இனி அங்கே போர் தொடுக்க யாருமில்லை!


தம்பி

அப்போது எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சில நாட்களாகவே சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருப்பதை உணர முடிந்தது. நானும் கண்டுகொள்ளாததுபோல் இருந்துவிட்டேன். சில நாள் கழித்து சந்தேகத்துக்குரிய நடமாட்டம் வெளிப்படையான நடமாட்டமாக மாறியது. யாரோ ஒரு அந்நியர் அடிக்கடி எங்களை வேவுபார்க்க வருவது தெளிவாகிவிட்டது. என்ன காரணத்துக்காக வேவு பார்க்க வருகிறார் என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் வேவுபார்த்தல் என்ற நிலையைத் தாண்டித் தன் உரிமையை நிலைநாட்டிக்கொள்வதுபோல் அவர் எங்கள் வீட்டை ஆக்கிரமித்துவிட்டிருந்தார்.

அவர் வேறு யாருமல்ல. கொண்டைக்குருவிதான். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் செம்பிட்டக் கொண்டைக்குருவி (Red-vented bulbul). எங்கள் வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் இருந்த மரத்தில் அது கூடு கட்ட ஆரம்பித்திருக்கிறது. அது தனி ஆள் கிடையாது, இன்னொருத்தரும் அதற்குத் துணை. இப்போதுதான் எனக்கு விஷயம் புரிந்தது. தான் கூடு கட்டுவதற்கு எந்த மரம் ஏற்றது, எந்தக் கிளை ஏற்றது, எந்த வீடு ஏற்றது என்பவற்றையும் கூடுகட்டும் இடம் பாதுகாப்பானதுதானா, அருகில் உள்ளவர்கள் ஆபத்தற்றவர்களா என்பதை முதலில் அறிந்துகொள்வதற்காகக் கொண்டைக்குருவி நோட்டம்பார்க்க முதலில் வந்திருக்கிறது. நோட்டம்பார்க்க வரும்போதெல்லாம் சுற்றுச்சுவரின் மேல் சற்று உட்கார்ந்துவிட்டுப் போவது, கொடியில் ஊஞ்சலாடுவது, அருகில் உள்ள செடிகொடிகளில் சற்று உலாவிவிட்டு வருவது என்று வழக்கத்தை வைத்திருந்தது. பிறகு தன் வருகையை அதிகரித்து, அதைத் தன்னுடைய பிரதேசமாக ஆக்கிக்கொண்டு அங்கிருக்கும் மரத்தில் கூடு கட்ட ஆரம்பித்தது.

அதன் கூடு உருவாகும் விதத்தை அறிந்துகொள்ள எனக்கு ஆவலாக இருந்தது. மாடிப்படிகளுக்கு அருகில் இருந்த மரத்தில்தான் கூடு உருவாக ஆரம்பித்தது. மாடியில் போய்ப்பார்த்தால் இரண்டு அடி தூரத்தில் பார்க்கலாம். அதன் கூடு உருவாகும் இடத்தைப் பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. இலைக்காம்பைவிடச் சற்றுப் பெரிய தளிர்க் கிளைகள் இரண்டுக்கு இடையில் பொதிந்து கூடு உருவாக ஆரம்பித்திருந்தது. அந்தத் தளிர்க் கிளையில் அணில் கூட ஓடாது, அவ்வளவு மென்மை. இதில் என்ன அப்படி பாதுகாப்பு என்று ஆயிரத்தெட்டு தடவை நோட்டமிட்டாய் கொண்டைக்குருவியே என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன். ஆனால், உண்மையில் அதுக்கு அந்த இடம் போதுமானது, அவற்றின் கனத்தையும் போடக்கூடிய முட்டைகள், அதிலிருந்து வெளியாகக் கூடிய குஞ்சுகள் எல்லாவற்றையும் கணக்குப்போட்டுதான் கூட்டை உருவாக்க ஆரம்பித்திருந்தது. சிறுசிறு நார்கள் செத்தைகள் போன்றவற்றைக் கொண்டு சிறு கிண்ணம் போன்ற வடிவில் அந்தக் கூடு உருவாக ஆரம்பித்திருந்தது. அந்தக் கூட்டைக் கட்டி முடிப்பதற்குள் ஆயிரமாயிரம் தடவை கொண்டைக்குருவி கட்டுமானப் பொருட்களை எடுத்துக்கொண்டு கூட்டை நோக்கிப் பறந்திருக்கும். எப்படியோ கூடு உருவாகிவிட்டது.

x