நீரோடிய காலம் 7: காவிரி தந்த மல்லாரி வேந்தர்!


கொள்ளிடம் கடலுடன் கலக்கும் பழையாறில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டதும் என் மனதில் ஓடிய ஊரின் பெயர் ‘ஆச்சாள்புரம்’தான்.

ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் மல்லாரிகளை சி.டி. வடிவில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கேட்க ஆரம்பித்தேன். மல்லாரி என்பது சுவாமி புறப்பாட்டின்போது வாசிக்கப்படும் நாதஸ்வரத்தின் ஒரு இசைவடிவம். எனக்கு ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் மல்லாரிகளை அறிமுகப்படுத்திய நண்பர் “பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனிக்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை” என்று கூறியபோது மிகைப்படுத்திச் சொல்கிறாரோ என்றுதான் நினைத்தேன். ஆனால், கம்பீர நாட்டையில் அமைந்த கம்பீரமான சின்னத்தம்பியின் மல்லாரிகளைக் கேட்டு முடித்தபோது நண்பரின் கூற்றில் எந்த மிகையும் இல்லை என்பதை உணர்ந்தேன்.

இடுப்பெலும்பு பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத நிலையிலும் இரவில் சுவாமிப் புறப்பாட்டின்போது கையில் நாதஸ்வரம் எடுத்தால், 8 மணி நேரம் இடைவிடாமல் நடந்துகொண்டே வாசிக்கவும் செய்த மனிதர் அவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தன் கலைக்காகவும் யாருக்காக அவர் வாசிக்கிறாரோ அந்தக் கடவுளுக்காகவும் எப்படிப்பட்ட அர்ப்பணிப்பு இருந்திருந்தால் உடலின் எல்லைகளை அவரால் அநாயாசமாகக் கடக்க முடிந்திருக்கும் என்று பெரும் வியப்பு ஏற்பட்டது.

தஞ்சை மண்ணின் நீர் வளம் காரணமாக நில வளம் மட்டுமல்லாமல் கலை வளமும் செழித்துக் காணப்பட்டிருந்தது. தமிழிசை மூவர் என்று போற்றப்படும் அருணாச்சலக் கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மூவரும் ஆச்சாள்புரத்துக்கு வெகு அருகில் உள்ள சீர்காழியைச் சேர்ந்தவர்கள்தான். கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகையர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகிய மூவரும் தஞ்சை மண்ணின் இன்னொரு முக்கியமான பண்பாட்டுக் கேந்திரமான திருவாரூரில் பிறந்தவர்கள். தமிழிசைக்கும் கர்நாடக இசைக்கும் காவிரி அளவுக்கு நீர் ஊற்றி வளர்த்த பிறிதொரு நதி இல்லை.

ஆச்சாள்புரம், சிவலோகத்தியாகேசர் கோயிலை மையமாகக் கொண்ட கிராமம். நாட்டோடுகளால் வேயப்பட்டு பழைமையைச் சொல்லிக்கொண்டிருந்த வீடுகளைப் பார்க்கவே அவ்வளவு ஆசையாக இருந்தது. ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் வீட்டுக்குச் சென்ற
போது அவர் இப்போதுதான் அருகிலுள்ள சிவலோகத்தியாகேசர் கோயிலுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று கூறினார்கள். காரைக் கிளப்பியதும் கொஞ்ச தூரத்தில் ஒரு முதியவர் வெற்றுடம்புடன், குச்சியை ஊன்றிக்கொண்டு மெதுவாகச் சென்றுகொண்டிருப்பது தெரிந்தது.

“அவர்தான் சின்னத்தம்பி” என்றார் என்னுடன் வந்த செய்தியாளர் கரு.முத்து.

“பாருங்க! அற்புதமான காட்சி. நாதஸ்வர வித்வான் தெருவழியே நடந்துபோறார். அதை வாசல்ல நின்னுக்கிட்டு அவரோட தவில்காரர் ஆச்சாள்புரம் சங்கரன் வேடிக்கை பார்க்கிறார். பழைய சகாக்கள். ரெண்டு பேரும் எவ்வளவு ஆண்டிருக்கணும்” என்று வியப்பை வெளிப்படுத்தினார் கரு.முத்து.
அவர் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தேன். வீட்டு வாசலில் ஆச்சாள்புரம் சின்னத்தம்பியை விடக் கொஞ்சம் பெரிய உடம்புடன் அந்தத் தவில் வித்வான் நின்றுகொண்டிருந்தார்.

சின்னத்தம்பியை முந்திக்கொண்டு சென்று கோயில் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினோம். கல்லெறி தூரத்தில்
சின்னத்தம்பி வந்துகொண்டிருந்தார். ராகங்களைக் கம்பீரமாக வாரியிறைத்த ஒரு நாதஸ்வரம் குச்சி ஊன்றிக்கொண்டு நடந்து
வருவதுபோல் எனக்குத் தோன்றியது. கோயிலை அவர் நெருங்கியதும் அவருக்கு அருகில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டோம். கொஞ்சம் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது.

“வாங்கோ, கோயிலுக்குள்ள உட்கார்ந்து பேசுவோம். நான் இப்படித்தான் காலையில ஒருமுறை சாயங்காலம் ஒருமுறை சிவலோகத்தாரப் பாக்கப் புறப்பட்டு வந்துடுவேன்” என்று நம்மை உள்ளே கூட்டிக்கொண்டு போனார். என்னுடைய மனது என்னைக் கேட்காமலேயே அவருடைய மல்
லாரியை உள்ளே ஒலிபரப்ப ஆரம்பித்தது.

உள்ளுக்குள்ளே சென்று காரியஸ்தருடைய அறையில் அமர்ந்துகொண்டோம்.

“அய்யா ஒங்க நாதஸ்வர இசையை இதுவரைக்கும் சி.டி.லதான் கேட்டிருக்கேன். அதுலயும் ஒங்க மல்லாரி இசை ரொம்பவும் அற்புதம்” என்றேன்.
“அப்படியா! நான் ஒரு சுமாரான வித்துவான்தான் தம்பி. எவ்வளவோ பெரிய மேதைகள்லாம் இருந்திருக்காங்க” என்றார் ஆச்சாள்புரம் சின்னத்தம்பி. எவ்வளவு பெரிய கலை, எவ்வளவு பெரிய தன்னடக்கத்தைச் சுமந்துகொண்டிருக்கிறது!

“நான் பத்து வயதில் ஆரம்பித்து இருபது வயது வரை நாதஸ்வரம் படிச்சுக்கிட்டேன். என் தகப்பனாரோட அண்ணாரு ரெண்டு பேருட்டயும் பாடம் கத்துக்கிட்டேன். அப்புறம் திருவீழிமிழலை பிரதர்ஸ்கிட்ட ஒரு வருஷம். சீர்காழியில திருநாவுக்கரசு பிள்ளைகிட்ட ரெண்டு வருஷம். அப்புறம் தண்டபாணி ஐயர்கிட்ட. கடைசியா சிதம்பரத்துல ராதாகிருஷ்ண பிள்ளைகிட்ட நாலு வருஷம் நாதஸ்வரமும் கத்துக்கிட்டு, பக்க நாதஸ்வரமும் வாசிச்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் தனிக் கச்சேரி வாசிக்க ஆரம்பிச்சிட்டேன்” என்று தன்னுடைய வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.
“நீங்க வாசிக்கிறத என்ன பாணின்னு சொல்லலாம்?” என்று கேட்டேன்.

“பலர்கிட்டருந்தும் நான் கத்துக்கிட்டதால எல்லாருடைய பாணியும் கலந்து இருக்கும். ஒரு 32 வருஷம் சிதம்பரம் நடராஜர் கோயில்ல ஆஸ்தான வித்துவானா வாசிச்சிக்கிட்டு இருந்ததால சிதம்பரம் பாணிதான் எனக்குக் கொஞ்சம் அதிகமா இருக்கும்” என்றார்.

“நீங்க ரொம்ப கேட்டு வியந்த இசை மேதைகள்னா யார் யாரைச் சொல்வீங்க ஐயா?” என்று கேட்டேன்.

“திருவிடைமருதூர் வீராசாமிப் பிள்ளை, ராஜரத்தினம் பிள்ளை, திருவீழிமிழலை பிரதர்ஸ், செம்பனார் கோயில் ராமசாமிப் பிள்ளை, குளிக்கரை பிச்சையப்பா பிள்ளை இவங்கள்லாம் பெரிய மேதைங்க. எங்கள் ஊர்லயும் ரொம்பப் பேரு வீட்டுல ரேடியோ இருக்காது. இருக்குறவங்க வீட்டில போய் எல்லாக் கச்சேரியும் கேப்பேன்” என்றார்.

பிறகு மல்லாரியைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.

“முதல்ல ஆலயத்துல சுவாமிக்கு தீர்த்தம்தான் எடுத்துட்டு வருவாங்க. அப்போ வாசிக்கிற மல்லாரிக்குத் தீர்த்த மல்லாரின்னு பேரு. அபிஷேகம் முடிஞ்சதுக்குப்பறம் மடப்பள்ளியிலருந்து தளிகை வரும். அதுக்குத் தளிகை மல்லாரி. அப்புறம் பெரிய மல்லாரி. அதுக்கப்புறம் அவங்கவங்க கற்பனையில நெறைய மல்லாரி சேத்துருக்காங்க. அதெல்லாம் வாசிச்சு முடிஞ்சு கோபுர வாசல்ல சுவாமிப் புறப்பாட்டுக்கு தீபாராதனை நடக்கும். அது முடிஞ்சவுடன திருபுடதாள மல்லாரின்னு ஒண்ணு இருக்கு. அதை அங்கதான் வாசிக்கணும். அதோட பேர பாருங்க. திருபுடதாள மல்லாரி. ஏன்னா மல்லாரிக்கெல்லாம் சாகித்தியம் கிடையாது. ‘தத்தித்தோம் தகதித்தோம் தகிடதகிட ததிதிதோம்தோம்’ அப்படின்னு தத்தகாரம்தான் இதுக்கு. மல்லாரிக்குன்னு உரிய ராகம் நாட்டை. திருபுடதாள மல்லாரி வாசிச்ச பிறகுதான் ராகம் வாசிப்பாங்க. ராகம் வாசிச்சு முடிஞ்சவுடன் பல்லவி, ரக்தி, ராகமாலிகை, தேவாரம், திருப்புகழ்ன்னு வாசிச்சு முடிச்சிடுவாங்க” என்றார்.

“நீங்க வாசிக்கிற மல்லாரியெல்லாம் கேக்குறப்ப அவ்வளவு கம்பீரமா இருக்கே…” என்று என் கேள்வியை முடிப்பதற்குள் குறுக்கே மறித்து “எல்லாரும் வாசிக்கிறததான் நானும் வாசிக்கிறேன். நான் ஒண்ணும் புதுசா தயார் பண்ணி வாசிக்கலை…” என்றார். அநியாயத்துக்கு அகந்தையற்றவராக இருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது.

“உங்களுக்குப் போதுமான அளவு அங்கீகாரம் கிடைச்சிருக்குன்னு நெனைக்கிறீங்களா?” என்று கேட்டேன்.

“நெறைய கெடைச்சிருக்கு. கலைஞர் எனக்கு ராஜரத்னா விருது குடுத்துருக்காரு. காரைக்கால்ல சப்தஸ்வரா சபாவுல வாசிச்சப்போ ‘மல்லாரி வேந்தர்’னு பட்டம் கொடுத்தாங்க” என்றார்.

“ஐயா நீங்க வாசிக்கிறத ஒரு தடவையாவது நேரில கேக்கணும்னு ஆசை” என்று தயக்கத்துடன் கேட்டேன்.

“அப்படியா! வாத்தியத்தை வீட்டில வச்சிட்டு வந்துட்டனே” என்று சொல்லிவிட்டு, தன்னிடம் பயிற்சி பெறும் மாணவரை அழைத்து நாதஸ்வரத்தை எடுத்துவரச் சொன்னார். அவர் ஓடிப்போய் ஐந்து நிமிடங்களுக்குள் எடுத்துவந்தார். குச்சி ஊன்றி நடந்து வந்த மனிதர் கையில் நாதஸ்வரம் கிடைத்ததும் விருட்டென்று நிமிர்ந்தார். மூலவரையும் திருஞானசம்பந்தர் சன்னிதியையும் பார்த்தவாறு வெளிமண்டபத்தின் தூணுக்கருகே நின்றுகொண்டு நாதஸ்வரத்தை வாயில் வைத்தார். நான்கைந்து சீவாளிகளை ஊதிப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு கடைசியில் ஒன்றில் தஞ்சமானார்.

ஆபோஹி ராகத்தில் அமைந்த, கோபாலகிருஷ்ண பாரதியாரின் ‘சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமோ’ பாடல் சின்னத்தம்பியின் நாதஸ்வரத்திலிருந்து படமெடுத்தாடத் தொடங்கியது. ஒரு பத்து நிமிடம் மெய்மறந்து நின்றோம்.

இரண்டு கீர்த்தனைகள் வாசித்துவிட்டு நாதஸ்வரத்தைத் தன் சிஷ்யரிடம் கொடுத்தார். நான் அந்த நாதஸ்வரத்தையே பார்த்துக்கொண்டே இருந்தேன். காற்றில் நடப்பதற்கான குச்சி அது. அதன் நாதமே ஆச்சாள்புரம் சின்னத்தம்பிக்குத் தனிப்பட்ட சக்தியைக் கொடுக்கிறது என்று எனக்குத் தோன்றியது.

அவ்வளவு அபூர்வமான இசைவடிவமான மல்லாரி இன்று ஆச்சாள்புரம் சின்னத்தம்பி போன்ற ஒருசிலரால் மட்டுமே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
காவிரியின் விரித்த கைவிரல்கள் வழியே நாங்கள் மேற்கொண்ட பயணம் இப்படியாக ஆச்சாள்புரம் சின்னத்தம்பியின் நாதஸ்வரத்தில் விளையாடிய கைவிரல்களில் வந்து முடிந்தது.

மறுநாள் ஆடிப்பெருக்கெனும் ஆசையைக் காட்டி காவிரி அழைக்கிறாள்!

(சுற்றுவோம்...)

x