என்றென்றும் ஏழுமலையான் 16: பணம் எண்ணும் பரகாமணி சேவகர்கள்


பணக்கார கடவுள் என பக்தர்களால் மதிக்கப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் சுமார் ரூ.3 கோடியும் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியும் உண்டியல் காணிக்கை சேர்கிறது. இந்தக் காணிக்கையானது அன்றைய தினத்துக்கே எண்ணி முடிக்கப்படுகிறது. இதை எண்ணும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட தன்னார்வத் தொண்டர்களே ‘பரகாமணி’ சேவகர்கள்.

இவர்கள் அனைவருமே அரசு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள். சுவாமிக்குத் தன்னார்வ சேவை செய்யும் இந்தப் பரகாமணி சேவகர்களைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

ஏழுமலையானுக்கு நாம் கைநிறைய காணிக்கை செலுத்தினால் அந்த ஏழுமலையான் நம்மை வளம் குன்றாத செல்வச் செழிப்போடு வைத்திருப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் மன்னர்கள் காலம் தொட்டே ஏழுமலையானுக்கு பக்தர்கள் தாராள காணிக்கை செலுத்தி வருகிறார்கள். திருமலைக்குச் செல்ல எந்தவொரு போக்குவரத்து வசதியும் இல்லாத நாட்களிலேயே மலைப்பாதை வழியே நடந்து வந்து ஏழுமலையானைத் தரிசனம் செய்தார்கள் மக்கள். மலையில் முதன் முதலாக வாரி மெட்டு எனும் மலைப்பாதை நிவாச மங்காபுரம் அருகே உருவாக்கப்பட்டது. காலப்போக்கில் பக்தர்கள் கூட்டம் அதிகமானதால், வாகனப் போக்குவரத்தைச் சமாளிக்க படிப்படியாக அலிபிரி இருவழி மலைப்பாதைகள் அமைக்கப்பட்டன.

இந்தப் பாதைகள் வழியாக தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருமலைக்கு வந்து போகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 60 முதல் 70 ஆயிரம் வரையிலும், விசேஷ நாட்களில் 1 லட்சத்துக்கும் கூடுதலாகவும் பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கிறார்கள். இதல்லாமல் மலைப்பாதையில் நடந்தே வந்து ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்களும் இருக்கிறார்கள்.

ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்கள், கோயிலுக்கு வடக்கே உள்ள ‘கார்பஸ் உண்டி’யலில் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர். பணம், காசு மட்டுமல்லாது தங்க நகைகள், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்கள் உள்ளிட்டவையும் ஏழுமலையானுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும். சிலர் தங்களது வீட்டு மனைப்பட்டா, நிலப்பட்டா போன்றவைகளையும் காணிக்கை யாக வழங்குகிறார்கள். இந்த அசையாச் சொத்துகளை தேவஸ்தானம் ஸ்வாதீனம் செய்து கொள்ளும்.

ஏழுமலையானுக்குச் செலுத்தப்படும் உண்டியல் காணிக்கைகள் அனைத்தும் கோயில் வளாகத்தில் சுவாமிக்குப் பின்புறம் அமைந்துள்ள ‘பரகாமணி’ எனும் இடத்தில் சேகரித்து எண்ணப்படுகிறது. காணிக்கை எண்ணும் பணியில் முன்பெல்லாம் தேவஸ்தான ஊழியர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டார்கள். இப்போது தன்னார்வலர்களும் இந்தப் பணிக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள்தான் பரகாமணி சேவகர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

பரகாமணி சேவை குறித்து பரகாமணி சேவகர்கள் பிரிவின் பொறுப்பாளரான பிரசாத் நம்மிடம் கூறுகையில், “அரசு மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை 2012 முதல் இந்தப் பரகாமணி சேவைக்கு அனுமதித்து வருகிறது தேவஸ்தானம். தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தச் சேவையில் பங்கேற்க முடியும். அதுவும் 35 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது அடையாள அட்டை விவரங்களை வழங்கி இந்தச் சேவையில் பங்கேற்கலாம். ஒவ்வொருவருக்கும் 3 அல்லது 4 நாட்கள் அவரவரின் விருப்பத்திற்கேற்ப பரகாமணி சேவை ஒதுக்கப்படும். பரகாமணி சேவையில் ஈடுபடுவோர், ஆன்லைனில் பதிவு செய்த பின்னர், அவர்களுக்கு வரும் அனுமதி தகவலுடன் திருமலையில் உள்ள பரகாமணி சேவா மையத்திற்கு வர வேண்டும். இங்கு அவர்களுக்குத் தங்குவதற்கான வசதியும், உணவும் இலவசமாக வழங்கப்படும்.

பரகாமணி சேவை செய்வோர் கண்டிப்பாக வெள்ளை நிற 4 முழ வேட்டி, கட் பனியன் ஆகியவை மட்டுமே அணிய வேண்டும். கழுத்தில் பச்சை கலர் துண்டு அணிய வேண்டும். இந்தத் துண்டை தேவஸ்தானம் வழங்கும். இவர்களில் ஏ, பி என இரு பிரிவுகள் உண்டு. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இவர்கள் பரகாமணி சேவையில் ஈடுபடுவர். ஷிஃப்ட் முறையில் இவர்கள் பணி செய்வதால் காலை, மாலை என இருவேளையாகப் பிரித்து பணி செய்ய நேரிடும். அதன்படி இவர்களுக்கு தினமும் 2 முறை சுவாமியைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். பரகாமணியில் பெண்கள் பணி செய்ய முடியாது. காணிக்கை எண்ணும் இடத்தில் கண்காணிப்பு கேமரா மூலமாகவும் ஸ்கேனர் மூலமாகவும் நம் உடல் முழுவதும் ஸ்கேன் செய்யப்படும். பெண்களிடம் இத்தகைய சோதனைகளைச் செய்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், பரகாமணி சேவைக்கு பெண்களை அனுமதிப்பதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கும் 65 வயதைக் கடந்தவர்களுக்கும் அனுமதி கிடையாது.

தற்போது தினமும் 220 முதல் 250 பரகாமணி சேவகர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அல்லது ஊழியர்கள் கோயிலுக்குள் அழைத்துச் செல்வார்கள். 3 இடங்களில் ஸ்கேன் செய்த பின்னர், காணிக்கை எண்ணும் இடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். குவியலாகக் கொட்டப்படும் காணிக்கையிலிருந்து ரூபாய் நோட்டுகள் தரம்பிரித்துக் கட்டப்படும். அதன்பிறகு அந்தக் கட்டுகள் எண்ணி முடிக்கப்படும். இதேபோல் நாணயங்களும் ஜல்லடை மூலம் பிரிக்கப்பட்டு எடைபோட்டு மூட்டைகளாகக் கட்டப்படும். அதன்பிறகு, தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், வெளிநாட்டு பணம் போன்றவை பிரித்தெடுக்கப்படும். தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், எடை போடப்பட்டு, ஆபரணப் பிரிவு பதிவேட்டில் பதிவு செய்யப்படும்” என்று சொன்னார்.

ஏழுமலையான் உண்டியலில் பணம், நகைகள் மட்டு மல்லாது... சில நேரங்களில் பூசணி, புடலை உள்ளிட்ட காய்கறிகளும் பக்தர்களால் செலுத்தப்படுவதுண்டு. ஒரு சமயம், நட்சத்திர ஆமை கூட காணிக்கையில் இருந்ததாம். கத்தி, பிளேடு, விசிட்டிங் கார்டுகள், பெண்கள் அணியும் தாலி உள்ளிட்டவைகளும் உண்டியல் காணிக்கையில் இருக்கும் என்கிறார்கள். “தாங்கள் என்ன தொழில் செய்கிறோமோ அது சார்ந்த பொருட்களையும், தாலி பாக்கியம் நிலைக்க வேண்டிக்கொள்ளும் பெண்கள், தங்களது தாலியையும் ஏழுமலையானுக்கு காணிக்கையாகத் தருவதை இதன் மூலம் புரிந்து கொள்ளமுடிகிறது” என்கிறார்கள் தேவஸ்தான ஊழியர்கள்.

ஏக்கத்துடன் இறங்குவேன்!

கே.வி மோகன் ராவ்

திருமலையில் பரகாமணி சேவைக் காக 24-வது முறையாக வந்திருந்த ஓய்வுபெற்ற வேளாண் துறை அதிகாரி கே.வி மோகன் ராவ் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்த போது, “நான் ஆந்திர மாநில விவசாயத் துறையில் துணைஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றேன். ஹைதராபாத் பத்மாவதி நகரைச் சேர்ந்தநான், எனது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, திருப்திகரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், அவருக்கு நான்சேவை செய்கிறேன். ஒருவருக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் இந்தப் பரகாமணி சேவை செய்ய வாய்ப்புக்கிடைக்கும். அதன்படி மூன்று மாதத்துக்கு ஒருமுறை மறக்காமல் இங்கு வந்து இந்தச் சேவையில் ஈடுபடுகிறேன். ஒவ்வொரு முறையும் இங்கு வந்து ஏழுமலையானைத் தரிசித்து பரகாமணி சேவை செய்துவிட்டுத் திரும்பும்போது அடுத்த வாய்ப்பு எப்போது வரும் என்ற ஏக்கத்தோடுதான் மலையை விட்டு இறங்குவேன்” என்றார்.

எங்களுக்குக் கிடைத்த பெருமை!

கிருஷ்ண பிரசாத்

பரகாமணி சேவைக்காக வந்திருந்த வங்கி அதிகாரியான கிருஷ்ண பிரசாத் நம்மிடம் பேசுகையில், “நான் ஹைதராபாத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் உதவி மேலாளர். எனக்கு பரகாமணி சேவை வாய்ப்பு நான்காவது முறையாகக் கிடைத்திருக்கிறது. ஏழுமலையான் கோயிலுக்குள் முகப்பு கோபுரம் வழியாக விவிஐபி-க்கள் மட்டுமே செல்ல முடியும். பரகாமணி சேவர்களுக்கும் அந்தப் பாக்கியத்தைத் தருகிறது தேவஸ்தானம். இதை எங்களுக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறோம். எனது 65 வயது வரைக்கும் நான் இந்தச் சேவைக்கு கட்டாயம் வருவேன்” என்றார்.

(முகங்கள் வரும்...)

x