பாடல்களின் வழியே கதை சொன்னவர்!


படச்சுருளைப் பாதுகாக்கமுடியாத நிலையில், கடந்த நூறாண்டுகளில் வெளியான பல திரைப்படங்களின் நெகட்டிவ்கள் அழிந்துபோய் விட்டன. காலம் தின்று செரித்ததுபோக, அடுத்த தலைமுறையின் ரசனைக்கும் இவை ஆச்சரியத்தைக் கொடுக்கும் என்ற தகுதிகொண்ட படங்கள் மட்டுமே ஆயுளைத் தக்கவைத்திருக்கின்றன. அவையும்கூட இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிகிச்சை எடுத்தால் மட்டும்தான் உயிர்வாழ முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றன.

47 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘வசந்த மாளிகை’ டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி கம்பீரமான வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைப் பார்க்கும் இன்றைய விமர்சகர்கள் ‘மிகை நாடகம்’ என்று எள்ளி நகையாடலாம். ஆனால், அது ஒரு தலைமுறையின் காதல் காவியம். மாநில எல்லைகளைக் கடந்து மறு ஆக்கம் செய்யப்பட்டு மக்களின் மனங்களைக் கொள்ளையடித்த அந்தப் படத்தை செல்லுலாய்டு சரித்திரமாக மூன்று மொழிகளில் செதுக்கித் தந்தவர் ‘சகலகலா மேதை’ என்று புகழப்பட்ட இயக்குநர் கே.எஸ்.பிரகாஷ் ராவ்.

தோல்விகளே தொடக்கம்

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாக்களின் கனவுத் தொழிற்சாலையாக தமிழகம் இருந்தபோது, சென்னை, சாலிகிராமத்தில் பிரகாஷ் ஸ்டுடியோவை உருவாக்கியவர் பிரகாஷ் ராவ். திரைப்படத் தயாரிப்பு ஒரு தொழிலாக உருப்பெற தனது கலையாளுமையைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்த இயக்குநர் இவர். விஜயவாடா அருகில் உள்ள கொலவெண்ணு என்ற கிராமத்தில் கொவேலமுடி சூர்ய பிரகாஷ் ராவாக 1914-ல் பிறந்தவர். விவாசாயக் குடும்பத்தில் பிறந்த ராவ், பள்ளி இறுதி வகுப்பை முடித்துவிட்டு விஜயவாடாவில் இன்சூரன்ஸ் ஏஜென்டாக வேலைக்குச் சேர்ந்தார். எடுப்பான தோற்றமும் நிமிர்ந்து பார்க்கவைக்கும் உயரமும் கொண்டிருந்த இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தை உருவாக்கியவர் ஒரு பாடலாசிரியர்.

x