அரியநாச்சி 13- வேல ராமமூர்த்தி


பட்டத்து யானையும் பன்னியும் ஒண்ணா?

அடுப்பு புகைந்துகொண்டிருந்தது. அடுக்களையில் பூவாயி கிழவி அரிசி களைந்துகொண்டிருந்தாள்.
நடுப் பத்தியில், ஒருக்களித்துப் படுத்திருந்த அரியநாச்சி, கண்களைக் கசக்கிக்கொண்டே, “அடுப்பு ஏன் இப்பிடி புகையிது?” என்றாள். சேலை முந்தானையால் துடைக்கத் துடைக்க, கண்கள் எரிந்தன.

“ஈர விறகு! தீ பத்துதில்லே” உதடு குவித்து அடுப்பை ஊதிக்கொண்டே, பூவாயி கிழவி அரிசி களைந்தாள்.
“ஏத்தே… ஒங்களுக்கென்ன ரெண்டு காய்ஞ்ச சுள்ளி கெடைக்கலே? கண்ணு ரெண்டும் எரியுது.”
வீடு முழுக்க புகை மண்டியது. தலைவாசல் வழியே வீட்டுக்குள் நுழையும் ஒருத்தியைப் பார்த்து, “யார்டீ… அவ?” என்றாள் பூவாயி.
“யாரு… பூவாயி அக்காவா? கும்பிடுறேன்க்கா.”
புகைக்குள் நுழைந்து வருபவள் இன்னாரெனத் துலங்காத கண் எரிச்சலில், “யார்டீ?” எனக் கேட்டாள்.
“நான்தான்… வள்ளி. பெருநாழி வள்ளி.”
“வாடி வாடீ… வள்ளியாடீ! என்ன… இந்த வேகாத வெயில்லே?”
படுத்தவாக்கில் தலை திருப்பிப் பார்த்தாள் அரியநாச்சி. புகையின் ஊடே செங்கமங்கலாய்த் தெரிந்தாள் வள்ளி அத்தை. ‘ஆத்தாடீ… எங்க வள்ளி அய்த்தயிலே வர்றாக!’ என வாய்க்குள் முனகியவள், “யாரு… அய்த்தவுகளா? கும்பிடுறேன் அய்த்தே” ரெண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டாள்.
“ஏந்தாயி… மகராசியா இருத்தா” அரியநாச்சியின் தலைமாட்டில் வந்து அமர்ந்த வள்ளி அத்தை, தலை கோதிவிட்டவாறு, “ஏத்தா அரியநாச்சி… நல்லா இருக்கியாத்தா?” குரல் உடைந்தது.
“இந்தா… இருக்கேன்லே புகழு கெட்டு!” கண்ணீர் வழிந்து தலையணையில் இறங்கியது.
“ஏன்டா… அம்மா! உனக்கென்னடா குறை?” அரியநாச்சியின் தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டாள்.
“ஏ(ன்) ஒத்தப் பெறப்பை விட்டு, என்னை ஒதுக்கி வச்சுட்டான்ங்களே!” வள்ளி மடிக்குள் முகம் புதைத்து, பெருங்குரலெடுத்து அழுதாள்.
“ஒன்னைய யாரும் ஒதுக்கலேடா... அம்மா. ஏஞ் செல்ல மக நீ. ஒன்னைய யார்டா ஒதுக்க முடியும்? அழுகாதடா அம்மா” தலையை நெஞ்சோடு அணைத்த வள்ளி அத்தையின் ரெண்டு சொட்டு கண்ணீர், அரியநாச்சியின் கன்னத்தில் விழுந்தது.
மடிக்குள்ளேயே அழுத அரியநாச்சி, கையூன்றி எழுந்து உட்கார்ந்தாள். “ஏத்தே… ஏந் தங்கச்சி மாயழகிப் புள்ள என்ன செய்யுது? எப்பிடி இருக்குது?”
“இருக்குது. எப்போ பார்த்தாலும் ஓந் நெனப்புதான். ஓம் பேச்சுதான். எங்கக்கா வரலேன்னா தாலிக்குக் கழுத்தைக் குடுக்க மாட்டேங்குது.”
தரை பரசி அழுதாள் அரியநாச்சி. “ஏங் கருவேலங் கொளுந்தை இப்பிடிக் கருக வச்சுட்டான்ங்களே! கூடப் பெறந்த சின்னப் பய பண்ணுன கேவலத்துக்கு நான் எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு அங்கே வர?”
அடுப்பை விட்டு எழுந்து வந்தாள் பூவாயி. “அடியேய் வள்ளி. இந்த அரியநாச்சி புள்ள பண்றது கொஞ்சம்கூட நல்லா இல்லடீ. வாக்கப்படப் போற தங்கச்சியை நெனச்சு நெனச்சு வயித்துக்குள்ளெ இருக்கிற பிள்ளையைக் கெடுத்துருவா போலிருக்குடீ.”
“அரியநாச்சி… அழுகாதேத்தே.”
வள்ளிக்கு அருகில் பூவாயியும் குத்த வைத்தாள். “கம்பவுண்டர் மாரியப்பன், கை பிடிச்சுப் பார்த்துட்டு இன்னும் நாலஞ்சு நாள்லெ பிள்ளை பெறந்திரும்னு சொல்லிட்டுப் போய்ட்டான். பெறக்கப் போறது தலைப்பிள்ளை. கல்யாணமாகி ஒம்பது வருசம் கழிச்சு ஜனிச்சிருக்கு. வயித்துலெ சொமக்கிறவ கொஞ்சம் பாங்கா பக்குவமா இருக்க வேணாம்? எப்போ பார்த்தாலும் தங்கச்சி தங்கச்சீன்னு அழுது நீந்துக்கிட்டுத்தான் இருக்கிறா. இது நல்லத்துக்கில்லேடீ.”
“யாரு. வள்ளிச் சின்னத்தாளா? கும்புடுறேன் சின்னத்தா” கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் வந்தான் சக்கரைத் தேவன்.
“மகராசனா இருப்பே” வள்ளி ஒடுங்கி உட்கார்ந்தாள்.
“என்ன சின்னத்தா… பெருநாழி கல்யாண வேலை எல்லாம் நல்லபடியா நடக்குதா?” கட்டிலில் அமர்ந்தான்.
பதில் சொல்ல வார்த்தை இன்றி, வள்ளி அத்தை தலை குனிந்தாள்.
அரியநாச்சி, ஆங்காரமும் வேதனையும் பொங்க, தன் புருசனைக் கைகாட்டி, “ஏம் புருசன் ஒரு யானை மாதிரி. அந்த பாண்டிங்கிற சின்ன நாயி ஏஞ் சிங்கத்தை அவமரியாதை பண்ணிருச்சே…” அழுதாள்.
உதட்டோரம் சிரித்தான் சக்கரைத் தேவன். “அவன் கெடக்கான் சின்னப் பய. அவன் மரியாதை கொடுத்துத்தான் இங்கே நெறைய போகுதாக்கும்? அதுக்கு, நீ ஏம்மா அழுகுறே?”
பூவாயி பக்கம் திரும்பிய சக்கரைத் தேவன், “எங்க வள்ளிச் சின்னத்தா… வராத பொம்பளை வந்துருக்கு. கஞ்சித் தண்ணி ஏதும் ஆக்குனீகளா?” என்றான்.
“இந்தா… ஆயிருச்சு ஆயிருச்சு” பூவாயி எழுந்து அடுப்புப் பக்கம் ஓடினாள்.
சக்கரை, சட்டையைக் கழற்றிக்கொண்டே, “வள்ளிச் சின்னத்தா இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வர வேண்டிய பொம்பளை. எங்க சித்தப்பன் ராமசாமி தேவருக்குக் கொடுத்து வைக்கலே” என்றான்.
“சக்கரை… இந்த நேரத்திலே எதுக்குப்பா அந்தப் பேச்சு?” வள்ளி தலை கவிழ்ந்தாள்.
“ஏதோ… ஒங்களைக் காங்கவும் பழசு என் மனசுலே ஓடுச்சு.”
முழுதாய் சக்கரைத் தேவனின் பக்கம் திரும்பி அமர்ந்த வள்ளி அத்தை, “ஏ(ம்) வயித்திலே பெறந்த பிள்ளையா உன்னை நெனச்சுத்தான்… நான் வந்தேன்” என்றாள்.
“சொல்லுங்க சின்னத்தா.”
“அந்தச் சின்னக் கழுத பாண்டிப் பயலை நீ பெருசா நெனைக்க வேணாம். ஓ(ம்) மரியாதை அந்த நாய்க்குத் தெரியலே. வீட்டுக்குப் பெரிய ஆளு எங்கண்ணன்… ஜெயில்லெ கெடக்குறாரு. ஒங்க அம்மான் வெள்ளையத் தேவனுக்காக நீ குடும்பத்தோட வந்து ஓங் கொழுந்தியா மாயழகிக் கல்யாணத்தை முன்னே நின்னு நடத்திக் குடுக்கணும்ப்பா.”
அரியநாச்சியும் பூவாயிக் கிழவியும் சக்கரைத் தேவனின் வாயையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
பொழுது சாய, இடுப்புக் குடங்களோடு தெரு வழியே கிளம்பிய குமரிகள், நல்ல தண்ணீர் கிணற்றுப் பாதையில் நுழைந்தார்கள். ஓரமாய் நடந்து வரும் மாயழகியை ஒதுங்க விடாமல், வளைத்து வளைத்து நடுக்கட்டி, வாய் ஓயாமல் சிரிப்பும் கேலியுமாக பேசிக்கொண்டே வந்தார்கள்.
“இன்னும் ரெண்டு நாள்தான் மாயழகி நம்மளோட தண்ணிக்கு வருவாள்.”
“வர்ற வெள்ளிக்கிழமை கல்யாணம்.”
“ஏன்டீ… தாலி கழுத்திலே ஏறுச்சுன்னா தண்ணியுமா தவிக்காம போகும்!”
“மச்சான் மடியிலே மயங்கிக் கிடக்கிறவளுக்குத் தண்ணி எங்கே தவிக்கப் போகுது? அப்போ உள்ள தவிப்பெல்லாம் வேறயா இருக்கும்.”
“ச்சீய்… கழுதைகளா! எப்போ பார்த்தாலும் ஒங்களுக்கு இதுதானாடீ பேச்சு? ஒமட்டுது!” கைவாக்கில் வந்தவளின் முதுகில் ஓங்கி அறைந்தாள் மாயழகி.
“ஆமாமா… இன்னும் ரெண்டு நாளைக்கு எல்லாம் ஒமட்டத்தான் செய்யும். பாலு புளிக்கும் பழம் கசக்கும்! கருப்பையாங்கிற பேரு மட்டும்தான் இனிக்கும்!” சொன்னவளை அடிக்கக் கை ஓங்கிய மாயழகி, கூட்டத்துக்குள் இருந்து பிரிந்து, பின்னால் தனியே நடந்து வந்தாள்.
பாதை ஓர முள் புதருக்குள் பதுங்கி இருந்தான் கருப்பையா. பிச்சை ராவுத்தர் கடை சோப்பு, சீப்பு, பவுடர், ரிப்பன் எல்லாம் துண்டு விரிப்பில் இருந்தன. கருப்புச் சட்டை. கலர் கைலி. ஆளும் கருப்பு. இளம் இருட்டோடு இருட்டாகப் பதுங்கி நின்று, தூரத்தில் வரும் குமரிகளின் பேச்சு சத்தத்துக்குக் காதுகொடுத்தான். நெஞ்சு ‘கெதக் கெதக்’ன்னு அடிக்குது. புதருக்கு வெளியே தலை நீட்டி, மாயழகி தனித்து வருவதைக் கண்டுகொண்டான். முழ நீள முள் கொத்து ஒன்றைக் கையில் எடுத்தான்.
வந்த குமரிகள் தன்னைக் கடந்ததும், கையில் இருந்த முள்ளை, தனித்து நடந்து வந்த மாயழகிக்கு முன்னே போட்டான்.
முள்ளிலேயே கால் வைத்த மாயழகி, ‘ஆவ்வ்…’ என்றபடி குனிந்தாள்.
புதருக்குள் இருந்து வெளிப்பட்ட கருப்பையா, மாயழகியின் கால் முள்ளைப் பிடுங்கினான். கொப்பளிக்கும் ரத்தத்தை வாய் வைத்து உறிஞ்சினான். பதறிக் கத்தப்போன மாயழகியின் வாயைப் பொத்தி, இடுப்போடு வளைத்துத் தூக்கிக்கொண்டு புதருக்குள் போனான்.
“அக்காளும் அக்கா புருசனும் வரலேன்னா… மாயழகிப் புள்ள வாக்கப்பட மாட்டேங்குது” என்றாள் வள்ளி அத்தை.
சக்கரை சிரித்தான். “அந்தப் புள்ள ஏன் அப்பிடி சொல்லுது? யார் யாருக்குன்னு ரொணவந்தம் போட்டுருக்கோ… அப்பிடித்தான் முடியும். பாவம் தாயில்லாத புள்ள. எங்களாலே இந்தக் கல்யாணம் நிக்க வேணாம். நாங்க வந்துர்றோம்.”
கண்களும் வாயும் பிளக்க புருசனையே பார்த்தாள் அரியநாச்சி.
“ஆனா… ஒண்ணு சின்னத்தா ‘பொண்ணு குடுக்க மாட்டேன்னுட்டோம். அப்புறம் என்ன மசுத்துக்கு வெள்ளாங்குளத்துப் பயலுக வந்தான்ங்க?’ன்னு பெருநாழிக்காரன் எங்களை எளப்பமாப் பேசிறக் கூடாது பாத்துக்கோங்க.”
புட்டம் தேய்த்து ஓர் அடி முன்னே நகன்ற வள்ளி அத்தை, “எந்த நாய் பேசும்? பட்டத்து யானையும் பன்னியும் ஒண்ணா? நீ வாப்பே…” இரண்டு கை விரல்களையும் தன் மடிக்குள்ளேயே சந்தோசத்தில் கோர்த்தாள்.
அரியநாச்சிக்கு புருசனைப் பார்க்கப் பார்க்கப் பெருமையும் அழுகையும் பொங்கிக்கொண்டு வந்தது.
“இதெல்லாம் உனக்குதான் மாயழகி.” துண்டில் விரித்திருந்த அழகு சாதனப் பொருட்களை எல்லாம் காட்டினான்.
மேலாடைகளைச் சரிசெய்துகொண்டே, கருப்பையாவையும் அழகு சாதனப் பொருட்களையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“ரெண்டு நாளா தண்ணிக்கு வர்றபோது, முகத்திலே பவுடர் பூசாமல் வந்தேய்லே? அதுதான் ராவுத்தர் கடையிலே உள்ளதை எல்லாம் அள்ளிட்டு வந்துட்டேன். கொண்டுபோ மாயழகி.”
மாயழகி எதுவும் பேசாமல் புதரில் கிடந்த குடத்தை எடுத்துக்கொண்டு நகன்றாள். கருப்பையா மறித்து நின்றான். நெருங்கி வந்து மாயழகியின் கண்களையே பார்த்தான். மாயழகியும் பார்த்தாள். இறுகக் கட்டி அணைத்தான். கருப்பையாவின் தோளில் சாய்ந்த மாயழகியின் கண்கள் செருகின. இன்னும் இறுக்கி அணைத்து, கழுத்துக்குள் முகம் புதைத்தான்.
‘விருட்’டென உதறிய மாயழகி, வலது கையால் கருப்பையாவின் குரல்வளையைப் பிடித்து நெரித்தாள்.
(சாந்தி... சாந்தி...)

x