நானொரு மேடைக் காதலன் - 16


‘மேடையிலே வீசுகிற மெல்லிய பூங்காற்றே’ என்ற வள்ளலாரின் வாசகத்துக்கு வடிவம் தருகிறவனாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருந்தேன். மேடை வாழ்க்கைக்காக எதையும் இழப்பதற்குச் சித்தமானேன். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்றைப் பெற முடியும் என்பதை அறிந்தவனாக இருந்தேன். இந்தச் சொல்லைத் தவிர இனியொரு சொல்லை இந்த இடத்தில் பயன்படுத்த முடியாது என்ற வகையில் வெல்லும் சொல்லைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனமாக இருந்தேன். 

வண்டுகள் பூக்களில் வசமிழந்து கிடப்பதைப் போல் வாலிப வயதில் மேடையில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்ட எனக்கு திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டங்களில் உயர உயரப் பறப்பதற்கான சிறகுகள் கிடைத்தன. திருச்சிராப்பள்ளி நகரில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பின் வாசலைத் திறந்து வைத்தவர் அண்ணன் திருச்சி என். சிவா. அறிமுகம் ஆன, முதல் திருச்சி பொதுக்கூட்டமே இந்தி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமாக அமைந்தது. என்னை அறிமுகம் செய்து ஆதிக்க இந்தியை எதிர்த்து அறப்போர் நடத்துவதற்கான அவசியம் குறித்து அண்ணன் சிவா உரையாற்றினார். அதற்குப் பிறகு நான் இரண்டு மணி நேரம் இடி மின்னல் மழையென தினவெடுத்த தொண்டர்களின் தோளுக்கும் உணர்வுக்கும் தீனி போடுவது போல் மூரி முழங்கினேன். 

ஒவ்வொரு ஊரிலும் பேசிய முதல் கூட்டத்தையும் அறிமுகம் செய்த பெருமக்களையும் எந்த நிலையிலும் நான் மறப்பதில்லை. அன்றிரவு நான் தங்கியிருந்த விடுதிக்கு அண்ணன் திருச்சி சிவா வந்து நீண்ட நேரம் என்னிடத்தில் அளவளாவினார். 

’’இளைஞரணியின் சார்பில் இதுவரை யாரும் நிகழ்த்தாத நிகழ்ச்சி ஒன்றை திருச்சியில் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறேன். காலை பத்து மணியில் இருந்து இரவு பத்து மணி வரை புதுமையான தலைப்பில் நாடே திருச்சியைத் திரும்பிப் பார்க்க வைக்கிற வகையில் நடத்தத் திட்டமிடுகிறேன். அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க நீ என்னோடு ஒத்துழைக்க வேண்டும் சம்பத். முத்திரை பதிக்கிற நாடறிந்த சொற்பொழிவாளர்களை எல்லாம் வரவழைத்து ஆளுக்கு ஒரு தலைப்பு கொடுத்து நிறைவுப் பேருரை நிகழ்த்த கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சிலாரையும் அழைப்போம். நாடதிர, நாடாள்வோர் குடை அதிர, கோலதிர, கொற்றத்தவிசு அதிர இளைஞரணி சார்பில் நாம் நிகழ்த்தப்போகும் நிகழ்ச்சி என்றென்றும் பேசப்பட வேண்டும். தலைமையின் கவனத்தைக் கவர வேண்டும். முதல் முழக்கம் உனதாக இருக்கட்டும். நீதான் தீயைப் பற்ற வைக்கப் போகிறாய். யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். வித்தியாசமான தலைப்பு இன்னும் புலப்படவில்லை. நன்றாக யோசித்துச் சொல்’’ என்று சொல்லிவிட்டு நடுநிசி தாண்டி அண்ணன் சிவா விடைபெற்றார். 

என் விழிகள் தூங்க மறுத்தன. நித்திரை அந்நியமாயிற்று. கழக மாநாடுகளில், பயிற்சிப் பாசறைகளில் இதுவரை பேசாத தலைப்பாக இருக்க வேண்டும். இளைஞர் தம் நெஞ்சில் கனலேற்றுவது மாதிரியும் இருக்க வேண்டுமே என்றெல்லாம் விடிய விடிய யோசித்தேன். காலை உதய வேளையில் பொறியில் எலி சிக்கிக் கொண்டது போல் என் பொறியில் தலைப்பு ஒன்று சிக்கிக்கொண்டது. சிக்கெனப் பிடித்துக்கொண்டேன்.   ‘வரலாற்றில் வாழும் ஆண்டுகள்’ என்பதுதான் தலைப்பு. காலை புலர்ந்ததும் தலைப்பை சிவா அண்ணனிடம் சொன்னபோது  “அற்புதம்டா, அபாரம்டா, இதுபோதும்டா அசத்திவிடலாம்டா” என்று அடா போட்டுச் சொன்னபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. 

காலத்தீயில் கருகிப் போகாத கொள்கைகளை வென்றெடுக்கப் பிறந்த திராவிட இயக்கத்தின் நீண்ட பயணத்தில் தாக்கத்தையும் மாற்றத்தையும் உருவாக்கிய ஆண்டுகள் என நானும் அண்ணனும் நீண்ட நேரம் விவாதித்து ‘ வரலாற்றில் வாழும் ஆண்டுகள் 1938, 1939, 1940, 1944, 1945, 1947, 1950, 1952, 1957, 1962’ எனப் பத்து ஆண்டுகளைத் தலைப்பாக்கினோம். காந்தமெனத் தலைப்பு எல்லோரையும் கவர்ந்து கொண்டது. நிகழ்ச்சியின் வெற்றிக்குக் கட்டியம் கூற தன்னை மறந்து கண்ணுறக்கம் இல்லாமல் ஓடி ஓடி உழைத்த அண்ணன் சிவாவின் தளராத முயற்சியால் நிகழ்ச்சி களை கட்டியது. 
முதலில் 1938 குறித்து உரையாற்றுவதற்கு அழைக்கப் பட்டேன். பார்வையாளர் மாடத்தில் முதல் வரிசையில் நடுநாயகமாக நாஞ்சிலார் அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். தேனடையில் தேனீக்கள் திரண்டிருப்பது மாதிரி அடர்த்தியான பெருங்கூட்டம் ஆர்வம் பொங்க அரங்கத்திலும் வெளியிலுமாக இருந்தது எனக்கு முதல் அனுபவம். பொதுக்கூட்டம் என்றால் பல்வேறு தரப்பினரும் பார்வையாளர்களாக ஆங்காங்கே நிற்பதும் உட்கார்வதும் ஆக இருக்கும் சூழல் அச்சத்தைத் தராது. அரங்கக் கூட்டம் என்பதால் கொஞ்சம் ஆடித்தான் போனேன்.  “என் பேச்சை நாஞ்சிலார் என் எதிரில் இருந்து கேட்பதன் மூலம் பாக்கியம் எனக்கும், துர்பாக்கியம் நாஞ்சிலார்க்கும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்திருக்கிறது’’ என்று நகைச்சுவையாக ஆரம்பித்தேன். அனைவரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டேன்.

“பூமிப்பந்தில் சிந்திச் சிதறிக்கிடக்கும் தமிழர்கள் தன்மான உணர்வுடன் தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்து  நிற்க வழியும் வகையும் செய்த ஆண்டு 1938தான். முக்கால் நூற்றாண்டு கால திராவிட இயக்கப் போராட்டத்தில் 38-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் திராவிட இயக்கத்தைத் திசையெட்டும் கொண்டு சேர்த்தது. அதிகாரத் திமிரோடும் ஆதிக்க வெறியோடும் 125 உயர்நிலைப் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்று இராஜாஜி ஆணை பிறப்பித்தது 1938-ல்தான். கலைகள் கொலுவிருக்கும் காஞ்சி நகரில் சர் கே. வி. ரெட்டி நாயுடு தலைமையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது 1938-ல்தான். தாழ்ந்த தமிழகம் தலை நிமிர தன்மானக் கவிதைகளை எழுதிய பாவேந்தர் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுதி குஞ்சிதம் குருசாமி முன்னுரையுடன் வெளிவந்தது 1938-ல்தான். ஆதிக்க இந்தியை வீரியத்தோடு எதிர்ப்பதற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ விசுவநாதத்தை செயலாளராகக் கொண்டு பட்டிவீரன்பட்டி  டபிள்யூ.பி.செளந்திர பாண்டியனாரும் உமா மகேசுவரனாரும் கே. எம். பாலசுப்ரமணியமும் அங்கம் வகிக்க உங்கள் திருச்சியில் தென்னூரில் இந்தி எதிர்ப்பு வாரியம் தோற்றுவிக்கப்பட்டது 1938-ல்தான். கட்டாய இந்தியை எதிர்த்து உண்ணாநிலை அறப்போரை ஸ்டாலின் ஜெகதீசனும் பல்லடம் பொன்னுசாமியும் தொடங்கியது 1938-ல்தான்.  இந்தி எதிர்ப்புப் போரின் முதல் சர்வாதிகாரி ஈழத்தடிகள், முதலமைச்சர் இராஜாஜி வீட்டு முற்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது 1938-ல்தான். சென்னை செளகார்பேட்டை இந்து தியாலஜிகல் பள்ளி முன்பு டாக்டர் தருமாம்பாள், மலர் முகத்தம்மையார், பட்டம்மாள், மூன்று வயது மங்கயர்க்கரசி, ஒரு வயது நச்சினார்க்கினியன், கைக்குழந்தையுடன் வந்த சீத்தம்மாள் ஆகிய மங்கைநல்லார் மறியல் செய்ததற்காகக் கைதானது 1938ல்தான். 32 குழந்தைகளுடன் 73 தாய்மார்
கள் உண்ணாமுலையம்மையார் தலைமையில் மறியல் செய்து கைதாகி சிரித்துக்கொண்டே சிறை சென்றது 1938 ல்தான். இந்தி எதிர்ப்புப் போராட்டச் செய்திகளை வெளியிட்ட விடுதலை ஏட்டின் பதிப்பாளர் தந்தை பெரியாரின் உடன் பிறந்த அண்ணன் ஏ. வெ. கிருஷ்ணசாமியும் விடுதலை ஏட்டின் ஆசிரியர் பண்டித முத்துசாமியும் கைதாகி கடுங்காவல் தண்டனை பெற்றது 1938 ல்தான். 

கதீட்ரல் சாலை இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் உரையாற்றியதற்காக ஊமைகளைப் பேசவைத்த பிருந்தாவன் அறிஞர் அண்ணா கைதாகி காராக்கிரகம் சென்றதும் 1938-ல்தான். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளும் ஈழத்துச் சிவானந்த அடிகளும் சண்முகானந்த அடிகளும் இந்தியை எதிர்க்கப் போராட்டத்தில் குதித்தது 1938-ல்தான். சக்கரவர்த்தி இராஜகோபாலச்சாரியை நோக்கி சட்டமன்றத்தில் சர் ஏ. டி. பன்னீர்செல்வம், ராஜா சர் முத்தையா செட்டியார்,  திவான் பகதூர் அப்பாதுரை பிள்ளை கணைகள் வீசியது 1938 ல்தான். மொழி வழி மாநிலங்கள் அமைப்பதற்கான உறுதிமொழியை வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற் குழு அறிவித்தது 1938-ல்தான். இந்தியை எதிர்ப்பதற்கான வரலாற்று நியாயத்தை தமிழ்நாடும் மக்களும் ஏற்றுக் கொண்டது 1938-ல்தான். நீதிக்கட்சியும் சுய மரியாதை இயக்கமும் ஈடில்லா வெற்றியைப் பெற்றது 1938 ல்தான். இந்தி கட்டாயம் என்று அறிவித்த இராஜாஜி ‘இந்திமொழி தமிழ் நாட்டுக்கு அந்நிய மொழி’ என்று அறிவிக்க அவருக்கு ஞான உபதேசம் வழங்கிய வருடம் 1938 தான். 

சிறையிலிருந்த தந்தை பெரியாருக்கு நீதிக்கட்சியின் தலைவர் என்ற சிம்மாசனம் கிடைத்தது 1938-ல்தான். தன் தோளுக்கு விழுந்த மாலையை நீதிக்கட்சியின் 14 வது டிசம்பர் மாநாட்டில் பெரியாரின் தாளுக்கு அணிவித்து சர் ஏ. டி. பன்னீர்செல்வம் மகிழ்ந்ததும் நெகிழ்ந்ததும் 1938-ல்தான். மறைமலை அடிகளாரின் மாசிலாமகள் நீலாம்பிகை அம்மையார் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் தந்தை ஈ. வெ. ராவுக்கு பெரியார் என்ற பட்டத்தை  வழங்கியது 1938-ல்தான். காலத்தை வென்ற இயக்கமாய் கழகம் பயணம் பூண பாதை சமைத்துத் தந்தது 1938-ல்தான். நீங்களும் நானும் சந்திக்கவும் சங்கமிக்கவும் இன்று காவிரியின் கரையில் கூடவும் நம்மைத் தேடவும் விதை தூவியது 1938 தான். 

எந்த ஆண்டு எத்தனை எட்டு வைத்துப் பார்த்தாலும் 1938-ஐ எட்ட முடியாது. எட்டிப்பார்க்க நான் முயன்றேன். 1938-ஐ அலங்கரிக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றியறி தலையுடையேன்’’என்று சொல்லி முடித்தேன். மாரி மழை பொழிந்ததுபோல் அரங்கத்தில் இருந்த அனைவரும் ஆரவாரித்து மகிழ்ந்தார்கள். பேசி முடித்துவிட்டு நாஞ்சிலார் அருகில் வந்தேன். எட்டில் இவ்வளவு சமாச்சாரமா என என் கன்னத்தில் தட்டினார். அந்த நாள் மறக்க முடியாத நாள்.

(இன்னும் பேசுவேன்...)

x