நீரோடிய காலம் 6: போட்டுப் பொங்கல்!


அலையாத்திக் குறுங்காடுகள், படகுகள் மிதக்கும் ஆறு, விறகுக்கு முள் சுமந்துகொண்டு செல்லும் பெண்கள் என்று பார்த்துக்கொண்டே பழையாறைக்குச் சென்றோம். கடல் உணவுப் பிரியர்கள் அந்த ஊருக்குள் நுழைவார்கள் என்றால் ஊரின் மணத்தில் சொக்கிப்போவார்கள்.
ஊருக்குள் நுழையும்போதே எம்.ஜி.ஆர் சிலையும் உடைந்துபோன படகில் நிற்கும் அண்ணாவின் சிலையும் நம்மை வரவேற்றன. கடலோரப் பகுதிகளில் அதிமுகவை ரொம்பவும் எளிதாக நுழைத்திருக்கிறார் எம்ஜிஆர். அவர் நடித்த படகோட்டி, மீனவ நண்பன் ஆகிய திரைப்படங்கள் இதற்குப் பிரதான காரணம் என்பதை மறுக்க முடியாது.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மீன்பிடித் துறைமுகம் இது. ஒருங்கிணைந்த தஞ்சை பகுதியில் இப்படியொரு மீன்பிடித் துறைமுகத்தைப் பற்றி வெளியில் உள்ளவர்கள் பலருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றாலும் இங்கும் பிரம்மாண்டமானதொரு வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இங்கிருந்து மீன்களை வெளியூர், வெளி மாநிலங்களுக்குக் கொண்டுசெல்வதற்கென்று காத்திருக்கும் லாரிகள், அவற்றில் ஏறிவந்த வெளியூர்க்காரர்கள் என்று ஒரு குட்டி இந்தியாவையும் அங்கே பார்க்க முடிந்தது.

கொள்ளிடம் கடலில் கலக்கும் இடம் என்பதால் அங்கு இருப்பது கொள்ளிடமா கடலா என்று தெளிவாகப் பிரித்துச் சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு இரண்டும் கலந்திருந்தன. கூடவே, படகுகளின் டீசலும் புகையும் கலந்து மசைபோல தண்ணீர் காணப்பட்டது.
பிடித்து வந்த மீன்களைப் படகுகளிலிருந்து இறக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். மீன்கள் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டாலும் மீனுக்கு இணையாக இறால், கணவாய், ஆக்டோபஸ் இன்னும் விசித்திரத் தோற்றம் உடைய, விசித்திரப்பெயர்களுடைய கடல் வாழ் உயிரினங்கள் பலவும்அங்கே தொழில்பட்டுக்கொண்டிருந்தன. கோடவுனுக்குக் கொண்டுசெல்லும் உருப்படிகளுக்கு இணையாக,
தேவையற்றவை என்று கீழே கொட்டுபவையும் அதிகமாக இருந்தன. அவற்றை ‘கசறு’ என்று சொல்கிறார்கள். அவையெல்லாம் நடைமேடையில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தன. இந்தக் கசறை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டோருடைய வாழ்க்கை இருக்கிறது. தினமும் பல லட்சங்கள் புழங்கும் தொழில் இது.

கசறுகளைக் காயவைத்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் பேசினோம்.
“இதையெல்லாம் எதுக்காகக் காயவைக்கிறீங்க அம்மா?”
“இதைக் காயவைச்சா கோழித் தீவனத்துக்கு ஆகும். நாமக்கல்லேருந்து வந்து வாங்கிக்கிட்டுப் போவாங்க. எங்களுக்கு ஒரு நாளைக்கு நானூறு ஐந்நூறு கிடைக்கும். ஆனா, மழை பேஞ்சதுன்னா எல்லாமே நாசமாயிடும்” என்றார் அந்த அம்மா.
“உங்களுக்கு இந்த ஊருதானா? சுனாமி வந்தப்ப உங்களுக்கு ஏதும் பாதிப்பா?”
“இதே ஊருதான். சுனாமில எங்க வீடு, ஆடு மாடு எல்லாம் போச்சு. இங்க முந்நூறுக்கும் மேல சுனாமில செத்துப்போனாங்க. நாங்க தப்பிச்சது தெய்வச் செயல்தான். அதக்கப்புறம் சிதம்பரம் பக்கம் போய் கொஞ்ச நாள் பொழைப்ப நடத்த பாத்தோம். ஆயிரம் இருந்தாலும் தெரிஞ்ச இடம், தெரிஞ்ச தொழில பாக்குறது மாதிரி வருமான்னு இங்கேயே வந்துட்டோம். எங்களுக்கு மூணுபசங்க, ஒரு பொண்ணு. பொண்ண பக்கத்துல ஒரு ஊருல
கட்டிக்கொடுத்திருக்கோம். இரண்டு பசங்க படகுல போய்க்கிட்டு இருக்காங்க. ஒரு பையன் படிச்சிட்டுருக்கான்.”

“உங்களுக்குப் பண்டிகை விழாவெல்லாம் எப்படிம்மா?” என்று கேட்டேன்.
“எங்களுக்கும் தீவாளி, பொங்க, மாட்டுப்பொங்கல்லாம் உண்டுங்க” என்றார்.

“மாடே இல்லாம எப்படிங்க மாட்டுப்பொங்கல்?” என்று கேட்டேன்.
“எங்களுக்கு போட்டுங்கதான் மாடுங்க. அதனால,போட்டு இருக்குறவங்க மாட்டுக்குச் செய்யுறதுமாதிரியே போட்டுக்கும் மாலை போட்டு அலங்கரிச்சு மாட்டுப் பொங்க கொண்டாடுவாங்க. அந்தப் பண்டிகையெல்லாம் தவிர எங்க குலசாமி கோட்டீஸ்வரனுக்கு விமரிசையா விழா எடுப்போம்” என்று சொல்லிவிட்டு, “எம் பேரு ராசலச்சுமிங்க. எம்.எஸ்.சி. ராசலச்சுமின்னு போட்டுக்குங்க. எம் புருஷன் பேரு சாமிநாதனுங்க” என்று சொல்லிவிட்டுத் தீவனத்தை மேற்பார்வை பார்ப்பதில் ஈடுபட்டார் அந்த அம்மா.

அந்த மீன்பிடித் துறைமுக வளாகத்தில் மீனவ மக்களின் முன்னோடித் தலைவர் சிங்காரவேலரின் சிலை வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் சுனாமி நகர் என்ற பெயரில், மக்களுக்கு நிவாரணமாக ஒரு குடியிருப்புப் பகுதி கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தாலும் ராஜலட்சுமியைப் போல சில பேர் கடலுக்கு அருகிலேயே மறுபடியும் வந்து குடியிருக்கிறார்கள்.

அடுத்ததாக, பழையாறு கருவாட்டு சங்கத் தலைவர் பொன்னையனைச் சந்தித்தோம்.
மீனவர்களின் வாழ்க்கை, மீன்பாடு போன்றவற்றைப் பற்றி கேட்டோம்.
“எத்தனை வகையான மீன் இங்க கிடைக்குதுங்க?” என்று கேட்டோம்.

“அதுக்கு கணக்கு வழக்கு இல்லீங்க. மத்தி, சூரை, கணவாய், நெத்திலி, கழுங்காய், வஞ்சிரம், கவலை, வாவல், சேனா, வாளை அப்படின்னு சொல்லிக்கிட்டே போலாம். அதுல சேனா மீனு இருக்குதே அது பாம்பு மாதிரி இருக்கும். காய வைச்சுக் கருவாடா சாப்பிட்டா மருத்துவ குணம் அதிகம். அதுக்கு நல்ல மவுசு இருக்கு. அப்புறம் சென்னாக்குன்னி. இறாலுலயும் வகைவகையா கிடைக்கும். கல் இறாலு, செமா இறாலு, துள்ளு இறாலு, வழிச்ச இறாலு, வெள் இறாலு, கரம்ப இறாலு…” என்று நம்மைத் திக்குமுக்காட வைத்தார்.

“இங்குள்ள மீனவர்களோட வாழ்க்கையை சுனாமிக்கு முன்னாடி, சுனாமிக்குப் பின்னாடின்னு ரெண்டா பிரிச்சிடலாம். சுனாமி வந்தப்போ படகு வச்சிருந்தவங்களுக்கெல்லாம் படகு உள்ளிட்ட சாமான்லாம் கிடைச்சிச்சு. ஒண்ணும் இல்லாதவங்க நிலைமைதான் பாவம். சுனாமினால மீனவங்களுக்கு நல்ல லாபம்னு வெளியில உள்ளவங்க பேசலாம். எங்களோட இழப்புகளும் கஷ்டநஷ்டங்களும் எங்களுக்குத்தான் தெரியும்” என்றார்.
“மீன்பிடித் தொழிலை மையமாக வைத்து எத்தனை விதமான தொழில்கள் இங்கே இருக்கு?” என்று கேட்டேன்.

“இழுவலை போறாங்க, அதாவது படகுல இருந்தபடியே வலையை இழுத்துக்கிட்டுப் போறது. அடுத்தது போடு வலை, அதாவது கடலுக்குள்ள கிட்டத்தட்ட 100 கி.மீ. தூரம் வரை போய் படகுலருந்து வலையை வீசுறதுதான் போடு வலை. நாகப்பட்டினம், கடலூர், மெட்ராஸ் வரைக்கும்கூட போயி தொழில் பண்ணுவாங்க. நாலஞ்சு நாலு தங்கலுக்குப் போவாங்க. அப்படிப் போவும்போது பிடிக்கிற மீனையெல்லாம் ஐஸ்பெட்டியில வச்சிருவாங்க. ஒரு வாரம் இருந்து வர்றவங்களும் இருக்காங்க, தினமும் போய் வர்றவுங்களும் இருக்காங்க. அது மட்டுமில்லாம ஏற்றுமதி, கருவாடு, கோழித்தீவனம் அப்படின்னு இந்த மீன்பிடித் துறைமுகத்த நம்பிப் பல வகையான தொழில்கள் இருக்கும். பதப்படுத்துறதும் முக்கியமான வேலைதான். பதப்படுத்துற கிடங்கு ஒண்ணு அரசாங்கம் கட்டிக்கொடுத்துச்சி. அது சரியா இயங்கல. கூடவே, முகத்துவாரம் வேற தூர்ந்துபோச்சி. அதைச் சரியா மொறையா தூர்வார்றதுல்ல. மீனு நல்லா கிடைக்கிறப்ப மறியல் வேற வந்துறுது (மறியல் என்றால் மீன்பிடித் தடைக்காலம்). அந்த மறியல் காலத்தக் கொஞ்சம் தள்ளிவைச்சா நாங்களும் பொழச்சிப்போம்.

வெளிநாட்டுக்காரனுங்க மீன் எண்ணெய் எடுக்குறதொழிற்சாலைகள் இங்க கொண்டுவந்து வச்சதுக்கப்புறம் மீன்பாடு ரொம்பவும் குறைஞ்சு போயிடுச்சுங்க. தொழிற்சாலைகளோட கழிவுகளைக் கடல்ல கலக்குறதுனால இங்குள்ள தண்ணியோட தரம் பாதிக்கப்பட்டு மீன்களும் அழிய ஆரம்பிச்சிடுச்சி. அதுனாலதான் எல்லை தாண்டி மீன் பிடிக்கப் போகிறதெல்லாம் நடக்குது. அதனாலதான் எல்லாப் பிரச்சினையும். எங்களோட வாழ்க்கைக்கும் இதோ காயுதே இந்தக் கருவாடோட வாழ்க்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லீங்க” என்று பொன்னையன் முடித்தபோது அந்த இறுதி வரி நெஞ்சைப் பிளந்தது. ஆம்! இருக்கும்போதே கருவாடாக ஆகிறது மீனவர் வாழ்க்கை!

கொள்ளிடம் தன் கறுப்புத் தண்ணீரில் கறுப்பு அலைகள் எழுப்பி, பொன்னையன் சொன்னதை ஆமோதித்துக்கொண்டிருந்தது.

தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையங்களும் கடல் சூழலை சுபடுத்திக்கொண்டிருக்கின்றன. பழையாறைக்கு வடக்கே உள்ள பரங்கிப்பேட்டையில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல காவிரி கடலோடு கலக்கும் இடமான பூம்புகாருக்கு அருகில் பிள்ளை பெருமாநல்லூர் கிராமத்திலும் தனியார் அனல்மின் நிலையம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலக்கின்றன. வளர்ச்சி என்ற பெயரில் கடல் மீதும் மீனவர்களின் வாழ்க்கை மீதும் எத்தனையோ விதமான தாக்குதல்கள் இப்படித்தான் அரங்கேற்றப்படுகின்றன.

தரையில் தூக்கிப்போட்ட ராட்சச மீன் ஒன்று காற்றுக்காகத் துடித்துக்கொண்டிருப்பதைப் போல அந்த மீன்பிடித் துறைமுகத்தின் தோற்றம் இருந்தது. கொள்ளிடத்தைக் கொள்ளுமிடத்தைப் பார்த்தாயிற்று, இனி புறப்பட வேண்டியதுதான்.

(சுற்றுவோம்...)

x