ஜனநாயகம் தலை நிமிரச் செய்யவேண்டும்!


பதினெட்டு எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகரின் முடிவைச் சரியென உறுதிப்படுத்தி இருக்கும் உயர் நீதிமன்றம், அந்தத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்துவதற்கு இருந்த தடையையும் விலக்கிக் கொண்டிருக்கிறது.

உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து இருவேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டாலும், எது எப்படியாகினும் அந்தத் தொகுதிகளில் உடனடியாகத் தேர்தல் நடத்தி புதிதாக மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்ய வேண்டும் என்பதுதான் மக்கள் மத்தியில் பரவலான கருத்தாய் இருக்கிறது. அதுதான் உண்மையான ஜனநாயகமும்கூட!

மக்கள் பிரதிநிதிகள் ஐந்தாண்டு காலம் தங்களுக்காகப் பணி செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால், இடையில் ஏற்படும் சில விரும்பத்தகாத சம்பவங்களால் மக்கள் பிரதிநிதிகள் பதவி இழக்க நேரிடும் போது அவர்களைத் தேர்வு செய்த தொகுதிமக்களும் அந்தத் தொகுதியும் மாலுமி இல்லாத கப்பல் போல கவனிப்பாரற்று விடப்படுகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பாகக் கடமையாற்றும் சமயத்திலேயே தலையாய பிரச்சினைகள் தீர்க்கப்படாத அவலங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவால் ஏற்கெனவே இரண்டு தொகுதிகள் இடைத் தேர்தலுக்காக காத்திருக்க... ஒரு வருடத்துக்கும் மேலாக மக்கள் பிரதிநிதிகளே இல்லாமல் மாநிலத்தின் 18 சட்டமன்ற தொகுதிகளை காலியாக வைத்திருப்பது எந்தவிதத்தில் நியாயம்?

ஒரு சட்டமன்ற உறுப்பினர் மன்ற விதிகளை மீறினார் என்பதற்காக அவருக்கு வாக்களித்த மக்களைத் தண்டிப்பது எப்படி சரியாக இருக்க முடியும்? இதை சட்டமும் அரசியலும் படித்தவர்களும் தேர்தல் ஆணையமும் சிந்தித்துப் பார்த்து உடனடியாக அந்தத் தொகுதிகளில் இடைத் தேர்தலை நடத்தி மீண்டும் அங்கே ஜனநாயகம் தலை நிமிரச் செய்யவேண்டும்!

x