நானொரு மேடைக் காதலன் - 15


கன்னித்தமிழ் வளர்க்க கம்பன் கழகத்தை செந்தமிழ் வளர்த்த செட்டிநாட்டுத் தலைநகர் காரைக்குடியில் கம்பனடிப் பொடி சா. கணேசனார் எந்த முகூர்த்தத்தில் தொடங்கினாரோ தெரியவில்லை. காரைக்குடி கம்பன் கழகத்தை அடியொற்றி நாடெல்லாம் கம்பனின் பெயரால் கழகங்கள் தொடங்கப்பட்டன. எல்லை கடந்து எல்லோரையும் நேசிக்கிற, நேசிக்கப்படுகிற தமிழன்பர்கள் கம்பன் கழகச் சுமையை தத்தம் தோளில் சுமந்துகொண்டது கம்பன் செய்த தவமா, கன்னித் தமிழ் தந்த வரமா தெரியவில்லை!
 
கழகங்களின் பயணங்களில் தொய்வு ஏற்பட்டாலும்  கம்பன் கழகத்  தமிழ்ப்பணிகளில் தொய்வோ, தேக்கமோ ஏற்படாமல் கம்பன் கழகத்தை, ஈன்ற குழவியை எடுத்து வளர்க்கும் தாயென அதைத் தாங்கி நிற்பவர் வழி நடத்துவது கண்டு மகிழாதாரும் நெகிழாதாரும் இல்லை. இயக்க மேடைகள் ஆனாலும் இலக்கிய மேடைகள் ஆனாலும் சமூகப் பிரக்ஞையோடுதான் பேசி வருகிறேன். தமிழால் தமிழர்களை ஆற்றுப்படுத்த முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை என்னில் இன்னும் மிச்சமிருக்கிறது. நடு நாட்டின் தலைநகர் விழுப்புரம் நகரில் இயங்கி வருகிற கம்பன் கழகத்தில் உரையாற்ற அழைப்பு வந்தபோது, “என்ன தலைப்பில் உரையாற்ற வேண்டும்...” என்று கேட்டேன்.  “நீங்களே தலைப்பைச் சொல்லுங்கள்” என்றார்கள்.  ‘கதி ஒன்று கண்டதுண்டோ' என்ற தலைப்பைக் கொடுத்தேன். கம்பனில் மூழ்குகிறேனே தவிர இன்னும் முத்தெடுக்கவில்லை. கம்பனில் ஆழம் கண்ட பெருமக்களின் அருகில் நிற்பதற்குக்கூட அருகதையற்றவன் நான். ஆனாலும் தேர்வுக்குப் படிக்கிற ஒரு பொறுப்புள்ள மாணவனைப்போல் விழுப்புரம் கம்பன் கழக மேடையை அலங்கரிக்க ஆயத்தமானேன். 

“படைத்த பாத்திரங்களின் வாயிலாக கம்பன் சொல்லும் வரிகளைக் திரும்பத் திரும்பக் கேட்டாலும் தித்திப்பாகத்தான் இருக்கும். தமிழுக்குக் கதியாக வாய்த்த கம்பனே சொன்னதுதான் கதி ஒன்று கண்டதுண்டோ என்ற மணி வாசகம். கம்பன் பாட்டை தலைமுறைக்கு எழுதி வைத்த சீட்டு என்றான் திருவோடுகளில் தங்கக்காசு வீசிய கண்ணதாசன். என் தேசத்து வாலிபன் மதியை மயக்கி, உடலை உருக்குலைத்து உயிரிழப்பதற்கும் காரணமாக இருக்கிற மதுவை மாந்துவதில் ஒவ்வொரு நாளும் தன்னை இழந்து வருகிறான். சமூகத்துக்குக் கேடும் அறத்துக்கு ஊறும் அதனால் விளைகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மதுவை விற்பதற்குக் கூச்சப்படவில்லை.  ‘மது குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு’ என்று எழுதி வைத்துவிட்டு மது குடிப்பவனின் தலையெழுத்தோடு விளையாடுகிறது அரசு. 

‘மதுவும் நஞ்சும் வேறல்ல...’ என்றான் வான்புகழ் வள்ளுவன்.  நஞ்சு ஒருவனது உயிரைத்தான் காவு கேட்கும். ஆனால், மதுவோ இந்தச் சமூகத்தின் எதிர்காலத்தையே காவு கேட்கும்.    ‘துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்’ என்று கோபத்தின் உச்சிக்கே போகிறார் வள்ளுவர்.  ‘எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை’ என்றார் சம்பந்தர். ஒப்பிலாத சமுதாயம் அல்லவா சாத்தியமாக வேண்டும். இந்தக் கவலை கம்பனுக்கு இருந்தது. கார்காலம் வந்ததும் வருவேன் என்ற சுக்ரீவன் கார்காலம் வந்தும் வரவில்லை. சுக்ரீவனைச் சந்திக்க சிவந்த கண்களுடன்  சீற்றத்துடன் வருகிறான் இலக்குவன். அவனது தாமரைத் திருவடிகளை வாலியின் மகன் அங்கதன் வணங்குகிறான். அவனிடத்தில், தான் வந்த தகவலை சுக்ரீவனிடம் சொல்லச் சொல்கிறான் இலக்குவன். இலக்குவனின் ஆறாத சீற்றத்தைச் சுக்ரீவனிடம் தெரிவிக்கிறான் அங்கதன். இலக்குவனின் சினத்துக்கு என்னதான் காரணம். நான் எந்தத் தவறும் செய்யவில்லையே என்று சாதிக்கிறான் சுக்ரீவன்.

அங்கதனோ சுக்ரீவனிடம்,  ‘கார்காலத்தில் படைகளுடனும் பரிவாரங்களுடனும் வருவேன் என்று சொன்னதை மறந்தாய். செல் வத்தால் செருக்கடைந்தாய். காலத்தில் செய்ய வேண்டிய கடமையை மறந்தாய். அதனால்தான் இலக்குவனுக்கு உன் மேல் கோபம்’ என்றான் அங்கதன். தனது நிலை குறித்து வருந்திய சுக்ரீவன்,  ‘இலக்குவன் வருகிற தகவலை எனக்கு ஏன் முன்பே சொல்லவில்லை?’ என்று அங்கதனிடம் கேட் டான். அதற்கு, ‘நான் சொன்னேன்... நீ மது  மயக்கத்தில் இருந்ததால் உன்னால் உணர முடியவில்லை’ என்று அங்கதன் சொன்ன போது கள்ளுண்டு கலங்கியதற்காக சுக்ரீவன் இரங்கினான். இராமபிரானால் அழிவிலாத செல்வம் பெற்ற பிறகும் இராமனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்ததற்குக் காரணம் கள்ளுண்ட மயக்கம் அல்லவா என்று கலங்கினான். 

‘நல்லவர்கள் வழி காட்டிய பின்னும் நெளியும் புழுக்களை அகற்றிவிட்டு மதுவை அருந்தும் இழிநிலைக்கு ஆளானேன். பற்றி எரிகிற நெருப்பை அணைக்க யாராவது நெய்யை வார்ப்பார்களா, நோவுற்ற காயத்தைப் பெற்றது போதாதென்று அதற்கு மேலும் கள்ளை அருந்துவது தகுதி ஆகுமோ, ஒருவன் பகைவன் தனக்கு செய்த தீமையையும் நண்பர்கள் செய்த உதவியையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். செற்றதும் பகைஞர், நாட்டார் செய்த பேருதவிதானும்’ என்று சொன்ன சுக்ரீவன், மது மயக்கத்தால் இந்த இரண்டையும் இழந்தேனே என்றும் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறான்.  ‘கள்ளுண்பவனை விட்டு திருமகள் விலகிச் செல்வாள். வஞ்சம் களவு, பொய், அறியாமை எல்லாம் கள்ளுண் பவனைச்  சூழும். நரகமே வாய்க்கும். இந்த மதுவைக் கையினால் தொடுவதும் பாவம் என்றும் உணர்ந்துகொண்டேன்’ என்றெல்லாம் சுக்ரீவன் கழிவிரக்கத்தோடு பேசுகிறான்.

அடைக்கலமாகத் தன்னை நாடி வந்தவரை எந்த விலை கொடுத்தும் பாதுகாப்பவரும், அடங்க மறுக்கிற பொறிகளை அடக்கி ஆள்பவரும், அறிவு என்னும் ஆழக் கடலில் மூழ்கிக் குளித்தவரும், இன்பத்தையும் துன்பத் தையும் சம நிலையில் வைத்துப் பார்ப்பவரும் ஆகிய இந்த உத்தமர்கள் அடைகின்ற நற்கதியை கள்ளுண்பவன் பெறுவானா என்பதே கம்பனின் கேள்வி. ‘அளித்தவர், அஞ்சும் நெஞ்சின் அடைத்தவ ரறிவில் மூழ்கிக் குளித்தவர், இன்ப துன்பம் குறைந்தவர், அன்றி, வேரி ஒளித்தவர் உண்டு, மீண்டு, இவ்வுலகு எலாம் உணர ஓடிக் களித்தவர் எய்தி நின்ற கதி ஒன்று கண்டதுண்டோ?’ என்பது கம்பன் பாட்டு. 

கள்ளுண்பதால் ஏற்படும் தீமைகளை சுக்ரீ வன் வாயிலாக துல்லியமாகச் சொல்லுகிறான் கம்பன். பகைவர்கள் இழைத்த தீமையை மட்டுமல்ல; நண்பர்கள் செய்யாமல் செய்த உதவியையும் கள்ளுண்பவன் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.  கள்ளுண்பவன் கற்ற கல்வியை மறந்து விடுகிறான். கண் முன்னால் கண்ட நிகழ்வுகளும் அவன் நினை வில் நிற்பதில்லை. பல் விதமான சாத்திரங் களைக் கற்றவர்களின் கட்டளையைப் புறந்தள் ளுதல், பெருமை வந்த வழியையும் சிறுமை அடைந்த காரணத்தையும் கள்ளுண்பவன் மறந்து விடுகிறான். ‘ தீவினை ஐந்தின் ஒன்றாம்’, ‘கஞ்ச மெல்லணங்கும் தீரும் கள்ளினால்’, ‘நறவினின் அரிய கேடு கையினால் அன்றி யேயும் கருதுதல் கருமம்’ என்றெல்லாம் மது அருந்துவோர் மனதிற் கொள்ள வேண்டிய வாசகங்களைக் கம்பன் பட்டியலிடுகிறான். கள்ளுண்பதால் திருவும், சீரும், பேரும் புகழும் இழந்து இழி நிலையுற்றவர்களுக்காக கம்பன் மிகுதியும் கவலைப்படுகிறான். 

மது அருந்துகிற ஒரு சமூகத்தில் எந்த மறு மலர்ச்சியையும் நிச்சயம் உருவாக்க முடியாது. மஞ்சள் நதிக்கரையில் செஞ்சீனத்தில் தன்னை நம்பி வந்த குடிசைவாசிகளின் கையில் ஆயுதத்தைக் கொடுத்து ஆறாயிரம் மைல்கள் நடந்தான் மாவோ. ஷியாங்சேக்கின் சாம்ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்டுவது மட்டுமே அவனது நோக்கம்  அன்று;  அபின் போதையில் அழிந்துகொண்டிருந்த செஞ்சீன இளைஞர்கள் விழிப்பதற்காகவும்தான். மாவோவின் பயணத் தின் விளைவால் நடுக்கடலில் அபினைச் சுமந்து நின்ற கப்பலை கலகக்காரர்கள் தீ வைத்து அழித்தார்கள். வரலாற்றில் அது அபினி யுத்தம் என்றே வர்ணிக்கப்படுகிறது. ஒரு அபினி யுத்தம் நடத்த வேண்டிய அளவுக்கு மதுவால் என் மாநிலம் சீர்கெட்டுக் கிடக்கிறது. அந்த யுத்தம் மேற்கொள்ள தேவையான நெருப்பை கதி ஒன்று கண்டதுண்டோ என்று கேட்ட கம்பனே நமக்குத் தருவான்’’ என்று சொல்லி முடித்தேன். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த கல்வியாளர்  “கம்பன் கவி அழகைக் கேட்பதை விட கம்பனின் சமூக அக்கறையைக் கேட்பதுதான் இப்போது தேவை. தேவையை நிறைவேற்றித் தந்த சம்பத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி’’ என்றார். என் நெஞ்சம் நிறைந்தது.

(இன்னும் பேசுவேன்...)

x