என்றென்றும் ஏழுமலையான் 14: வடை போய் லட்டு வந்த கதை!


திருப்பதி என்றதுமே ஏழுமலையானுக்கு அடுத்தபடியாக அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது திருப்பதி லட்டு. அந்த ஏழுமலையானின் திவ்ய பிரசாதம் அல்லவா அது!

அரங்கனுக்கு நித்தமும் பலவகையான பிரசாதங்கள் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டாலும் லட்டுக்கு இருக்கும் மகிமையே தனி. இன்றைக்கு நேற்றல்ல... 1715-ம் ஆண்டிலிருந்தே ஏழுமலையானுக்கு லட்டு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. ஆனால், அது சிறிய அளவில் மட்டுமே தயாரிக்கப்பட்டதால் அனைத்துப் பக்தர்களுக்கும் கிடைக்காத பிரசாதமாக இருந்தது. 20-ம்
நூற்றாண்டின் தொடக்கம் வரை திருமலையில் வடை பிரசாதமே பிரதான பிரசாதமாக இருந்தது. அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் லட்டுக்கு மகிமை கூடியது.

சந்தியா நைவேத்தியம்

மன்னராட்சியில் ஏழுமலையானுக்கு ‘சந்தியா நைவேத்தியம்’ என்ற முறை இருந்ததாக கல்வெட்டுத் தகவல்கள் சொல்கின்றன. அதன்படி, பெருமாளுக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியங்கள், மாலை நேரத்தில் மலையில் தங்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. திருமலையில் அப்போதெல்லாம் அன்னதான கூடங்கள் இல்லை. ஆனாலும் எத்தனையோ மைல்கள் கடந்து ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள், நாள் கணக்கில் மலையில் தங்கி ஒன்றுக்குப் பலமுறை அரங்கனைத் தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்புவது வழக்கம். அப்படியான நேரத்தில், எளிதில் கெட்டுப் போகாத வகையில் வடைகள் தயாரிக்கப்பட்டு அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், 19-ம் நூற்றாண்டில் வடையுடன் சேர்த்து பூந்தியும் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்திய பிறகுதான் 1940-லிருந்து திருமலையில் பூந்திக்குப் பதிலாக லட்டு பிரதானமானது.

திருப்பொங்கம்

ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதங்கள் ‘திருப்பொங்கம்’ என்று அழைக்கப்பட்டது. 1455-ல், இனிப்புப் பணியாரமும், அப்பமும், 1460-ல், வடையும், 1468-ல், அதிரசமும், 1547-ல், மனோகரப்படியும் பக்தர்களுக்கு திருப்பொங்கம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இவைகளில், வடையைத் தவிர மற்றவை எல்லாம் எளிதில் கெட்டுப் போகும் தன்மை கொண்டதாக இருந்ததால், திருமலைக்கு வரும் பக்தர்கள் வடை பிரசாதத்தையே வீடுகளுக்கு எடுத்துச் சென்று உறவுகளுக்கும் நட்புகளுக்கும் பகிர்ந்தனர்.

மிராசுகள் வசம்...

மதறாஸ் மாகாண கட்டுப்பாட்டில் திருப்பதி இருந்த போதே 1803-ம் ஆண்டு பிரசாத விற்பனை தொடங்கியது. அதற்கு முன்பு அனைத்துப் பிரசாதங்களும் பக்தர்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தன. முன்பு, பூந்தி தயாரிக்கும் பணியானது மிராசுகள் வசம் இருந்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பிறகும்கூட மிராசுகள் லட்டு தயாரிக்கும் பணியில் பங்குபெற்று வந்தனர். ஆனால், என்டிஆர் முதல்வராக இருந்தபோது இந்த மிராசு முறையை முழுமையாக ரத்து செய்துவிட்டார்.

தாளப்பாக்க பெரிய திருமலாச்சாரியார் ஏழுமலையான் கோயிலில் உற்சவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாண முறையை 1536-ல் தொடங்கினார். இதுவே தற்போது தினமும் நித்திய கல்யாண உற்சவமாக நடந்து வருகிறது. திருமணத்துக்கு வந்தவர்களுக்கு பூந்தியும், லட்டும் வழங்குவது தெலுங்கர்களின் கலாச்சாரம் என்பதால், சுவாமியின் திருக்கல்யாண உற்சவத்திலும் பக்தர்களுக்கு திருக்கல்யாண லட்டு பிரசாதம் வழங்கும் வழக்கம் இப்போதும் உள்ளது.

அப்போதெல்லாம் அரிசி மாவில் தயாரிக்கப்பட்ட லட்டுதான் பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப்பட்டது. அரிசி மாவு, வெல்லம் கலந்து தயாரித்த அந்த லட்டு பிரசாதம் ‘மனோகரம்’ என்றழைக்கப்பட்டது. கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே கோயிலில் இப்போதும் மனோகரம் தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழங்கப்பட்ட ‘உருண்டைக் கட்டி’ எனும் பிரசாதமும் அப்போது மனோகரம் என்றே அழைக்கப்பட்டது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் மனோகரம் தான் முக்கியக் கோயில்களில் பிரசித்திபெற்ற பிரசாதமாக இருந்ததாக ‘ஹம்ச விம்சதி’ எனும் நூல் விவரிக்கிறது.

லட்டில் மூன்று வகை

திருப்பதியில் 3 வகையான லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆஸ்தான லட்டு, திருக்கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என்பதே அந்த மூன்று வகை. ஆஸ்தான லட்டு சிறப்பு உற்சவ சமயங்களில் மட்டுமே தயாரிக்கப்படும் லட்டு பிரசாதமாகும். சைஸில் பெரிதாக இருக்கும் இந்த லட்டில் அதிக அளவில் முந்திரி, பசு நெய், உலர் திராட்சை, குங்குமப்பூ, ஏலம் எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கும். குறைந்த அளவிலேயே தயாரிக்கப்படுவதால் இது அனைவருக்கும் சாத்தியமில்லை. குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்களுக்கு மட்டுமே இந்த ஆஸ்தான லட்டு வழங்கப்படும். உற்சவ மூர்த்திகளுக்கு தினமும் நடக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்காகத் தயாரிக்கப்படுவது திருக்கல்யாண உற்சவ லட்டு. திருக்கல்யாணத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்த லட்டு வழங்கப்படும். புரோக்தம் லட்டு என்பது திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் வழக்கமான லட்டு பிரசாதமாகும்.

அன்னையின் மேற்பார்வையில்!

தினமும் 1.5 லட்சம் எண்ணிக்கையிலான லட்டுகள் திருமலையில் தயாரிக்கப்படுகின்றன. ஆனாலும் தேவை இருக்கிறது. ‘போட்டு’ என்றழைக்கப்படும் மடப்பள்ளியில் ஏழுமலையானின் தாயாரான வகுலமாதா திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. புதல்வனின் நைவேத்தியத்துக்காக தயாராகும் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை வகுலமாதாவே மேற்பார்வையிடுவது போல் இச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மடப்பள்ளியில் தயாராகும் ஒவ்வொரு நைவேத்தியமும் முதலில் வகுலமாதா முன் வைக்கப்பட்டு, அதன் பின்னர்தான் சுவாமிக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படும். சுவாமி தரிசனம் முடித்து தீர்த்தம், சடாரி பெறும் இடத்துக்கு அருகே வரும்போது, தனி அறையில் இருக்கும் வகுலமாதாவை நாம் தரிசிக்கலாம்.

திருமலை லட்டு தயாரிப்பு குறித்து நம்மிடம் பேசிய ‘போட்டு’ நிர்வாகத்தின் உதவி நிர்வாக அதிகாரி அசோக், “கோயிலில் உள்ள சம்பங்கி வளாகத்தில் லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. லட்டு தயாரிப்பதை ‘திட்டம்’ என்று சொல்லுவோம். இதற்காக 1950-ல், திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு அளவுகோலை நிர்ணயித்தது. 2001-ல் திருத்தி அமைக்கப்பட்ட திட்டம் அளவே இப்போது கடைப்பிடிக்கப்படுகிறது. ஒரு ‘திட்டம்’ மூலம் 5,100 லட்டுகள் தயாரிக்கலாம். இதன் எடை 803 கிலோ. 5,100 லட்டுகள் தயாரிக்க 165 கிலோ பசும் நெய், 180 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 4 கிலோ ஏலக்காய், 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கற்கண்டு, 30 கிலோ முந்திரி ஆகியவை தேவைப்படும்.

ஆரம்ப காலத்தில் விறகு அடுப்புகள் மட்டும்தான் பயன்படுத்தினார்கள். பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிக அளவில் லட்டுகளைத் தயாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் ஸ்டீம் அடுப்புகளுக்கு மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மடப்பள்ளியில் தயாராகும் லட்டுகளை விற்பனைக் கூடத்துக்கு எடுத்துச் செல்வதற்காக மூன்று கன்வேயர் பெல்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது தினமும் 1.5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. அதேசமயம் நாளொன்றுக்கு 8 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் திறன் கொண்ட இயந்திரங்கள் நம்மிடம் உள்ளன. லட்டு தயாரிக்கும் பணியில் 200 ஊழியர்கள் ஷிஃப்ட் முறையில் தினமும் 20 மணி நேரம் பணி செய்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து நாங்களும் பயணிக்கிறோம்” என்று சொன்னார்.

(முகங்கள் வரும்...)

x