முதலாளி -செம்போடை தங்க.நாகேந்திரன்


சுந்தரம் புரண்டு புரண்டு படுத்தான். நேற்று இரவு முழுவதும் கண் விழித்து மாஸ்டருக்கு உதவியாய் அடுப்படியில் நின்றாலும் தூக்கம் வரவில்லை.
முதலாளி தன்னை இப்படி ஏமாற்றுவார்...தனது தீபாவளிக் கனவுகளைத் தீயிட்டுப் பொசுக்குவார் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை! தங்கையும் அவன் அம்மாவும் அவன் வரவில்லை என்பதை அறிந்தால் எவ்வளவு கலங்குவார்கள்?
அவனுக்கு ஊரிலிருந்து புறப்பட்ட அந்தக் காட்சி கண்ணீரின் ஊடே நிழற்படமாய் விரிந்தது. 
“தம்பி நீ என்ன நம்பிக்கையில் டவுனுக்குப் போய் வேலை பார்க்கப் போறேங்கிறே...” என்ற அம்மாவிடம், “இங்க மாதிரி இல்லம்மா. அங்க நல்ல
சம்பளம் கிடைக்கும்மா... நீ என்னப்
பத்தி கவலைப்படாதேம்மா... நீயும் தங்கச்சியும் பத்திரமா இருங்க... நான்
போயி வேலை கிடைச்ச உடனே போன் பண்
றேன்...” கண்ணீருடன் அவனை  அனுப்பி  வைத்தாள்  வள்ளி. 
சுந்தரத்தின் அப்பன் காளிமுத்து பஸ்ஸ்டாண்டில் லோடு மேனாக இருந்தான். இருநூறு ரூபாய் சம்பாதித்தால் நூத்தம்பது ரூபாய்க்கு குடித்துவிட்டு ஐம்பது ரூபாயை வீட்டில் கொடுப்பான். குடி அதிகமாகி குடல் அழுகி கடந்த ஆண்டு போய்ச் சேர்ந்துவிட்டான். வள்ளி அடுத்தடுத்த வீடுகளில் சின்னச் சின்ன வேலைகள் செய்து, வந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டினாள். முடியவில்லை.
காளிமுத்து கடன் வாங்கிக் குடித்த வகையில் தினமும் யாராவது வீட்டு வாசலில் வந்து திட்டுவது வாடிக்கையாகிப்போனது. சுந்தரத்தால் தாய் படும் வேதனையைப் பார்க்க சகிக்கவில்லை. தான் ஏதாவது வேலைக்குப்போய் சம்பாதித்தால் ஒழிய அப்பாவின் கடனையும் அடைக்க முடியாது... குடும்பத்தையும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியாது என்ற முடிவிற்கு அவன் வந்தான். எட்டாவதுடன் தனது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
 அருகில் உள்ள நாகப்பட்டினம் நகருக்குப் போனால் ஏதாவது நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்
அதை வைத்து பிழைத்துக்
கொள்ளலாம் என்று நினைத்தான்.
அங்கு போய் எத்தனையோ கடை
களில் வேலை கேட்டான். எல்லாருமே “தெரிந்தவங்களை அழைச்சிட்டு வா...
இல்லன்னா ரேஷன் கார்டு. ஒரு போட்டோ
கொண்டு வா” என்றார்கள்.
சுந்தரத்திற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
அப்போதுதான் அவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு மார்க்கெட்டுக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்தால் பெரிய மனிதர், அவனுக்கு உதவி செய்வார் போல் தோன்றியது. சட்டென்று அவரிடம் போனவன், “அய்யா எனக்கு கத்தரிப்புலம். ஏதாவது வேலை கிடைக்கும்ன்னு இங்க வந்தேன்...ஒருத்தரும் வேலை தரல... நீங்க யார்கிட்டயாவது சொல்லி வேலை வாங்கிக்கொடுங்கய்யா...” என்றான்.
அவர் நின்று, “உனக்கு என்ன வேலை தெரியும்?” என்றார்.
“அய்யா நான் எட்டாவது படிச்சிக்கிட்டு இருந்தேன்.போன வருஷம் எங்க அப்பா இறந்துட்டார்... குடும்ப கஷ்டத்துனாலதான்       நான் வேலை தேடுறன்... நீஙக எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன்..!”
 அவனது நம்பிக்கை கலந்த பேச்சு அவருக்குப் பிடித்துப் போயிற்று. கொஞ்ச நேரம் அவர் அங்கு நின்றபோது பலரும் வந்து அவரிடம் பேசியதிலிருந்து அவர் பெயர் மாரியப்பன் என்றும் அவர் நகரத்தை ஒட்டிய ஊரில் ஸ்வீட் கடை வைத்திருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டான்.
“ நானே உனக்கு வேலை தர்றேன்... அந்தக் கடையில் போயி ஏதாவது சாப்பிட்டுட்டு இந்த வண்டிக்குப் பக்கத்துல வந்து நில்லு...” என்றவர், பாக்கெட்டிலிருந்து ஐம்பது  ரூபாய்  எடுத்து  அவனிடம்  கொடுத்தார். கண்களில் நீர் திரள அதனை வாங்கிக்கொண்டவன், கடைக்குள் செனறு சாப்பிட்டான். உடம்புக்கும் மனசுக்கும் புதுத்
தெம்பு வந்தது. பாக்கி காசை மாரியப்பன் வந்தவுடன் கொடுத்தான். வாங்கிக்கொண்டார்.  அவரது ஸ்வீட் கடை நோக்கி வண்டி விரைந்தது.
போகும் வழியில் “உன் பேர் என்ன?” என்றார்.
சொன்னான் சுந்தரம்.
“சுந்தரம் நம்மகிட்ட ஸ்வீட் கடை இருக்கு... கடையில
செல்வம்ன்னு ஒரு மாஸ்டர் இருக்கார். அவருக்கு கையாளு வேலைதான் உனக்கு. மத்தபடி ஸ்டால்ல இன்னும் மூணு பேரு
இருக்காங்க. நீ மாடியில இவங்க
ளோடயே தங்கிக்கலாம்...” என்றார். கடைக்குப் போனதும் நேராக அடுப்படிக்குப் போன
வர், “செல்வம் இவன் நமக்குத் தெரிஞ்ச பையன். பள்ளிக்கூடம் போய்க்கிட்டு இருந்தவன். வேலை எதுவும் தெரியாது. உனக்கு
கைக்கு வச்சிக்க...” எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
செல்வம், சுந்தரத்திடம் “மேல போயி லுங்கிய மாத்திக்கிட்டு வா...” என்றான். கல்லாவை ஒட்டியிருந்த படியில் ஏறி மாடிக்கு வந்தான். திறந்துகிடந்த பெரிய அறையில் கொண்டு போய் தனது பேக்கை வைத்தான். மளமளவென்று லுங்கியை மாற்றிக்கொண்டு சமையக்கட்டுக்கு வந்து ஆறு மாதமாயிற்று.
இரண்டு நாட்களுக்கு முன்பு மதியம் சுந்தரமும் செல்வமும் அடுப்படியில் இருந்தபோது செல்வம் சொன்னான்.
“சீக்கிரமா பல்லாரிய உரிடா... சாயந்திர யாவாரத்துக்கு பக்கோடா போடணும்...”
 “சரிண்ணே ” என்றான் சுந்தரம்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி தீயைப் பற்றவைத்துவிட்டு ஒரு கத்தியுடன் அவனும் வந்து வெங்காயம் உரிக்க உட்கார்ந்தான்.
“ஏன்டா சுந்தரம், தீபாவளிக்கு எப்படா ஊருக்குப்போறே?” என்றான் செல்வம்.
“தீபாவளி அன்னிக்கு மொத நாள் சாயந்தரம் வேலைகளை முடிச்சிட்டு நாம கிளம்பிடலாமாண்ணே... மொதலாளி சொன்னார்” என்றான் சுந்தரம்.
“எவ்வளவுடா தர்றேன்னுருக்கார், முதலாளி?” என்றான் செல்வம்.
சுந்தரம், “மொகம் தெரியாத என்னை சொந்த பிள்ள மாதிரி வச்சிருக்கார். அவருக்கிட்ட போயி எப்படின்னே கட்டன் ரைட்டா கேக்க முடியும்?” என்றான்.
செல்வம் அவனைப் பார்த்துச் சிரித்தான்.
“போடா வௌங்காதவனே... புள்ள மாதிரி வச்சிருக்காரா? எல்லாம் வேலை வாங்கறதுக்காக சொல்ற பசப்பு வார்த்தைடா” என்ற செல்வத்தை பல்லாரியைக் கையில் வைத்தபடி பார்த்தான் சுந்தரம்.  செல்வம் ஒரு அன்னக்கூடையில் மைதாவை கொட்டிவைத்து தண்ணீர் ஊற்றி பிசைந்தபடி சுந்தரத்தைப் பார்த்தான்.
சுந்தரம் திக்பிரமை பிடித்தது போல் நின்று கொண்டிருந்தான். 
“என்னடா நிக்குறே மொதலாளி வீட்டுப்பிள்ளை!? தூ...நாயே! காறி மூஞ்சில துப்பிப்புடுவேன்... போயி குடிக்க ஜக்குல தண்ணி எடுத்துட்டு வாடா” என்றான் ஹெக்ஹெக்ஹே என்று சிரித்தபடி.
சுந்தரம் கத்தியையும் உரித்துக்கொண்டிருந்த பல்லாரியையும் போட்டுவிட்டு ஓடிப்போய் செல்வத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தான். சுந்தரத்திற்கு செல்வத்தைப் பிடித்துவிட்டது என்பதை விட செல்வத்திற்கு ஏனோ சுந்தரத்தைப் பிடித்துவிட்டது.
தண்ணீரைக் குடித்துவிட்டு, “சுந்தரம், இதப் பாருடா...மொதலாளி நம்மள வச்சி மாசம் எவ்ளோ சம்பாதிக்கிறார் தெரியுமா? நீ ஒண்ணும் சர்வீஸ் பண்ண இங்க வரல... பாக்குற வேலைக்கு கூலியைக் கேளு” என்றான் செல்வம்.
சுந்தரம் மவுனமாய் சிரித்தான். “என்னடா சிரிக்கிறே? என்னவோ போ.. உன் தலையெழுத்து” என்றபடி செல்வம்  தன் வேலைகளில் கவனம் செலுத்தினான்.
தீபாவளிக்கு முதல்நாள் காலையில் கல்லாபெட்டியில் அமர்ந்திருந்த மாரியப்பனை நோக்கி செல்வம் விரல் நீட்டிப் பேசிக்கொண்டிருப்பதை வெளியில் சென்றுவிட்டு வந்த சுந்தரம் கவனித்து அருகில் ஓடினான்.
“ஆமா மொதலாளி எனக்கு ரெண்டு மாச சம்பளம் போனசா வேணும்...” என்றான் சத்தமாய்.
“என்னப்பா சொல்றே?! கடையில நீ மட்டுமா இருக்கே... உனக்கு மட்டும் கொடுத்தா பாக்கி பேரு கேக்க மாட்டாங்களா?” மாரியப்பன் நிதானமாகக் கேட்டார்.
“நான் என்னைப்பத்திதான் சொல்ல முடியும்... சிலபேரு சோத்துக்காக கூட வேலைக்கு வந்திருப்பாங்க. அவங்களபத்தி நான் கவலைப்பட முடியாது. எனக்குக் குடும்பம் இருக்கு. மத்தமத்த செலவுங்க இருக்கு... உங்களால எனக்கு ரெண்டு மாச சம்பளம் போனசா தர முடியுமா முடியாதா?” என்றான் செல்வம் இறுதியாய்.
“முடியாதுப்பா” என்றார் மாரியப்பன் நிதானமாக!
செல்வம் ஒரு கணம் அவரைப் பார்த்தான்.
பின்னர் மேஜைமீது அவர் வைத்திருந்த சம்பளக் கவரை எடுத்துக்கொண்டு எண்ணிக்கூட பார்க்காமல் மாடிக்குப்போய் சில நிமிடங்களிலேயே தனது பேக்குடன் திரும்பி ரோட்டை நோக்கி நடந்து எதிர்ப்பட்ட ஆட்டோவை மறித்து ஏறிப்போய்விட்டான்.
அவனையே பார்த்தபடி இருந்த மாரியப்பன், ஸ்டாலில் நின்றவர்களை அழைத்தார்.
“உங்க சம்பளம் ஒரு மாச போனஸ் இருக்கு இப்பவே டவுனுக்குப் போய் தீபாவளிக்கு உங்க வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கங்க. நீங்க இன்னிக்கு நைட் கிளம்புங்க. அதுக்கப்புறம் நான் யாவாரத்தை பார்த்துக்கிறேன்... போதுமான சரக்கு கைவசம் இருக்கு. தீபாவளி கழிச்ச மறுநாளே வரப்பாருங்க. அப்படி வர்றவங்களுக்கு டபுள் சம்பளம் தர்றேன்.”
“ சரி” என்றார்கள் அனைவரும்.
அடுத்து சுந்தரத்தை அழைத்தார்.
“சுந்தரம், மத்தியானம் அவங்க வர்ற வரைக்கும் நாமதான் ஸ்டாலை பாத்துக்கணும்” என்றார். என்னை எப்போது வீட்டுக்கு அனுப்புவீர்கள் என்று கேட்க நினைத்தான். கேட்கவில்லை. அவர்கள் வந்ததும் தன்னை அனுப்பிவிடுவார் என்று நினைத்தான்.
தங்கைக்கும் அம்மாவிற்கும் ட்ரெஸ் எடுக்க வேண்டியதுதான். தங்கச்சிக்கு வெடி வாங்க வேண்டும். போனில் காலையில் போன் செய்தபோது கூட சொன்னாள் “அண்ணே வெடியை மறந்துடாதே...” என்று. மற்றபடி பலகாரங்கள் அனைத்தும் முதலாளி கொடுத்துவிடுவார். அம்மாவிடம் அன்றே சொன்னான் அம்மா நீ அடுப்பில் கிடந்து கஷ்டப்படாதே. நான் கொண்டு வருகிறேன் என்று.
எந்த வருடமும் இல்லாத தீபாவளியாக இந்தத் தீபாவளி இருக்கப்போகிறது என்பதை நினைத்தபோதே அவனுக்குள் பொங்கிய சந்தோஷத்திற்கு அளவே இல்லை. நினைவு தெரிந்து அவன் ஆசையாய் ஒரு தீபாவளி கூட கொண்டாடியதில்லை.
அப்பன்காரன் குடித்துவிட்டு அன்று பண்ணும் அட்டூழியம் அளவில்லாமல் இருக்கும். நினைத்தபோதே கண்ணீர் பெருக்கெடுத்தது. 
 மூன்றுமணிக்கு வர வேண்டிய ஸ்டால் பையன்கள் நான்கு மணிக்குத்தான் வந்தார்கள். முதலாளி அவர்களிடம் அது குறித்து எதுவும் கேட்கவில்லை.
அவர்களில் வயதான ஒருத்தரிடம் “அண்ணே கல்லாவைப் பார்த்துக்கங்க. வீட்டுக்குக் கொஞ்சம் சாமான்
வாங்கிக் கொடுத்திட்டு வர்றேன்” என்று சொன்ன மாரியப்
பன், “சுந்தரம் வா… வந்து பைக்கில ஏறு” என்றார்.
போகும் வழியில் வண்டியை நிறுத்தி, சுந்தரத்தை இறங்கச் சொன்னார். அவன் புரியாமல் இறங்கினான்.
“சுந்தரம், நீ சின்னப் பையனா இருந்தாலும் விவரமானவனா இருக்கே... இந்த ஆறு மாசத்தில நீ எல்லா வேலையும் ஓரளவு கத்துக்கிட்டே. இந்த செல்வம் பய இனிமே வருவான்னு நம்பிக்கை எனக்கு இல்லே. அதனால கடைக்கு புது மாஸ்டர் வர்ற வரைக்கும் நீதான் மாஸ்டர். தீபாவளி கழிச்சி பத்து நாளைக்கு கடையில யாவாரம் டல்லடிக்கும்... அதுக்காக நாம கடையை  மூடிப்போட  முடியாது. ஏதோ உனக்குத் தெரிந்த ஐட்டங்களைப் போடு. அதுக்குள்ள நான் எங்காவது பார்த்து மாஸ்டரைக் கொண்டு வந்திடுவேன். அதனால நீ இன்னிக்கு ஊருக்குப் போக வேணாம். புது மாஸ்டர் வந்ததும் நீ ஊருக்குப்போய் ஒரு வாரம் தங்கிட்டு வா” மாரியப்பன் இப்படிச் சொன்னதைக் கேட்டு சுந்தரத்திற்கு அழுகை வெடித்தது.
“ஏய் சுந்தரம். ஏன்டா இப்ப அழறே... ஒரு தீபாவளியினால ஒண்ணும் ஆயிடாதுடா. எல்லாருக்கும் ஒரு நாளு லீவு. உனக்கு ஒரு வாரம்டா... சரி சரி கண்ணை தொடச்சிகிட்டு வண்டியில ஏறு” என்றார்.
வீட்டுக்குப் போனதும் “நீ ஹால்ல படுத்துக்க. நானும் அம்மாவும் கடைத்தெருவுக்குப் போய்ட்டு சென்னையில படிக்கிற தங்கச்சி ட்ரெயின்ல வர்றா... அவளை அழைச்சிகிட்டு வந்திடுறோம்” என்று அவனிடம் சொல்லிவிட்டு மனைவியை காரில் அழைத்துக்கொண்டு புறப்பட்டார் மாரியப்பன்.
அவங்க பொண்ண மட்டும் வரச்சொல்லி தீபாவளி கொண்டாடுவாங்களாம்... எனக்கு மட்டும் ஒரு தீபாவளினால ஒண்ணும் ஆயிடாதாம்... நல்லா இருக்கு மொதலாளி உங்க நியாயம். “சொந்த புள்ள மாதிரி வச்சிருக்காரா?! எல்லாமே வேலை வாங்கறதுக்கான பசப்பு வார்த்தைடா...” செல்வம் சொன்னது எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
துக்கம் தொண்டையை அடைக்க. அப்படியே தூங்கிப்போனான். காலிங் பெல் சத்தம் கேட்டபோதுதான அவனுக்கு விழிப்பு வந்தது. ஊரெல்லாம் வெடிச்சத்தம் கேட்டது.
 சுவர் கடிகாரத்தைப் பார்த்தான். அதிகாலை நாலு பத்து என்று காட்டியது. 
கலக்கமாகப் போய் கதவைத் திறந்தான். மாரியப்பன்தான். சிரித்த முகமாய் நின்றார். வெளியே வெடிச் சத்தமும், வானமெங்கும் வண்ணப் பிரகாசமுமாக இருக்க... 
“இதெல்லாம் கொண்டு போயி உள்ள வையி!” என்று பெரிதாக இரண்டு பைகளைக் கொடுத்தார். மாரியப்பன் சொன்னார். “சுந்தரம், இந்த வருட தீபாவளிய நாம குடும்பத்தோட இங்க ஜாலியா கொண்டாடப்போறோம்.”
பைகளைக் கையில் வாங்கியபடி, பேசாமல் திரும்ப எத்தனித்தவன், வாசலுக்கு வெளியே நிழலாடுவது கண்டு தயங்கி உற்றுப் பார்க்க...
நிறுத்தி இருந்த காருக்குள் இருந்து மாரியப்பனின் மகளும் மனைவியும் இறங்கிக்கொண்டிருந்தார்கள். சுந்தரம் அவர்களைக் கண்ணீரோடு அண்ணாந்து பார்த்தான்.
“அழாதடா... தீபாவளின்னா அது எல்லாருக்கும்
தான்னு எனக்குத் தெரியாதா? அங்கே பாரு... யாரு வந்திருக்காங்கனு” என்று விரல் நீட்டிக் காட்டினார். முதலாளியின் குடும்பத்துக்குப் பின்னால்... காருக்
குள்ளிருந்து இவன் அம்மாவும் தங்கச்சியும் இறங்கினார்கள்!
“நேத்து  சாயங்காலமே வண்டி அனுப்பி அவங்களைக் கூட்டியாரச் சொல்லிட்டேன்” என்ற மாரியப்பனை இப்போது மறுபடி நிமிர்ந்து பார்த்தான்.
பெருங்குரல் எடுத்து அவனிடமிருந்து கிளம்பிய அழுகைச் சத்தத்தை, தெருக்கோடியில் கேட்ட உற்சாகமான
வெடிச்சத்தம் அப்படியே அமுக்கிப் போட்டது.

x