'குட்டிப்பை!’- கர்ப்பிணிகளின் ‘மருந்து’ உணவு!


கே.கே.மகேஷ்

போட்டியே தேவையில்லை. கண்ணை மூடிக்கொண்டு முதல் பரிசைக் கொடுத்துவிடலாம். தென்மாவட்டங்களிலேயே ‘ஆட்டுக்கறி’ நுகர்வு அதிகமுள்ள மாவட்டம் மதுரை என்று. ஒரே இந்தியா, ஒரே வரி, ஒரே உலகம், ஒரே சந்தை... என்றெல்லாம் மாறிவிட்டாலும், மதுரையில் மட்டும் ஆட்டுக்கறி விலை தலை தெறிக்கும். நெல்லைக்கும் மதுரைக்குமே குறைந்தது 100 ரூபாயாவது விலை வித்தியாசப்படும். மதுரையுடன் ஒப்பிட்டால், மூளை, ரத்தம், மண்ணீரல் (சுவரொட்டி) என ஆட்டின் ‘ஸ்பேர் பார்ட்ஸ்’ அனைத்துமே நெல்லையில் மிக மலிவு.

மதுரை கசாப்புக்கடைகளில், கொஞ்சம் அதிர்ச்சியான காட்சிகளையும் பார்க்கலாம். அதில் ஒன்று குட்டிப்பை! சில நேரங்களில் சினை ஆட்டை அறுக்க நேரிடும்போது அதன் வயிற்றில் இருக்கும் குட்டியை (கருப்பையுடன்) எடுத்து விற்பனைக்கு வைத்திருப்பார்கள். தீபாவளி நேரத்தில் நிறைய கடைகளில் அவற்றைப் பார்க்க முடிந்தது.

“ஆட்டு எலும்பைச் சாப்பிட்டால், நம்ம எலும்புக்கு பலம்ணே. அதேமாதிரிதான் ஆட்டோட குடல் நம்ம குடலுக்கும், அதோட மூளை நம்ம மூளைக்கும் நல்லதுங்கிற நம்பிக்கை இருக்கு. அப்படி, ஆட்டுக்கருவை சமைத்துச் சாப்பிட்டா, மாசமா இருக்க பெண்களுக்கு நல்லதுன்னு ஒரு நம்பிக்கை. அதனால, உண்டாகியிருக்க பெண்கள் இதை வாங்கிச் சாப்பிடுவாங்க” என்றார் கடச்சனேந்தலில் கறிக்கடை வைத்திருக்கும் மலைச்சாமி.

x