இரண்டு தலைமுறை இயக்குநர்!


தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். தொடக்ககாலத் திரையுலகில் ‘பெரியவர்’ என்று அழைக்கப்பட்டவர் இயக்குநர் ராஜா சந்திரசேகர். தமிழ் சினிமா முழுமையான வடிவத்தை எட்டுவதற்குப் பங்களிப்பைத் தந்த பலரில் இவரும் ஒருவர். எம்.கே. தியாகராஜ பாகவதர் எனும் சூப்பர் ஸ்டார் உதிக்க, அவரை வைத்து ‘அசோக்குமார்’, ‘ராஜமுத்தி’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களைத் தந்தவர். இருப்பினும் புதிய திறமைகளின் வரவால் ராஜா சந்திரசேகரால் திரைப் பயணத்தை தொடர முடியவில்லை. ஆனால், ‘சின்னவர்’ என்று அழைக்கப்பட்ட இவரது தம்பி டி.ஆர்.ரகுநாத், 40 ஆண்டுகள் திரையுலகில் தொடர்ந்து இயங்கி, அண்ணனால் எட்டமுடியாமல் போன உயரத்தைத் தொட்டார்.

டி.ஆர்.ரகுநாத் முப்பதுகள் தொடங்கி எண்பதுகளின் தொடக்கம் வரை படங்களை இயக்கினார். சண்டைக் காட்சிகள், நகைச்சுவை, குழுநடனம், சிறந்த இசையமைப்பு உள்ளிட்ட அம்சங்களை, டி.ஆர்.ரகுநாத்தின் திரைமொழி முதன்மைபடுத்தியது. திரைப்படம் ஒரு பொழுதுபோக்குக் கலை என்ற புரிதலுடன் அதைக் கையாண்டபோதும், வாழ்வின் முக்கிய மதிப்பீடுகள் ஒருபோதும் தோற்பதில்லை என்பதை அவரது படங்கள் எடுத்துக்காட்டத் தவறவில்லை. தனது திரைப் பயணத்தில் முதல் 15 ஆண்டுகளுக்கு பக்தி மற்றும் வாய்மொழி வரலாற்றுக் கதைகளை இயக்கினார் ரகுநாத். அவற்றில் அழுத்தமான கதையம்சத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த அதேநேரம், திரைக்கதை குறித்து அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. திரைக்கதை என்பதே படத்தொகுப்பு மேஜையில் உருவாகும் ஒன்று என உறுதியாக நம்பினார். திரையுலகில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப, தனது அடுத்த 15 ஆண்டுகளில் சமூக கதைகளை இயக்கத் தொடங்கினார். தொடக்கம் முதலே, ரசிகர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த முன்னணி நட்சத்திரங்களை வைத்து மட்டுமே படமெடுத்தார்.

பக்தியில் தொடங்கிய பயணம்

கே.சுப்ரமணியம் இயக்கத்தில் சி.வி.வி.பந்துலு, எஸ்.டி.சுப்புலட்சுமி இணைந்து நடித்த ‘உஷா கல்யாணம்’ (1936) என்ற படத்துடன் ‘கிழட்டு மாப்பிள்ளை’ என்ற மூன்று ரீல் நீளம் கொண்ட குறும்படத்தையும் இணைத்து வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது. 24 வயது ரகுநாத் இயக்கிய முதல் படம் அந்தக் குறும்படம்தான். அதன்பின் தனது அண்ணன் ராஜா சந்திரசேகர் டைரக்‌ஷன் மேற்பார்வையுடன் டி.ஆர்.ரகுநாத் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம் ‘ஜோதி அல்லது ராமலிங்க சுவாமிகள்’ (1939).

x