நல்லா இருக்கு உங்க நியாயம்!
குமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பெருந்தலைவராக இருந்தவர் பகவதிபெருமாள் என்ற சந்தோஷ். ஓபிஎஸ்-ஸின் தம்பி ஓ. ராஜாவுக்கு மிக நெருக்கமான இவர், மாவட்ட ஜெ பேரவை துணைத் தலைவராகவும் இருந்தார். தனக்கு மேலிடத்து செல்வாக்கு இருந்ததால் உள்ளூரில், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் செயல்பாடுகளை சந்தோஷமாக விமர்சித்து வந்தார் சந்தோஷ். இந்த நிலையில், சந்தோஷ் இப்போது கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டுள்ளார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரோடு சகவாசம் வைத்திருந்ததால் இந்த நடவடிக்கை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு பலமாக சிரித்த சந்தோஷ், “நல்லா இருக்கு உங்க நியாயம்... அந்த நபரோடு நான் மட்டுமா தொடர்பில் இருந்தேன். மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அத்தனை பேரும்தானே அவரோடு நட்பில் இருந்தார்கள்; இன்னமும் இருக்கிறார்கள்” என்றாராம். இப்போதைக்கு சந்தோஷை அடக்கி வாசிக்கச் சொல்லி அட்வைஸ் தந்திருக்கிறதாம் ஓபிஎஸ் டீம்!
இவரு அவங்களோட ஸ்லீப்பர் செல்!
சர்தார் சிலை திறப்பு விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜுவும், மாஃபா பாண்டியராஜனும் கலந்துகொண்டார்கள். இவர்களைத் தவிர்த்து, மதுரை தெற்குத் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வான சரவணனும் சிறப்பு அழைப்பாளராக விழாவில் கலந்து கொண்டார். சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த சரவணன், ஏற்கெனவே ஆனந்தி பென் படேல் குஜராத் முதல்வராக இருந்தபோது, மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிரா சமூகத்து பிரமுகர்கள் சிலரை குஜராத்துக்கு அழைத்துச் சென்று அங்கே மூன்று நாள் கேம்ப் அடித்துவிட்டுத் திரும்பினார். இப்போது, சிறப்பு அழைப்பாளராக அழைக்கும் அளவுக்கு தனது பாஜக தொடர்புகளை வலுப்படுத்தியிருக்கும் சரவணன், வாய்ப்புக் கிடைத்தால் பாஜக-வில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் மதுரை மக்கள்.