குறளோவியம் சொல்லும் ஓவிய ஆசிரியர்!


கா.சு.வேலாயுதன்

திருப்பூர், நல்லூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ‘ஓவிய ஆசிரியர் வீடு...’ எனக் கேட்டால், “திருக்குறள் ஓவிய ஆசிரியர் வீடா?” என்று கேட்டுவிட்டு, “இப்டியே கொஞ்ச தூரம் நடந்தீங்கன்னா ஒருவீட்டுல ‘தர்ம தேவதை இல்லம்’னு பெருசா போட்டிருக்கும் அதுதான் அவரோட வீடு” என சந்தோசமாய் நடராஜன் வீட்டுக்கு வழி காட்டுகிறார்கள் மக்கள்.

‘அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்இழுக்கா இயன்றது அறம்’.என வீட்டின் முகப்பில் குறள் செதுக்கப்பட்ட, தர்ம தேவதை இல்லத்திற்குள் நுழைந்தால், ‘‘முதல்ல... பழரசம் சாப்பிடுங்க! அப்புறம் பேசலாம்... இந்த தர்மதேவதை இல்லத்திற்கு வருகிற அடியார்களுக்கு வயிராற உணவிடுவது எங்கள் குடும்ப வழக்கம்’’ என்று சொல்லும் நடராஜனுக்கு எழுபது வயது.

திருக்குறளை, ‘குறளோவியம்’னு நாம கொண்டாடுவதற்கு ஏற்ப ஒவ்வொரு குறளுக்கும் தனித்தனிப் படங்களாக ஓவியங்களை வரைந்து, விளக்கமும் சேர்த்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் இவர். வீட்டின் வரவேற்பறை துவங்கி எல்லா இடங்களிலும் திருநீற்றின் மணத்துடன் திருக்குறளும் பளீரிடுகின்றன.
‘‘எங்க அப்பா சிவசக்தி பித்தன் கே.எஸ்.முத்துசாமி, அந்தக் காலத்துல பழநி மலை, சிவன் மலை, சென்னிமலைன்னு எல்லா கோயில்களுக்கும் விபூதி தயார் செய்து கொடுத்துக்கிட்டிருந்தார். அந்தத் தொழில், கடவுள் புண்ணியத்துல இப்பவும் தொய்வில்லாமல் நடந்துக்கிட்டிருக்கு. இதை வெறும் தொழிலா மட்டும் பார்க்காம, இறைப் பணியாகவும் பார்த்து வந்தார் எங்க அப்பா. அதுதான் எங்களையும் தான தர்மத்துல ஈடுபாடு காட்ட வெச்சுது’’ என்கிற நடராஜன் கலையாசிரியர் பயிற்சிப்படிப்பு முடித்து விஜயாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 32 வருஷம் தமிழ் மற்றும் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 1999-ம் ஆண்டுக்கான சிறந்த மாநில நல்லாசிரியர் விருது பெற்ற இவரது கண்களில், தனது ‘திருக்குறளோவிய மத நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு ஓவியப்பேழை’ என்ற புத்தகத்தைக் காட்டும் போது ஒரு குழந்தைக்கான குதூகலம் தெரிந்தது.

x