நானொரு மேடைக் காதலன் - 14


தமிழ் பிறந்த இடத்தில், தமிழ் தவழ்ந்த இடத்தில், தமிழ் தகத்தகாயமாய் தலை நிமிர்ந்த இடத்தில் இருக்கிற தமிழ் அமைப்புகளை விட தமிழ் பேசும் இடங்களில் இருக்கிற தமிழ் அமைப்புகள் முறையாக இயங்குகின்றன என்பதே உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை. அந்த வகையில் சேலம் மாநகர் முதலிடத்தை முத்தான இடத்தைப் பெற்று உயர்ந்து நிற்கிறது. 

உறுதியான  இரும்புக்கும் நேர்த்தியான பட்டுக்கும் தித்திப்பான மாம்பழத்துக்கும் பெயர்போன சேலத்தில் எண்ணச் சலிக்காத தமிழ் அமைப்புகள் அன்னைத் தமிழுக்கு விழா எடுக்கும் அரும்பணியில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வருவது சேலம் பெற்ற சிறப்பு. முத்தமிழுக்கு விழா எடுப்பதில் முந்தி நிற்கும் சேலம் நகரில் தமிழுக்கு விழா எடுக்கும் அமைப்புகளில் சேலம் குகை நண்பர்கள் இலக்கியக் கழகம் குறிப்பிடத்தக்க ஒன்று. நா. கோ. கி என்றே அறியப்படுகிற நா. கோபாலகிருஷ்ணன் அவர்கள் நிறுவி முன்னெடுத்துச் செல்கிற அற்புதமான அந்த அமைப்பில் உரையாற்றுகிற உன்னத வாய்ப்பு எனக்கும் ஒருநாள் கிடைத்தது. எனது பயணத்தில் அந்த ஒருநாள் பலநாளாகப் பல்கிப் பெருகினாலும் அறிமுகமான அந்த நாளை இப்போது நினைத்தாலும் நெஞ்சு இனிக்கிறது.

எதிர்கதைத் தலைவர்களில் இதயம் கவர்ந்தவன் இராவணனா, துரியோதனனா என்ற தலைப்பில் நடந்த  பட்டிமன்றத்தில் இராவணன் அணிக்கு, அணி சேர்க்க வேண்டிய கடமை எனக்கு. பாங்கறிந்த பட்டிமன்றத்தின் நடுவராக இருந்து நா நாட்டியம் நிகழ்த்தியவர் நாவுக்கரசி இளம்பிறை மணிமாறன் அவர்கள். வியத்தகு சொல்லாற்றலும் விரிந்த ஞானமும் கொண்ட பேராசிரியை இளம்பிறை மணிமாறன் ஒரு ஆங்கிலப் பேராசிரியர். சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எண்ணக் கருவூலம் பேராசிரியர் அ. சி. ராவின் தலை மாணவி பேராசிரியை இளம்பிறை மணிமாறன். கம்பனும் கீதையும், சவுந்தர்யலகரி, அம்பிகை அழகு தரிசனம், திருக்குறட்பாவை, தன்னம்பிக்கை ஊட்டும் தாய், கம்பனில் வாழ்வியல் நெறிகள், கம்பனும் நானும், கம்பன் கிழக்கும் மேற்கும்  போன்ற வித்தகப் புத்தகங்களைத் தமிழுக்குத் தந்த தலை சிறந்த பேராசிரியை இளம்பிறை மணிமாறன், கால்சட்டை பருவத்திலேயே என்னை ஆட் கொண்டவர். குருநாதர் வரிசையில் வைத்து நான் நாளும் வணங்கும் பெருமாட்டி இளம்பிறை மணிமாறன்.
 
எதிர்கதைத் தலைவர்களில் இதயம் கவர்ந்தவர் துரியோதனனே என்று சாதிக்க வந்தவர் நான் பெரிதும் மதிக் கின்ற அண்ணன் தமிழருவி மணியன் அவர்கள். நாடும் ஏடும் அறிந்த பெருமக்கள் அவையில் நாவாடப் போகிறேன் என்ற எச்சரிக்கை உணர்வோடு மேடைக்குச் சென்றேன். மாலை நேரக் கூட்டங்களுக்கே குப்பையை அள்ளிக்கொண்டு கொட்டுவதுபோல ஆட்களை அள்ளிக்கொண்டு கொட்டுகிற அநாகரிகம் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் சேலத்தில் காலை நேரத்தில் குகையில் நடக்கும் இலக்கியக்  கூட்டங்களில்  இருக்கை கிடைக்காமல் நின்றுகொண்டு இருக்கிற கண் கொள்ளா காட்சியை ஆண்டுதோறும் நான் அனுபவிக்கிறேன். ஆனந்தத்தில் மிதக்கிறேன். அன்றும் காலை நிகழ்ச்சிதான்.

முகவுரை என்ற பெயரால் இராவணன் துரியோதனன் பலங்களையும் பலவீனங்களையும் தேனினும் இனிய தீந்தமிழில் தெவிட்டாத தமிழில் நடுவர் பெருமாட்டி உரையாற்றி முடித்தபோது மாமழை பொழிந்து ஓய்ந்தது மாதிரி இருந்தது.  அதற்குப்பின் இராவணன் அணியில் உரையாற்ற அழைக்கப்பட்ட நான் அன்று நடுங்கியது போல் என்றும் நடுங்கியதில்லை. “பேசுங்கள் சம்பத். ஏற்கெனவே நீங்கள் இராவணன் கட்சிதானே’’ என்று என் திராவிட இயக்க சார்பை சுட்டி என்னைத் தூண்டினார் நடுவர் பெருமாட்டி. “எதிர்கதைத் தலைவர்களில் துரியோதனனைக் காட்டிலும் ஏற்றமும் தோற்றமும் கொண்டவன் இராவணன்தான். இதை மத்தளம் கொட்டி வரிசங்கம் நின்றூதி எந்த மன்றத்திலும் என்னால் நிறுவ முடியும். எதிரணி எந்த இடத்தில் அடித்து இராவணனைக் காயப்படுத்தப்போகிறார்கள் என்பதை நான் அறிவேன். அதை நியாயப்படுத்துவது எனது நோக்கமல்ல. தென்திசை இராவணனை பாரதிதாசன் பார்த்த பார்வையிலும் நான் பார்க்க விரும்பவில்லை என்பதை முதலிலேயே இந்த மன்றத்தில் பதிவு செய்து விடுகின்றேன். 

காப்பியப் போகில் கம்பன் வழி நின்று இராவணன் புகழ் பாட வந்திருக்கிறேன். புலித்தோலை ஆடையாகக் கொண்ட சிவனும், பொன்னாடை புனைந்த கண்ணனும், அயனும் கூட்டணி வைத்துக்கொண்டாலும்  வெல்ல முடியாத வல்லமை பொருந்தியவன் எங்கள் இராவணன். ‘புலியின் அதள் உடையானும் பொன்னாடை புனைந்தானும் பூவினானும் நலியும் வலத்தர் அல்லர். தேவரின் இங்கு யாவர், இனி நாட்டில் ஆவார்’  என்று கம்பன் பாடுகிறான். அழகெலாம் ஒருங்கே பெற்ற மாதருடன் கூடும்போதும் ஊடும்போதும் தன்னை இழக்காத வணங்காமுடிக்குரியவன் எங்கள் இராவணன். ‘வென்றி மாதர் வலிய நெடும் புலவியினனும் வணங்காத மகுட நிரை’ என்பது கம்பன் வாக்கு.

ஆழக்கடலைக் கூட கடந்து விடலாம். ஆனால், இராவணன் நாட்டில் மேரு மலைக்கு நிகராக ஆகாயம் அளாவிய மதிலைக் கடப்பதுதான் கடினம் என்று ஆஞ்சநேயனே இராவணன் நாட்டுக் கட்டுக்காவலை வியந்து போற்றுகிறான். இப்படியொரு காவல் உள்ள நாடு உலகிலேயே இல்லை. நாட்டுமக்கள் செல்வச் செழிப்பில் திளைத்தார்கள். இன்பத்தை இடையறாது அனுபவித்து வாழ்ந்தார்கள். அவர்தம் கருவூலம் மட்டுமல்ல. அவர்களின் சிந்தனையிலும் நிறைவு இருந்தது. குழலும் யாழும் மயங்கிப் போகும் அளவுக்கு மழலை மொழி பேசும் தென்னிலங்கை மாதரசிகளுக்கு தேவமாதர்கள் அல்லவா ஏவல் செய்தார்கள். ஓவியம் நிகர்த்த மாதர்கள் அன்றலர்ந்த கற்பக மலரை அல்லவா சூடி மகிழ்ந்தார்கள். இன்பக் கேளிக்கையில் கணவனோடு ஈடுபட்டு இருந்தபோதும் இசை கேட்டு இன்புற்ற மகளிர்க்கு தேவமாதர் மஞ்சனமாட்டினர் என்றால் வான மகளிரைக் காட்டிலும் வசதியான வாழ்வு வாழ்ந்தார்கள் பெண்கள் இராவணன் நாட்டில். பெண்களை எந்த நாடு கண்களாக மதிக்கிறதோ அந்த  நாடல்லவா உயர்ந்த நாடு. ஆடியும் பாடியும் களிக்கின்றவர்கள் இராவணன் நாட்டில் உண்டே தவிர கவலைப்படுகிறவர்கள் யாரும் இல்லை. ‘ஆடுநர் பாடுநராகி வாழ்கின்றார், களிக்கின்றாராலால் கவல்கின்றார் ஒருவரைக் காணேன்’ என்று பூரித்துப் பாடுகிறான். உத்தமர்கள் உறங்கினார்கள். யோகியர்கள் துயின்றார்கள். அப்படி ஒரு அமைதி இராவணச் சீமையில் நின்று நிலவியது. ஆட்சியின் மாட்சியே இராவணன் பெருமையைக் கட்டியம் கூறுகிறது.
தனி மனிதன் என்ற கண்ணோட்டத்தில் இராவணனைப் பார்த்தாலும் இராவணனுக்கு ஈடு இல்லை. இணையும் இல்லை. புலத்தியன் மரபில் வந்தவன் இராவணன். மூவுலகையும் வென்று அடிமைப்படுத்தி தனியரசு கண்ட தமிழன் இராவணன். சிவ பெருமானின் மீது தீராக் காதல் கொண்டவன். 
கணக்கில்லாத வரங்களைப் பெற்றவன். பத்துத் தலைகளையும் இருபது கரங்களையும் பெற்றுச் சிறந்தவன். ‘எவராலும் வெல்லப்பட மாட்டாய்’ என்று இறைவனாலே கொடுக்கப்பட்ட வரமுடையவன். மூன்றுகோடி வாழ்நாளையும் முயன்று பெற்ற அரிய தவங்களையும் பெற்றுச் சிறந்தவன். திக்கயங்களை வென்று அந்த வெற்றியின் அடையாளமாய் தந்தங்களை மார்பிலே தாங்கிய நிகரிலாத வீரன் இராவணன். 

தசை வலியால் தலை நிமிர்ந்தவனல்லன் இராவணன். ஆன்ம பலத்தால் வன்மை பெற்றவன். நன்மை பெற்ற வன். மண்டியிடாத மாவீரன் அவன். சரணடை யாத சரித்திரம் அவன் சரித்திரம். ஏற்றுக்கொண்ட நிலைப்பாடு சரியோ தவறோ அதற்காக உயிர் துறந்தவன். இராவணனின் வெற்றியும் வீரமும் வரத்தால் கிடைத்ததல்ல. அவனது ஆள் வலியாலும் தோள்  வலியாலும் கிடைத்தது. இதைத்தான் கம்பன் ‘உலகனைத்தும் செருக்கடைந்த புயவலி’ என்கிறான். பொற்பினுக்கு அணியினைப் புகழின் சேர்க்கையை கற்பினுக்கு அரசியை கண்ணின் நோக்கினான் என்பதைத் தவிர யாதொரு குற்றமும் எங்கள் இராவணன் இழைத்ததில்லை. எப்படிப் பார்த்தாலும் எங்கள் இராவணன் இதயம் கவர்ந்தவன்தான், துரியோதனனைக் காட்டிலும். எங்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படுவது உங்களுக்குப் புலப்படாமல் போனால் விதி என்று நொந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இன்னும் அழைத்தால் வருவேன்’’ எனச் சொல்லி அமர்ந்தேன். கனமான தலைப்பை கச்சிதமாக கற்றறிந்த சபையில் சொல்லி முடித்த நிறைவு இன்றும் இருக்கிறது. என்றும் இருக்கும்.

(இன்னும் பேசுவேன்...)

x