கமுக்கமாய் ஒரு கணக்கு!


கமுக்கமாய் ஒரு கணக்கு!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குப் போவோம் என தினகரன் தரப்பு சொன்னபோது, அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம் என மவுனமாய் சிரித்தது ஆளும்கட்சி. ஆனால் இப்போது, “அப்பீலுக்குப் போகமாட்டோம்” என திடீரென அந்தர் பல்டி அடித்திருக்கிறார் தினகரன். இதை முன்கூட்டியே ஊகித்துவிட்டதால், இடைத்தேர்தலை இன்னும் ஓராண்டு காலத்துக்கு ஒத்திப்போடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஆளும்கட்சி. இது தொடர்பாக மத்திய அரசுக்கும் தங்களுக்கும் மீடியேட்டராக இருக்கும் அண்டை மாநிலத்து ஆளுநருடன் பேசினாராம் தமிழக முதல்வர். ஆனால், “ஓராண்டு காலத்துக்கெல்லாம் தேர்தலை தள்ளிப்போட வாய்ப்பில்லை” என்று ஆளுநர் கைவிரித்து விட்டாராம். இதையடுத்து, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் யாராவது ஒருவரை தங்கள் பக்கம் கமுக்கமாக இழுத்து அவர் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வைப்பதற்கான முயற்சியில் ஆளும் தரப்பு இறங்கியிருக்கிறது.

குமரி திமுகவுக்குள் குஸ்தி!

பத்மநாபபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ  மனோதங்கராஜ், குவாரிகளால் குமரி மாவட்டத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். இவருக்குத் துணையாக காங்கிரஸ் கட்சியின் குமரி மாவட்ட எம்எல்ஏக்கள் மூவரும் நிற்கிறார்கள். ஆனால், திமுக எல்எல்ஏக்களான முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்ராஜனும் ஆஸ்டினும் மனோவுக்கு எதிர் துருவமாய் நிற்கிறார்கள். கனிம வளக் கொள்ளை தொடர்பாக சட்டசபை  செயலாளருக்கு மனோதங்கராஜ் கொடுத்த புகார் கடிதத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூவரும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் கையெழுத்திட வில்லையாம்!

x