அடுத்த தலைமுறைக்கு வேறு எதைத் தந்துட்டுப் போகமுடியும்?- நெல் தாத்தா பொன்னம்பலம்


என்.பாரதி

மேற்கத்திய பாணியில் உறவுகளும், நண்பர்களும் சூழ, கேக் வெட்டி, மெழுகுவர்த்தி ஊதியணைத்து, வாழ்த்த வந்தவர்களை பீட்சாவையோ, பர்க்கரையோ பிய்த்துத் தின்ன வைக்கும் சம்பிரதாய பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு மத்தியில், தனது 75-வது பிறந்தநாளை, பாரம்பரிய விதை நெல்களை விவசாயிகளுக்கு வழங்கும் விழாவாகக் கொண்டாடியிருக்கிறார் நாகர்கோவில் பொன்னம்பலம்!

‘‘33 வருசம் வேளாண் துறையில் வேலை செஞ்சும், என்னால விவசாயிகளுக்குன்னு பெருசா ஒண்ணும் செஞ்சுட முடியல. அந்த ஆதங்கம் எனக்குள்ள இருந்துட்டே இருந்துச்சு” என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் பொன்னம்பலம் ஓய்வு பெற்ற வேளாண்துறை அதிகாரி. தனது முயற்சியால் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு பரவலாக்கம் செய்திருக்கிறார். இந்த வயதிலும் அந்தப் பணியை இன்னமும் தொடர்கிறார்.

குயில்கள் கூவிக்கொண்டிருந்த ரம்யமான காலைப் பொழுதில், பொன்னம்பலத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். “ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் பொறுப்பாளராக இருந்தேன். இந்திய அளவுல, ‘வேளாண்மை விளைபொருள் விற்பனை ஒழுங்குபடுத்தும் சட்டம்’னு தமிழகம்தான் முதன் முதலில் இயற்றியது. 1933-லேயே தமிழகத்தில் இப்படி ஒரு சட்டம் வந்துடுச்சு. ஆனா, பின்னால வந்த மாநிலங்கள் பலவும் முந்தியோட, தமிழகமோ இதுல இன்னமும் புறப்பட்ட இடத்துலயே தேங்கி நிற்குது.

x