ஏழு கண்டங்கள்..! ஏழு சிகரங்கள்..! - சங்கீதா சிந்தி பாலின் சாதனைப் பயணம்!


எஸ்.எஸ்.லெனின்

அலாஸ்காவின் மெக்கின்லி மலையில் ஏறியபோது சங்கீதா சிந்தி பாலின் வலது கால் முட்டியில் பெரும் காயம் ஏற்பட்டது. வட அமெரிக்க கண்டத்தின் உயரமான சிகரத்தைத் தொடும் முயற்சி நடுவழியில் தடைபட்டதில் சங்கீதாவுக்கு ஏக வருத்தம். ஆனபோதும் நம்பிக்கையுடன் காத்திருந்தார். அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களோ, “இனி மலையேற்றத்தை நினைத்தும் பார்க்கக்கூடாது” என்று எச்சரித்தனர். ஆனால், அதன் பின்னர்தான் மேலும் 3 கண்டங்களின் உயரமான மலைகளின் உச்சியைத் தொட்டார் சங்கீதா.

ஏழு கண்டங்களின் உயரமான ஏழு மலைச் சிகரங்களுக்கு ஏறிச் செல்வது சங்கீதாவின் வாழ்நாள் கனவு. ஆறாவது சிகரமாக இமயமலையின் எவரெஸ்ட் உச்சியைக் கடந்த மே மாதம் தொட்டபோது, எவரெஸ்ட்டை அடைந்த இந்தியாவின் வயதான பெண் என்ற பெருமை சங்கீதாவுக்கு சேர்ந்தது. 53 வயதாகும் சங்கீதா தற்போது எஞ்சியிருக்கும் ஏழாவது மலையேற்றத்திற்கான பயிற்சிகளில் மும்முரமாக இருக்கிறார்.

ஜம்முவில் பிறந்து வளர்ந்தவர் சங்கீதா சிந்தி பால். இமயமலைத் தொடரும் அதன் மேகம் மூடிய சிகரங்களும் இளம் வயதுதொட்டு சங்கீதாவைக் கிறங்கடிப்பவை. கடுங்குளிரைப் பொருட்படுத்தாது இமயமலைச் சரிவுகளில் பாய்ந்து ஏறி அதன் சிகரத்தைத் தொட்டுவிட்டு திரும்புவதுபோல் அடிக்கடி கனவு காண்பார். அது குறித்து அவர் வீட்டில் கலந்தபோது, “பெண் பிள்ளைக்கு ஆகாத வேலை...” என்று முடக்கினார்கள். ஆனால், சங்கீதாவின் சிகரம் தொடும் ஆசை அவரோடு சேர்ந்தே வளர்ந்தது. இயல்பில் அழகியான சங்கீதாவை அவரது பொலிவை முன்வைத்து கல்லூரி நிகழ்வுகளில் பங்கேற்க அடிக்கடி அழைத்தார்கள். அப்போதுதான் அவர் தனது அழகை கவனிக்க ஆரம்பித்தார். சாதனைக்கான அவரது ஆவல் அங்கே சற்றே திசைமாறியது. மலையேறும் கனவை மறந்துவிட்டு அழகிப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார்.

x