இதுவும் ஒரு விளம்பர தந்திரம்!


அதிமுக சர்க்காருக்கும் நடிகர் விஜயின் ‘சர்காரு'க்கும் உருவான மோதலை நாடே வேடிக்கை பார்த்தது. இதில், சம்பந்தப்பட்டவர்கள் பரபரப்பு காட்டினார்களே தவிர, ‘இது எல்லாமே படத்தை ஓடவைக்க கையாளும் தந்திரங்கள்தானே’ என்று சாமானியர்கள் எளிதில் கடந்துவிட்டார்கள்.

சமீபகாலமாக, படங்களுக்கு பூஜை போடும்போதே வழக்கும் நீதிமன்றத்துக்கு வந்துவிடுகிறது. ஏராளமான பணம், அறிவு, உழைப்பை மூலதனமாகக் கொண்டு இயங்கும் திரைப்பட உலகில் யாருக்கும் அநீதியோ இழப்போ நேர்ந்துவிடக் கூடாது என்பதால் நீதிமன்றங்களும் இந்த வழக்குகளை அக்கறையோடு விசாரித்து தீர்வு சொல்கின்றன. ஆனால், அப்படியொரு தீர்வை அறிவிப்பதற்கு முன்பே படம் தொடர்பான சர்ச்சைகள் றெக்கை கட்டிப் பறந்து, அதுவே வியாபார விளம்பரமாக அமைந்துவிடுவதுதான் நிதர்சனம்.

அரசின் செயல்பாடுகளை நிழல் திரையில் வீரமாக எதிர்க்கும் நடிகர்கள், அதையே தங்கள் நிஜ வாழ்க்கை முகம்போலக் காட்டிக் கொள்வதற்கும் இந்த சர்ச்சைகள் உதவியாகி விடுகின்றன. யாரோ ஒரு கதாசிரியரின், வசனகர்த்தாவின், இயக்குநரின் அறிவையும் ஆக்ரோஷத்தையும் இந்தத் திரை நட்சத்திரங்கள் தங்களின் ஆளுமை போல காட்டிக்கொண்டு லாபம் அடைவதுதான் பெரும்பாலும் நடக்கிறது.

நாட்டு மக்களின் நலன் பற்றி திரையில் அனல் தெறிக்கப் பேசும் எந்த நடிகருமே, படம் பார்க்க வருகிற மக்களிடம் பறிக்கப்படுகின்ற முதல் நாள் ‘அதிரடி வசூல்’ பற்றி வாயைத் திறந்ததாகச் சரித்திரம் இல்லை! உண்மையான கோபமும் வேகமும் கொண்டுதான் அரசை விமர்சித்துப் படம் எடுக்கிறார்கள் என்றால், எதிர்ப்புக் கிளம்பி வியாபாரம் முடங்கும் நிலை வந்ததும், ‘சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுகிறோம்’ என்று பின்வாங்கவேண்டிய அவசியம் என்ன?

x