வீட்டுக்கு வெளியில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?


பி.எம்.சுதிர்

குழந்தைகள் வீட்டுக்குள் இருக்கும்போது அவர்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், வீட்டை விட்டு வெளியில் விளையாடச் செல்லும்போதோ, அல்லது பள்ளிக்குச் செல்லும்போதோ பெற்றோர்களால் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. இதுபோன்ற சூழலிலும் அவர்கள் பாதுகாப்பாக இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

செல்போன் எண்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்கள் குழந்தைக்கு ஓரளவு பேச்சு வந்ததும் முதலில் வீட்டு முகவரி, உங்களது செல்போன் எண்கள் ஆகியவற்றைக் கற்றுக்கொடுங்கள். வெறும் வீட்டு முகவரி மட்டுமின்றி, வீடு அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களின் பெயர்களையும் குழந்தைகளின் மனதில் பதிய வையுங்கள். பொது இடங்களில் தொலைந்து போவது, மற்றவர்களால் கடத்தப்படுவது போன்ற அவசர காலங்களில் தாங்கள் யார் என்பதை மற்றவர்களிடம் விளக்கி உதவி பெற இது உதவும். பெற்றோரின் செல்பேசி எண்களைத் தவிர தாத்தா பாட்டி, மற்றும் நெருங்கிய உறவினர்களின் செல்பேசி எண்களையும் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பது நல்லது. அதேநேரத்தில் அவசியமின்றி தங்கள் வீட்டின் முகவரியை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் அவர்களுக்கு அறிவுரை கூறிவைப்பது நல்லது.

x