தெரிந்தோ தெரியாமலோ தீபாவளியும் இந்த முறை உச்ச நீதிமன்றம் வரைக்கும் பேசுபொருளாகி விட்டது - ஆரோக்கியமான ஒரு நல்ல விஷயத்தை நமக்கெல்லாம் வலியுறுத்திச் சொல்வதற்காக!
தீபாவளி என்றாலே அதில் பட்டாசும் ஒரு அங்கம்தான். ஆனால், இப்போதெல்லாம் தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பது என்பது பகட்டைப் பறைசாற்றும் விஷயம் போல் ஆகிவிட்டது. சுற்றுப்புறம் மாசுபடுவதையோ, அக்கம் பக்கத்தில் இருப்போர் அவதியுறுவதையோ பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆயிரம், பத்தாயிரம் வாலாக்களை வெடித்து காசைக் கரியாக்கி, தெருவையும் குப்பையாக்குகிறார்கள். தீபாவளிக்கு ஒரு மத்தாப்பு வாங்கிக் கொளுத்தக்கூட வசதி இல்லாத லட்சோப லட்சம் ஏழை வீட்டுக் குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி இவர்கள் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. வீட்டில் இருக்கும் வயதானவர்கள், மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருப்பவர்கள், கைக்குழந்தைகள் இவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகமான ஒலி மாசை ஏற்படுத்தும் பட்டாசுகளை இஷ்டத்துக்குக் கொளுத்திப் போட்டு குதூகலிக்கிறார்கள். இது எத்தனை பேரின் நிம்மதியைப் பறிக்கும் என்று ஏனோ சிந்திக்க மறுக்கிறோம்.
தீபாவளியை ஆனந்தமாய் கொண்டாட வேண்டியதுதான். அதற்காகக் கண்டபடி பட்டாசுகளை வெடித்து நமக்கும் நம்மைச் சார்ந்த இயற்கைக்கும் நாமே கேடு விளைப்பது எப்படி சரியான செயலாக இருக்க முடியும்? இதற்குப் பதிலாக இப்படிப் பட்டாசுக்காகச் செலவழிக்கும் பணத்தைக் கொண்டு விளிம்பு நிலை மக்களுக்கு உதவிடலாம். ஆதரவற்றோர் இல்லத்துக் குழந்தைகளுக்குப் புத்தாடை எடுத்துத் தந்து அவர்களையும் மகிழ்வுடன் தீபாவளியைக் கொண்டாட வைக்கலாமே!
இம்முறை தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதை உத்தரவாகக் கருதாமல் நமக்கான வழிகாட்டலாக எடுத்துக்கொண்டு இந்தத் தீபாவளிக்கு மட்டுமல்ல... இனி வரும் எந்தத் தீபாவளிக்கும் பட்டாசுக்கான முக்கியத்துவத்தைத் தவிர்ப்போம்!