அடுத்தது என்ன?- ஏகாந்த எடப்பாடியார்... ஏமாற்ற தினகரன்..!


குள.சண்முகசுந்தரம்

சத்யாவின் பிள்ளையும் சந்தியாவின் பிள்ளையும் கட்டிக் காப்பாற்றி வந்த இயக்கத்தை இப்போது சத்தியநாராயணன் காப்பாற்றிவிட்டார்” பதினெட்டு எம் எல் ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை அதிமுக வட்டாரம் இப்படித்தான் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பாவம், தினகரன் முகாம்தான் சற்றும் எதிர்பார்க்காத இந்தத் தீர்ப்பால் துவண்டுபோய்க் கிடக்கிறது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பால் கலகலத்து நிற்கும் தனது முகாமை கட்டிக்காக்க வேண்டுமானால், தினகரன் அடுத்த அஸ்திரத்தை எடுத்தாக வேண்டும். “தீர்ப்பு எங்களுக்குப் பாதகமாக வந்தால் உச்ச நீதிமன்றத்துக்குப் போகமாட்டோம்; தேர்தலைச் சந்திப்போம்” என்று முன்பு சொல்லியவர், இப்போது அந்த மனநிலையில் இல்லை. அப்பீலுக்குப் போய் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இந்த விவகாரத்தை இழுக்க  முடிவெடுத்திருக்கிறார்.

தேர்தல் ஆணையம் 20 தொகுதிகளுக்கும் உடனடியாக இடைத் தேர்தலை அறிவித்துவிட்டால் தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்துக்குப் போக முடியாது. ஆணையம் அப்படி உடனடி முடிவெடுக்க வேண்டுமானால் மத்திய அரசிடமிருந்து சிக்னல் வரவேண்டும். ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தை இப்போதைக்கு ஆறப்போடவே நினைக்கிறது. தினகரன் தரப்பினர் உச்ச நீதிமன்றத்துக்குப் போனால் இப்போதைக்கு இடைத் தேர்தல் நடத்தவேண்டிய அவசியம் இருக்காது. இதைத்தான் மத்திய, மாநில அரசுகள் விரும்புகின்றன. ஆக, சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புமே இப்போதைக்கு இடைத் தேர்தலை விரும்பவில்லை.

x