விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 14: விஜயதரணி


என்.சுவாமிநாதன்

சம்பா சோறும்... பொரிச்ச மீனும்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்குரிய முகங்களில் ஒருவர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா எனப் பல அடையாளங்களைக் கொண்ட விஜயதரணி எம்எல்ஏ இந்த வார விஐபி விருந்து பகுதியின் சிறப்பு விருந்தினர்.

 “என்னோட விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிறைய ஹோட்டல்களில் சாப்பிட்டுருக்கேன். இந்தப் பக்கம்லாம் எந்த ஹோட்டலிலும் அன்னசாயம் கலக்க மாட்டாங்க. அதனால உடல்நலனுக்குப் பாதகம் இல்லாத ஆரோக்கிய உணவுகளை ருசிக்கலாம். குழித்துறையில் ‘அடுக்களை’ங்குற ஹோட்டலில் சாப்பாடு நல்ல ருசியா இருக்கும். களியல் பகுதிக்குப் போனா முருகன் கடையை மிஸ் பண்ணவே மாட்டேன். மீனை இலையில் வைச்சு அவிச்சுக் கொடுப்பாங்க. அந்த ஏரியாவில் அதுக்கு ‘மீன் பொழிச்சது’ன்னு பேரு.

புத்தன்சந்தை, மருதங்கோடு, மேல்புறம், மாஞ்சாலுமூடு ஜங்ஷன் பகுதிகளில் தேநீர் பிரமாதமா இருக்கும். என் தொகுதியில் நிறைய மலைகிராமங்கள் இருக்கு. அங்கெல்லாம் போகும்போது இங்க ஒரு டீயும், பழபஜ்ஜியும் சாப்பிட்டுட்டுப் பயணிப்பேன். இதேமாதிரி ‘பன்னிப்பாலம்’ பகுதியில் ஒரு சின்ன ஹோட்டல் இருக்கு. சுடச்சுட தோசை, அதுக்கு தேங்காய்ச்சட்னி, கூடவே ஆம்லேட்டும் அங்க நல்லா இருக்கும்.

விளவங்கோடு சுற்றுவட்டாரப் பகுதியோட உணவுமுறையே ஆரோக்கியமானது. அதுல எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா தம்புரான் ஹோட்டல்தான். இங்க உள்ள உணவுமுறைகள் தமிழக பாணியும், கேரள பாணியும் கலந்த கலவையாக இருக்கும். கேரள சம்பா பெரிய அரிசியில் சாதம் வடிப்பாங்க. நான் இப்போ டயட் ஃபாலோ பண்ணி ரொம்பவே எடை குறைச்சுருக்கேன். ஆனாலும் தம்புரானில் நம்பி சாப்பிடுவேன். காரணம் என்னன்னா, அந்த ரக அரிசியில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், புரோட்டீன் அதிகம். கூடவே, தொட்டுக்கிட அவியல், பொரியல், நெல்லிக்காய் ஊறுகாய், செரிமானத்துக்கு இஞ்சி சாறும் வைப்பாங்க.

 ஆனா இங்க என்னோட ஃபேவரட் மீன் பொரிப்புதான். கண்ணன்குழி வாள, சூறை, நெத்திலின்னு ஒவ்வொரு பொரிப்பும் ஒவ்வொரு ரகம். சுத்தமான தேங்காய் எண்ணெயில்தான் பொரிப்பாங்க. கடையில் இருந்தெல்லாம் மசாலா அயிட்டங்கள் வாங்குறது இல்லை. 

எல்லாமே அவுங்களாவே வீட்டில்தான் தயாரிப்பாங்க” என்று சொன்ன விஜயதரணி, “நெத்திலியை இந்த பக்கம் ‘நெத்தோலி’ன்னு சொல்லுவாங்க. மீன் குழம்பை ‘மீன்சாறு’ன்னும், ஊறுகாயை ‘அச்சாறு’ன்னும் சொல்லுவாங்க. தயிர் எடுத்துக்கிற பழக்கமும் இங்கு இல்லை. மோரை நல்லா தண்ணியாக்கிச் சாப்பிடுவாங்க. அதுக்கு ‘சம்பாரம்’ன்னு பேரு”என உணவுக்குறிப்புகளையும் பட்டியலிட்டார்.

குழித்துறையில் விஜயதரணி சொன்ன தம்புரான் ஹோட்டலுக்குப் பயணப்பட்டோம். பிரதான தார்சாலையில் ஒரு பள்ளத்தில் பாதாள ஹோட்டலைப் போல் இருந்தது. ஓலைக் கொட்டகை கடைதான். ஆனால், கூட்டம் நிரம்பி வழிகிறது. நாம் சென்றிருந்த நேரத்தில் கடையின் உரிமையாளர் ஜெயன் மீன்களைப் பொரித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பேசினோம். “எம்.எல்.ஏ அடிக்கடி இங்க சாப்பிட வருவாங்க. அவுங்க சொன்ன மாதிரி இங்க மீன்தான் ஃபேமஸ். கண்ணன்குழி வாள, சூறை, நெத்தோலி பொரிப்பு தினசரி போடுவோம்.

இந்த கடையை நடத்துறதுக்கு என் மனைவி வேணிதேவி பக்கபலமாக இருக்காங்க. உணவு தயரிப்பில் மீன்களை வாங்குறதில் இருந்தே தனிக்கவனம் செலுத்துவேன். தேங்காய்பட்டிணம் மீன்பிடித் துறைமுகத்துக்கு நேரடியாக போய் மீன்களை வாங்கிட்டு வருவேன். ஐஸ்ல வைக்காத நல்ல மீனா பார்த்து துறைமுகத்துக்கே போய் வாங்கிட்டு வர்றதுனால தரமான மீன்கள் கிடைச்சுடும்.

இரண்டாவது, தயாரிப்பு முறை. இஞ்சி, பச்சைமிளகு, வெள்ளைப்பூண்டு, வீட்டிலேயே தயாரிச்ச மசாலா, பெருஞ்சீரகப் பொடி, நல்ல மிளகுப் பொடி கலவையில் மீனை இரண்டு மணி நேரம் ஊறவைப்பேன். சாப்பிட உட்கார்ந்து ஆர்டர் செஞ்சதும் தான் அதை எடுத்து பொரிப்பேன். அப்போ மீனுக்கு மேல கொஞ்சம் மிளகுப்பொடியும் போடுவேன். சுத்தமான தேங்காய் எண்ணெயில் மட்டும் தான் பொரிப்பேன். அதுதான் தனி ருசி.” என்கிறார் ஜெயன்.

இங்கு ஒரு ஜானைவிட சற்றே நீளமான கண்ணன் வாள பொரிப்பு 60 ரூபாய் மட்டுமே! கடற்கரைகளில் இருக்கும் மீன்கடைகளைப் போல தலையோடு சேர்த்து சுடச்சுட பொரித்துக் கொடுக்கிறார்கள். இதேபோல் நெத்திலி மீன் ஒரு பிளேட் 50 ரூபாய். இதில் குறைந்தது 20க்கும் அதிகமான மீன்கள் இருக்கின்றன. சூறை மீன் ஒரு பீஸ் 25 ரூபாய். மீன் சாப்பாடு என சாப்பிட வருபவர்கள் இதில் எந்த மீனைக் கூட்டுச் சேர்த்து சாப்பிடுகிறார்களோ அதற்கு ஏற்ப சாப்பாட்டின் விலை மாறுபடும்.

அவியல், தினம் ஒரு காய்கறி பொரியல், இஞ்சிச்சாறு, நெல்லிக்காய் ஊறுகாய், மரவள்ளிகிழங்கு கறி, மீன்குழம்பு, சாம்பார், ரசம், மோர், முழுச்சாப்பாடு இத்தனையும் இங்குண்டு. ஆனால், இத்தனையையும் அசால்டாக ஓவர்டேக் செய்யும் மீன்களின் ருசிக்காகவே தம்புரானுக்குப் படையெடுக்கிறார்கள் குழித்துறைவாசிகள்.

படம் உதவி: ஜாக்சன்

x