என்றென்றும் ஏழுமலையான் 15: ஏழுமலையானின் புகழ் பாடிய அன்னமைய்யா


15-ம் நூற்றாண்டில் இந்தியா முழுமைக்கும் ஏழுமலையானின் புகழைத் தனது பஜனை, கீர்த்தனைகள் மூலம் பரவச் செய்தவர் அன்னமைய்யா. அன்னமாச்சாரியார் என கவுரவமாக அழைக்கப்படும் இவரது வம்சாவளியினர் இப்போதும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சேவை செய்து வருகிறார்கள். 

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், தாள்ளப்பாக்கம் எனும் குக்கிராமத்தில், 09-05-1408-ல்,  நாராயண சூரி - லக்கமாம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் அன்னமைய்யா.  இவர், ஏழுமலையானின் கட்கம் அதாவது கத்தி அவதாரம் எனவும், கோயிலில் உள்ள மணியாக  இப்போதும் இவர் இருப்பதாகவும் ஒரு நம்பிக்கை. புரந்தரதாசர் அன்னமைய்யா ஒரு தெய்வப் பிறவி எனக் குறிப்பிட்டுள்ளார். 

32,000 பாடல்கள்

இளம் வயதிலேயே வைஷ்ணவ சம்பிரதாயத்தில்  ஈடுபாடு கொண்ட அன்னமைய்யா, ஏழுமலையான் மீது மிகுந்த பக்தியையும் கொண்டிருந்தார். அந்த பக்தியே இவரை திருப்பதி ஏழுமலையான், ராமர், லட்சுமி நரசிம்ம சுவாமிகள் குறித்து சுமார் 32,000 பாடல்களை இயற்றி அவற்றைக் கீர்த்தனைகளாகப் பாடவைத்தது. அந்தப் பாடல்களில் வெறும் 1200 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்கள் செப்புத் தகடுகளில் வடிக்கப்பட்டு ஏழுமலையானின் உண்டியலுக்கு எதிரே இருக்கும் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

அன்னமைய்யாவின் பாடல்கள் தெலுங்குக் கலாச்சாரத்தின் சின்னமாகவே விளங்கி வருகிறது. மிகவும் எளிய முறையில் சாமானியரும் புரிந்துகொள்ளும் விதத்தில் இவரது கீர்த்தனைகள் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். தென்னிந்திய மரபுகள் அடிப்படையில் இவர் இயற்றிய பாடல்களை, இவருக்குப் பின்னால் வந்த சந்ததியினர் போற்றிப் பாதுகாத்து புகழ்பெறச் செய்தனர். 

இராமானுஜரால் ஈர்க்கப்பட்டவர்

பஜனை பாடல்களைத் தொகுத்து வழங்கிய பெருமையும் அன்னமைய்யாவையே சாரும். பல்லவி, அனுபல்லவி, சரணம் போன்ற சங்கீத மரபையும் இவர்தான் தொடங்கி வைத்ததாகவும் ஒரு தகவல் உண்டு.  இவரது மனைவி திம்மக்கா தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவர். இவர், ஏழுமலையானின் பாடல்களை பஜனையாகவும், கீர்த்தனைகளாகவும் இயற்றி அவற்றை ஊர் ஊராய் சென்று பாடி வந்தார். அன்னமைய்யாவின் மகன் திருமலாச்சாரியார், பேரன் சின்னய்யா ஆகியோரும் தென்னிந்திய இசை வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்தவர்கள். பேரன் சின்னய்யா,  ‘அன்னமாச்சாரியின் சரிதம்’ எனும் தலைப்பில் அன்னமைய்யாவின் வாழ்க்கை சரிதத்தை எழுதியுள்ளார். 1948-ல் அச்சுக்கு வந்த இந்த நூல் மூலமாகவே அன்னமைய்யாவை நாம் அறிய முடிகிறது. 

வைணவ ஆச்சாரியாரான இராமானுஜரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அன்னமைய்யா,  வைணவத்தைத் தழுவி பல கீர்த்தனைகளைப் பாடினார்.  இராமானுஜர் குறித்தும் கீர்த்தனைகளைப் பாடி உள்ளார். சாதி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் அன்னமைய்யாவுக்குப் பெரும் பங்கு உண்டு. இவரது பாடலில் ஒன்றான ‘பிரம்மம் ஒக்கடே பர ப்ரம்ஹம் ஒக்கடே’ அதற்குச் சிறந்த உதாரணம். 

வட மாநில மக்களுக்காக  ‘சங்கீத கீர்த்தனம்’ எனும் நூலையும் எழுதியிருக்கும் அன்னமைய்யா, ஏழுமலையானைப் போற்றி, ஏழுமலையான் மகிமை என்ற நூல்களையும் எழுதியுள்ளார். தெலுங்கில் இவர் 12 சதகங்களை  இயற்றியுள்ளார். ஒரு சதகம் என்பது 100 பாடல்களால் உருவானதாகும். இதில் வெங்கடேஸ்வரா சதகம் என்கிற ஒரு நூல் மட்டுமே கிடைத்துள்ளது. இவரது காலகட்டத்தில்தான் பக்திப் பாடல்கள், பஜனைகள், கீர்த்தனைகள் புகழ்பெற்றன. அவை க்ருதி, திவ்யநாமா, கீர்த்தனா, சங்கீர்த்தனா எனும் பல பெயர்களில் கொண்டாடப்பட்டன. பாடல்களை இயற்றியதோடு மட்டுமின்றி தனக்கு முன்பு வாழ்ந்த மகான்கள் பலர் இயற்றிய பாடல்களைத் தெலுங்கில் மொழிபெயர்த்தும் இருக்கிறார் அன்னமைய்யா. 

8 வயதில் திருமலைக்கு வந்தவர்

8 வயதில் வீட்டுக்குச் சொல்லாமல் திருப்பதிக்கு வந்து, அதன் பின்னர் திருமலைக்குப் படியேறிச் சென்று ஏழுமலையானைத் தரிசித்த அன்னமைய்யா அப்போது முதல் அவரது பரம பக்தரானார். இவரது பாடல்களின் பெருமையை அறிந்த  கிருஷ்ண தேவராயரின் தாத்தா டங்கடூரு மன்னர் சால்வ நரசிங்கராயுலு, தாள்ளப்பாக்கம் சென்று அவரைத் தனது ஊருக்கு அழைத்துச் சென்று அரசகவியாக்கினார். 

அப்போது, தன்னைப் பற்றியும் ஒரு பாடல் எழுதுமாறு நரசிங்கராயுலு அன்னமைய்யாவைக் கேட்க,  “ஏழுமலையான் குறித்து எழுதும் என்னுடைய கரம் அற்ப மனிதர்கள் குறித்து எழுதாது” என்றாராம் அன்னமைய்யா. இப்படிச் சொன்னதற்காக சில நாட்கள் சிறை வாசமும் அனுபவித்தார். சிறைவாசம் முடிந்து வெளியில் வந்தவர், ஏழுமலையானுக்கு சங்கீர்த்தன சேவை புரிவதற்காகத் திருமலைக்கு வந்தார். 95 வயது வரையிலும் ஏழுமலையானின் காலை சுப்ரபாதம் தொடங்கி, அனைத்து ஆர்ஜித சேவைகளிலும் பங்கேற்று, அந்தந்த சேவைகளுக்குத் தகுந்தவாறு பாட்டெழுதி மெட்டுக்கட்டி பாடினார் அன்னமைய்யா. அப்போதெல்லாம் இவரது பாட்டுகளைக் கேட்கவே பக்தர்கள் திருமலையில் தங்கிச் செல்வதுண்டு. 

மனம் வருந்திய மன்னர்

பின்னாளில், மன்னர் சால்வ நரசிங்கராயுலு தனது தவறுக்காக மனம் வருந்தி திருமலைக்கு வந்து அன்னமைய்யாவிடம் மன்னிப்புக் கேட்டார். அப்போது அன்னமைய்யாவின் பாடல்கள் இருந்த ஓலைச்சுவடிகளில் பல தீயில் கருகி நாசம் ஆகிவிட்டதை அறிந்த மன்னர், எஞ்சிய ஓலைச்சுவடிகளில் இருந்த  1,200 பாடல்களையும் செப்புப் பட்டயங்களில் பதிந்து பத்திரப்படுத்தினார். இதில் 1000 பாடல்களைத் திரைப்பட இயக்குநர் ராகவேந்திர ராவ் தலைமையில் இசையாக மெட்டமைத்து இசைத்தட்டுகளாக வெளியிட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அன்னமைய்யாவின் வம்சாவளியினர் தினமும் அதிகாலையில் சுப்ரபாத சேவையின்போது தம்பூராவுடன் ஏழுமலையான் கோயிலுக்கு வருகிறார்கள். அவர்களுடன் கோயில் அர்ச்சகர்கள், ஜீயர் சுவாமிகளின் பிரதிநிதி, தேவஸ்தான அதிகாரி, மற்றும் யாதவ குலத்தோர் உடன் செல்கின்றனர். யாதவ குலத்தோர் முதலில் சுவாமியைத் தரிசித்த பின்னர், சுப்ரபாத சேவை தொடங்கும். அப்போது, அன்னமைய்யா குடும்பத்தைச் சேர்ந்த வம்சாவளியினரும் அந்தச் சேவையில் பங்கேற்று அன்னமைய்யா கீர்த்தனைகளைப் பாடி சேவை புரிந்து வருகின்றனர். இரவு நடைபெறும் ஏகாந்த சேவையிலும் அன்னமைய்யாவின் வம்சாவளியினர் பங்கேற்று, கீர்த்தனைகள் பாடி சேவை செய்கிறார்கள். அன்னமைய்யா 23-02-1503-ல் திருமலையில் பரமபதம் அடைந்தாலும் அவர் இயற்றிய பாடல்களும் கீர்த்தனைகளும் இன்றைக்கும் ஏழுமலையான் வாசலில் அவரது பெயர் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

108 அடி உயரத்தில் அன்னமைய்யா சிலை

ஏழுமலையான் புகழைக் கீர்த்தனைகள் மூலம் பரவச் செய்ததால், இவரது பெயரில் ஆந்திராவில் பல கல்லூரிகள், அறக்கட்டளைகள் இயங்கி வருகின்றன. ஆன்மிகத் தொண்டும் பல இடங்களில் இவரது பெயரில் நடந்து வருகின்றன. அன்னமைய்யா பிறந்த ஊரான தாள்ளப்பாக்கம் பகுதியில், அவருக்குக் கடந்த 2008-ல், 108 அடி உயரத்தில் பிரம்மாண்டமான சிலையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிறுவியது. இச்சிலையை மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி திறந்து வைத்தார். அந்த இடத்தின் அருகிலேயே அன்னமைய்யாவுக்குக் கோயில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த இடம் ஒரு சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. 

(முகங்கள் வரும்...)

x