இவங்களுக்கு ரெண்டு தீபாவளி!


கா.சு.வேலாயுதன்

ஒரு தீபாவளியைக் கொண்டாடி கடப்பதற்கே நாக்குத் தள்ளிப் போகிறது. ஆனால், பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் இரண்டு தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்! அந்த இரண்டாவது தீபாவளிக்குப் பெயர் ‘மயிலந்தீபாவளி.’

அதென்ன மயிலந்தீபாவளி? “வாரத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் மாட்டுச் சந்தை கூடும் ஒரே ஊர் பொள்ளாச்சி. வியாழக்கிழமை கூடும் சந்தையில் பசு, காளை, எருமை, ஆடு என சகல கால்நடைகளும் இடம் பிடித்திருக்கும். அதற்கு அடுத்தநாள் கூடும் சந்தையில் வண்டிகளுக்கு பூட்டும் மயிலைக் காளைகள் மட்டுமே இருக்கும். அதனால் அந்த சந்தைக்கு மயிலஞ்சந்தை என்று பெயர். இரண்டாவது நாள் சந்தைக்கு மயிலஞ்சந்தை என்று பெயர் வைத்திருப்பதால், தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படும் தீபாவளிக்கு மயிலந்தீபாவளி என்று பெயர் வைத்துவிட்டார்கள்” என்கிறார் வடசித்தூர் நண்பர் குழுவைச் சேர்ந்த பொன் இளங்கோ.

வடசித்தூரில் வசிப்போரில் 25 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இங்குள்ள இந்துக்களில் கொங்குவேளாளக்கவுண்டர்களே அதிகம். அதிலும் செம்மங்
குலம் உட்பிரிவினரே மிகுதி. இந்த செம்மங்குலத்தவர்கள் செவ்வாய்க் கிழமைகளிலும், அமாவாசை தினத்தன்றும் அசைவம் சாப்பிட மாட்டார்கள். ஆனால், இவர்கள் வீடுகளில் தீபாவளிக்காகக் கறிவிருந்து அமர்க்களப்படும். பெரும்பாலும் தீபாவளி அமாவாசை அன்றுதான் வரும். அதனால் கறிவிருந்துக்காகவே தீபாவளிக்கு அடுத்த நாள் மயிலந்தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். மறுநாள் செவ்வாய்கிழமையாக இருந்தால் மயிலந்தீபாவளி மூன்றாம் நாளுக்குப் போய்விடும். அந்த வருடத்தில் மூன்று நாள்களுக்கு தீபாவளி கொண்டாட்டங்கள் நீடிக்கும்.
வெறுமனே கறி விருந்து மட்டுமல்ல... வாண வேடிக்கை, கோலாட்டம், கும்மியாட்டம் என கிராமியத் திருவிழாக்களும் மயிலந்தீபாவளியின் போது அமர்க்களப்படும். இந்த ஆண்டு மயிலந்தீபாவளிக்கு வடசித்தூர் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில் அந்தக் கிராமத்து மக்கள் சிலரை சந்தித்துப் பேசினேன்.

x