ஆதிக்கத்தை வென்ற அன்னா பர்ன்ஸ்


அவளுக்கு வயது 18. பத்துக் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஏழாவதாகப் பிறந்தவள். அதனால் அவள் ‘மிடில் சிஸ்டர்’ என்று அழைக்கப்படுகிறாள். பிரெஞ்சு மொழி வகுப்பில் படிக்கும் அவள், எப்போதும் சாலையில் நடந்து செல்லும்போது, 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தகங்களைப் படித்துக்கொண்டே செல்வாள். அது ஏன் 19-ம் நூற்றாண்டு? ஏனென்றால் அவளுக்கு 20-ம் நூற்றாண்டு, விரும்பத்தக்கதாக இல்லை.

அன்றும் அப்படித்தான். பிரெஞ்சு வகுப்பை முடித்துவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சர் வால்டர் ஸ்காட் எழுதிய ‘இவான்ஹோ’ நாவலைப் படித்துக்கொண்டே நடந்து போகிறாள். அப்போது, ஒரு வெள்ளை நிற வேன், அவள் அருகில் வந்து நிற்கிறது. “லிஃப்ட் வேண்டுமா?” என்று கேட்கிறார் வேனுக்குள் இருந்தவர். கேட்டவர், 41 வயது ஆண். அவள் மறுக்கிறாள்.

வெள்ளை நிற வேனில் வந்ததால் அவருக்கு ‘மில்க்மேன்’ என்று பெயரிடுகிறாள் அவள். அடுத்த சில நாட்களில், அவள் ‘ஜாகிங்’ சென்றுகொண்டிருக்கும்போது, இரண்டாவது முறையாக அவளைச் சந்திக்கிறார் ‘மில்க்மேன்’. அவர்கள் இருவரும் சாலையில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த சிலர், அவர்கள் இருவரும் காதலர்கள் என்று முடிவு கட்டுகிறார்கள்.

இதனால் அவளது வீட்டில் பிரச்சினை ஏற்படுகிறது. உண்மையில், அவள், ‘மில்க்மேனை’ காதலிக்கவில்லை. மாறாக, தனக்கு அறிமுகமாகி ஒரு வருடமேயான ‘இவனை நாம் ‘பாய் ஃப்ரெண்ட்’ ஆக வைத்துக்கொள்ளலாமா..?’ என்று யோசிக்கச் செய்கிற ‘மேபீ - பாய் ஃப்ரெண்ட்’டைக் காதலிக்கிறாள். அது காதல்கூட இல்லை. சும்மா ஒரு ‘டேட்டிங்’. அவ்வளவுதான்.

x