மூன்று மொழிகளில் முன்னோடி!


மொழிமாற்றம் செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது பாலசந்தரின் தெலுங்குப் படமான ‘மரோ சரித்திரா’ (மற்றொரு சரித்திரம்). அதை இந்தியில் தயாரித்தார் எல்.வி.பிரசாத். அதுதான் ‘ஏக் துஜே கேலியே’ (1981). அந்தப் படத்தின் 100-வது நாள் வெற்றி விழா, மும்பையின் மராட்டா மந்திர் திரையரங்கில் நடந்தது. அதில் கலந்துகொண்ட எல்.வி.பிரசாத், திடீரென்று கண்கள் கலங்கி அழுதுவிட்டார். ‘தென்னகம் தாண்டி இந்திப் படவுலகில் அழுத்தமான தடம் பதித்த திரைமேதை எதற்காக அழுகிறார்; அதுவும் படத்தின் வெற்றி விழாவில்?’ என்று காரணம் தெரியாமல் பலரும் ஆச்சரியப்பட்டார்கள். சட்டென்று கண்கள் கலங்கி அழுதது ஏன் என பிரசாத் பேசும்போது சொன்னார், ‘‘தொடக்க காலத்தில் நான் பம்பாய் வந்தபோது, ஸ்டுடியோவில் வேலை இல்லாத நாட்களில் இந்தத் திரையரங்கில் காவலாளியாகவும் டிக்கெட் கிழிப்பவனாகவும் வேலை செய்தேன். அதே திரையரங்கிற்கு ஒரு வெற்றிப் படத்தின் தயாரிப்பாளராக வந்திருக்கிறேன். பழைய நினைவுகள் என்னை நெகிழ வைத்துவிட்டன’’ என்றார் பிரசாத்.

சகாப்த நாயகன்

உண்மைதான்! ஆந்திராவிலிருந்து அனைவரும் மதாராஸ் பட உலகுக்கு வந்துகொண்டிருந்த காலத்தில், பிரசாத் மட்டும் பம்பாய்க்குச் சென்றார். மவுனப்படங்களில் நடிகனாகியே தீரவேண்டும் என்ற உறுதியுடன், தனது மனைவி உட்பட யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தனது 20-வது வயதில் பம்பாயில் அடிவைத்தார். அது பற்றி அவரே கூறுகிறார். “ நடிகனாகும் ஆசையில, கல்யாணம் ஆகி மூணு வருஷமே ஆகியிருந்த நிலையில மனைவி, மகளை விட்டுட்டு, நூறு ரூபாயோட பம்பாய்க்கு ரயிலேறினேன். அங்கே போய்ச் சேர்ந்த உடனே, கோஹினூர் ஸ்டுடியோ பக்கத்துல இருந்த ஒரு ஹோட்டல்ல ரூம் எடுத்துத் தங்கினேன். மூணே நாள்ல நூறு ரூபாயும் கரைஞ்சுபோச்சு. என்னோட நிலைமையைப் பார்த்த ஹோட்டல் முதலாளி, வேற இடம் பார்த்துக்கச் சொன்னார். அந்தச் சமயத்தில, ஸ்டுடியோ எதிர்ல இருந்த ஒரு தையற்கடைக்காரர் எனக்குத் தங்க இடம் கொடுத்தார். காலையில் எழுந்ததும் அந்தத் தையற்கடையை சுத்தம் செய்து விட்டு வேலை தேடி ஸ்டுடியோவுக்குக் கிளம்பிவிடுவேன். தாரிலால் என்ற பஞ்சாபி நண்ப‌னின் உதவியால் ‘ஸ்டார் ஆஃப் த ஈஸ்ட்’ என்ற மவுனப் படத்தில் ஒரு சின்ன வேடத்தில் முதன்முதலில் நடிச்சேன். ஆனால், அது வெளியாகவில்லை. அன்று மேக்-அப் போட்டுக் கொண்டவர்கள் வெறும் நடிகர்கள் மட்டுமல்ல; ‌ரிப்ளெக்டர் பலகை, காமிரா ஸ்டாண்டு தூக்குவது உள்ளிட்ட வேலைகளையும் செய்தாகணும். அப்பத்தான் வாய்ப்புகள் கிடைச்சுது. மெல்ல மெல்லத்தான் உயர முடிஞ்சது” என நினைவு கூர்ந்திருக்கிறார் பிரசாத். இப்படி மவுனப்பட காலத்தின் உச்சத்தில், பேசும்பட சகாப்தம் தொடங்கிய முப்பதுகளில் பம்பாய் படவுலகில் பாடம் பயின்றதாலோ என்னவோ, அவர், தென்னிந்திய சினிமாவின் சகாப்தம் ஆனார்.

இழுத்து வந்த நண்பர்

x