தீபாவளிக்கு உதிக்கும் திடீர் ரங்கநாதன் தெருக்கள்...


எம்.சோபியா, ரோகிணி, கரு.முத்து, என்.சுவாமிநாதன்

தமிழகத்தின் தலைநகர் சென்னையாக இருந்தாலும், சென்னையின் ஷாப்பிங் தலைநகராக இருப்பது தி.நகர் ரங்கநாதன் தெரு. ஒவ்வொரு நகரிலும் இப்படி ஒரு முழு வீதியையே கடையாக மாற்றும் அதிசயத்தை தீபாவளி நிகழ்த்திவிடுகிறது. மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி போன்ற ஊர்களில் இருக்கும் இதுபோன்ற வீதிகளை வலம் வரலாம், வாருங்கள்.

அனகோண்டாவாக மாறும் நேதாஜி சாலை!

மதுரையின் இதயமான மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பிரதான ரத்தக்குழாய் போன்ற வீதியே நேதாஜி சாலை. மற்ற நேரங்களில் பேருந்து போக்குவரத்தே நடக்கிற இந்தச் சாலையில், தீபாவளி நேரத்தில் எறும்பூற இடமிருக்காது. தென்னங்குருத்து, பருத்திப்பால், பனங்கற்கண்டுப் பால், தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் வியாபாரம் நடந்த வீதி, பல நூதன பொருட்களின் சந்தையாக மாறிவிடுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், பேன்ட், சட்டை, சுரிதார், ரிப்பன், பனியன், ஜட்டி, வாட்ச், கம்மல், வளையல், குடை, பொம்மைகள் என்று ரங்கநாதன் தெருவின் நகல் போலத் தெரிந்தாலும், மதுரைக்கான தனி அடையாளங்களும் உண்டு.

x