மீட்புப் பணிகளும் இதே வீச்சில் தொடரட்டும்!


சென்னைப் பெருமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதற்கே யாரிடம் அனுமதி கேட்பது என்று அதிகாரிகள் காத்துக்கிடந்த நிலை யாருக்கும் மறந்திருக்காது! இம்முறை, கஜா புயலை எதிர்கொள்ள தமிழக அரசு கவனமாகவே நடவடிக்கை எடுத்திருக்கிறது.

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தகவல் கட்டுப்பாட்டு மையத்தில் அதிகாரிகள் சகிதம் அமர்ந்து உரிய உத்தரவுகளை உடனுக்குடன் பிறப்பித்துக் கொண்டே இருந்தார். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனிருந்து, பாதுகாப்புப் பணிகளை முடுக்கி விட்டார். மின் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அதிகாரிகளுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படைகள் உரிய ஒருங்கிணைப்போடு தயார் நிலையில் இருந்தன. கஜா புயல் கரை ஏறிய நாகை மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த 44 ஆயிரம் பேர் முன்கூட்டியே முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இப்படித் தங்கவைக்கப்பட்ட சுமார் 82 ஆயிரம் பேருக்குத் தேவையான உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இயற்கை சீற்ற பாதிப்புகளை முன்கூட்டி கணிக்க முடிந்தாலும், விளையக்கூடிய சேதங்களை முழுமையாகத் தடுத்துவிட முடியாது. ஆனால், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதிப்பின் வீரியத்தைக் குறைக்க முடியும். இம்முறை தமிழக அரசு அதைச் சரியாகவே செய்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், புதிய அரசியல் வரவான கமல்ஹாசன் ஆகியோர் அரசைப் பாராட்டி இருப்பதும் நல்ல அரசியல் நாகரிகத்தின் அடையாளம்.

x