன் கந்தசஷ்டிக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற ஆண்டில் ‘சமயம் வளர்த்த தமிழ்’ என்ற தலைப்பில் உரையாற்ற அழைக்கப்பட்டேன். நல்ல சமயம் நமக்கும் வாய்த்தது என்றெண்ணி மகிழ்ந்தேன். சைவத்தையும் தமிழையும் இரு கண்ணாகக் கருதுகிற நகரத்தார் எடுக்கும் கந்தசஷ்டி விழாவில் கற்றறிந்த பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றப் போகிறோம் என்ற உணர்வோடு தேர்வுக்குப் படிக்கிற மாணவனைப் போல் படித்துக்கொண்டு சென்றேன்.
டால்ஃபின் இராமநாதன் முன்னின்று நடத்திய கந்தர் சஷ்டி விழாவில் சமயம் வளர்த்த தமிழை அணி செய்வதும் அலங்கரிப்பதும் எனக்கு மிகப் பெரிய சவாலாகத்தான் இருந்தது. அன்னைத் தமிழுக்கு அழகான அணிகலன்கள் செய்து போட்டு அழகு பார்த்த அரும்பெரும் கவிஞர் கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி போன்றவர்கள் எல்லாம் நாவினால் நாட்டியம் நிகழ்த்திய அரங்கில் நானா என்ற கேள்வி என்னுள் எழும்போது காற்று கவரி வீசாமலே வியர்த்து விடுகிறேன். பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்ததுமே பதைப்பும் பதற்றமும் என்னை முற்றுகையிட்டுவிட்டது.
அரை நூற்றாண்டு காலம் தமிழ் இலக்கிய மேடை களைத் தன் நகைச்சுவைப் பேச்சால் கட்டிப்போட்ட பட்டிமன்ற ஜாம்பவான் கண. சிற்சபேசன், தமிழ்த் தேசிய காப்பியத்தின் சிகரம் தொட்ட பேராசிரியர் இரா. இராமநாதன், சேக்ஸ்பியரின் அற்புத நாடகங்களை அழகு தமிழில் மொழி பெயர்த்த ஆற்றலாளர் பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம் போன்ற அருந்தமிழில் பிறை பல கண்டவர்கள் எதிரில் அமர்ந்திருக்க நாவாடத் தொடங்கினேன். “ஆதியும் அந்தமும் காண முடியாத தமிழின் நீண்ட பயணத்தில் சமயம் தமிழோடு சேர்ந்தே பயணித்து வந்திருக்கிறது. சமயத் தமிழைப் புறந்தள்ளிவிட்டு தமிழைப் பார்த்தால் தமிழுக்கு அழகும் இருக்காது; ஆழமும் இருக்காது. சங்கம் மருவிய காலத்தில் இருந்து சமகாலம் வரை தமிழின் உயரத்தையும் உன்னதத்தையும் சமயங்களே தீர்மானித்தது. இதிலே பவுத்தத்துக்கும் சமணத்துக்கும் இஸ்லாத்துக்கும் கிறிஸ்துவத்துக்கும் இடம் உண்டு என்பதை இந்த இடத்தில் சுட்டுவது எனது கடமை என்று கருதுகிறேன்.
இறைவனோடு மொழியை பொருத்திப் பார்ப்பதிலும் இருத்திப் பார்ப்பதிலும் நமது சமயாச்சாரியப் பெருமக்கள் ஆர்வம் கொண்டார்கள். வடமொழியும் தேன்மொழியாம் தென் மொழியும் முறையே நாம் வழிபடும் கடவுள் சிவ பெருமானால் பாணினிக்கும் அகத்தியருக்கும் வழங்கப் பட்டது என்று காஞ்சிப் புராணத்தில் சிவஞான முனிவர் ‘வட மொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென் மொழியை உலகமெலாந் தொழு தேத்துங் குட முனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்’ என்று பாடுகிறார். மொழியின் தோற்றம் இறைவனிடம் இருந்தது என்று கருதியதில் மொழி வல்லார்க்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் மொழி யின் வளர்ச்சியில் சமயத்துக்கு இருக்கிற தொடர்பையும் பங்களிப்பையும் யாரும் மறுக்கவும் மாட்டார்கள்; மறக்கவும் மாட்டார்கள்.
சங்க காலத்துக்குப் பிறகு தாய்த்தமிழ் மொழிக்கு வளத்தையும் வனப்பையும் வசந்தத்தையும் வாரி வழங்கியது சமயங்கள்தான். என்றாலும் சங்க காலத் துக்கும் சமயத்துக்கும் தொடர்பில்லை என்றும் சாதித்து விட முடியாது. சாகாவரம் பெற்ற சங்க இலக்கியத்தின் பத்துப்பாட்டில் முதல் பாட்டு முருகனைக் கொண்டாடிய திருமுருகாற்றுப்படைதான். பரி பாடலில் எட்டுப் பாட்டு நம் கந்த சஷ்டி முருகனுக்குத்தான். அதிலும் ஆறு பாட்டு கண்ணனுக்கு. சங்க காலத்தில் சமயம் இல்லாவிட்டாலும் சமயத்தை மையமாக வைத்து ஒரு இலக்கியம் தோன்றவில்லை என்றாலும் சமயச் செய்திகள் சந்தனத் தமிழில் சங்க காலத்திலேயே தொடங்கிவிட்டன.
சைவத்தின் பேராற்றலால் சமணமும் பவுத்தமும் செல்வாக்கிழந்தன. சமணம் சார்ந்திருந்த மணிமுடி தரித்திருந்த மன்னர்களை எல்லாம் சைவம் ஆட்கொண் டது. ஞான சம்பந்தப் பெருமானால் மாமதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கூன்பாண்டியன் சைவத்தைத் தழுவினான். திருநாவுக்கரசரால் கல்லெல் லாம் சிலை செய்த பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் சமணத்தைத் துறந்து சைவத்தை ஏற்றான். திருத்தக்கத் தேவரின் சிந்தாமணியால் ஈர்க்கப்பட்டு சமணத்தைச் சார்ந்திருந்த சோழவள நாட்டு மன்னன் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் திருத்தொண்டர் மாக்கதை தந்த தெய்வச் சேக்கிழாரால் சைவத்தைத் தழுவினான் என்பது வரலாறு.
சிந்தைக்கும் செவிக்கும் இனிய பாசுரங்களை நெஞ்சுருக அள்ளித்தந்த மூவரின் தேவாரம் ஏழு திருமுறைகளாகவும் எலும்பை உருக்குகிற பாடல்கள் என்று லண்டனில் இருந்து வந்த ஜி. யூ. போப் படித்து நெக்குருகிய மாணிக்கவாசகப் பெருமானின் தித்திக்கும் திருவாசகம் எட்டாவது முறையாகவும் தொகுக்கப்பட்டது. பக்தி ரசம் சொட்டும் தெய்வச் சேக்கி ழாரின் பெரிய புராணம் ஒரு வரலாற்று ஆவணமாகவும் தமிழுக்கு, தமிழர்க்கு வாய்த்தது. பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணமும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தவேள் கதை சொல்லும் கந்த புராணமும் சைவத்துக்கு அழகையும் வலிவையும் தந்தன. சைவத்தில் மலர்ந்த எண்ணிலடங்காத பிரபந்தங்களும் சிற்றிலக்கியங்களும் தல புராணங்களும் தமிழின் தகுதியை வானமளவுக்கு உயர்த்தியது.
சைவம் ஓங்கி உலகளந்த காலத்தில் வைணவம் தனது கொடியைப் பறக்கவிட்டது. பன்னிரு ஆழ்வார்கள் அருளிச் செய்த நெஞ்சை உருக்கும் செஞ்சொற் பாசுரங் கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தமிழின் அழகை ஆகாயத்துக்கு இட்டுச் சென்றது. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நமக்கு வாய்க்காமல் போயிருந்தால், தமிழ்க் கருவூலம் நிறைந்திருக்க வாய்ப்பே இல்லை. திருத்தக்கத் தேவரின் சிந்தாமணியும் தெய்வச் சேக்கி ழாரின் பெரிய புராணமும் தேரெழுந்தூர்க் கம்பனின் இராம காதையும் உலக மகா காவியங்களின் வரிசை யில் வைத்து எண்ணப்படுகிற பெருமையைப் பெற்றது. தமிழ்க் கவிதா மண்டலத்தின் கொடுமுடியை, ஆழம் காண முடியாத கற்பனை உலகின் ஆழத்தை, கலை யின் நேர்த்தியை, பண்பாட்டின் பெருமையை, சொர்க் கத்தைச் சிருஷ்டிக்கும் சொற்களின் கீர்த்தியை, தனித் தியங்கவல்ல தன்னிகரில்லாத் தமிழின் மதிப்பை சமய இலக்கியங்கள் பரணி பாடியது. தரணிக்குப் பறை சாற்றியது.
பக்தி வெள்ளம் தமிழ்க் கடலில் கலந்ததால் செம் மொழிகளின் வரிசையில் செம்மாந்த இடத்தைப் பெற்றது தமிழ். லத்தீனும் கிரீக்கும் சீனமும் சம்ஸ்கிருதமமும் பெற முடியாத இடத்தை மொழி உலகில் தமிழ் பெறுவதற்கு சமய இலக்கியங்களே காரணம். சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சமய நெறிக்கு ஊனம் வராமலும் தத்துவ அறிவு தன் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் சைவ மடாலயங்கள் செய்த தமிழ்த்தொண்டை இங்கே பந்தி வைக்க எனக்கு நேரமில்லை. தேன் சொட்டும் தெய்வத் தமிழின் சுவையான சில பக்கங்களைப் பட்டியலிட்டுப் பேச காலம் அனுமதிக்க வில்லை. என் கோலம் முடிகிறது’’ என்று சொல்லி பேச்சை முடித்துவிட்டு கீழே இறங்கி வந்தபோது திராவிட இயக்கத்தில் திருமறையைப் பேசுகிற நாஞ்சில் சம்பத்தை எப்படிப் பாராட்டுவது என்று பேராசிரியர் கண. சிற்சபேசன் கட்டி அணைத்தபோது என் கண்களில் ஆனந்தக் கண்ணீர். கழகங்கள் என்னைக் கைவிட்டாலும் இன்னும் என்னை கந்தசஷ்டிக் கழகம் கைவிடவில்லை.
(இன்னும் பேசுவேன்...)