என்றென்றும் ஏழுமலையான்! 13: பெருமாளுக்காக கரகம் ஆடும் கிருஷ்ணன்


திருவேங்கடவனுக்கு மறைமுகமாக சேவை செய்வோர் பலர் உள்ளனர். இவர்களில் சிலர் பிரபலமானவர்கள். பலர் ஊர் பெயர்கூட காட்டிக்கொள்ளாமல் ஆண்டாண்டு காலமாக அரங்கனுக்குத் தொண்டு செய்து வருகின்றனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பக்தர் பெருமாள் மீது கொண்ட அதீத பக்தியால் தனது சொந்த ஊரை விட்டு திருப்பதிக்கு வந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பதியில் கரகம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தை பிரம்ம தேவனே முன்னின்று நடத்துவதாக ஐதீகம். அதனால்தான் இதற்கு பிரம்மோற்சவம் எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் அடையாளமாக பிரம்மோற்சவத்தின்போது, சுவாமியின் வாகன சேவையின் முன், ஒரு சிறிய தேரை பக்தர்களும் வாரி சேவகர்களும் இழுத்துச் செல்வதை நாம் பார்க்கலாம். இது பிரம்ம தேராக அழைக்கப்படுகிறது. இவ்வளவு பிரசித்தி பெற்ற ஏழுமலையான் பிரம்மோற்சவத்தில் உற்சவரான மலையப்பர் 9 நாளும் 16 வாகனங்களில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

கரகம் ஆடும் கிருஷ்ணன்

பிரம்மோற்சவம் போன்ற முக்கிய விழாக்களின்போதும் காலையும் இரவும் நடக்கும் வாகன சேவையின்போதும் தன்னந்தனியாக ஒருவர் மட்டும் ஏழுமலையான் வேடமிட்டு, தலையில் 5 அடுக்கு கரகம் வைத்து ஆடியபடி வருவார். அவர்தான் கிருஷ்ணன். தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் தொடங்கி அத்தனை பேரும் அவருக்கு அவ்வளவு மரியாதை கொடுத்துப் பேசுவார்கள். யார் இந்த கிருஷ்ணன், இவர் எப்படி திருப்பதிக்கு வந்தார்? அவரிடமே கேட்போமா...
“எனக்கு சொந்த ஊர் கிருஷ்ணகிரி. அப்பா பெருமாள், அம்மா பச்சையம்மா. எங்கள் குடும்பமே கரகம் ஆடுவதை தொழிலாகக் கொண்ட குடும்பம். எங்க தாத்தா காலம் வரைக்கும் கரகாட்டத்துக்கு நல்ல மவுசும் மரியாதையும் இருந்துச்சு. கடந்த 30 வருசமாத்தான் கரகத்தைக் கண்டுக்க ஆளில்லாம இருக்கு. அதனால கரகக் கலையே அழியும் நிலைக்குப் போயிக்கிட்டு இருக்கு. சின்ன வயசுலயே எங்கப்பா எனக்கு கரகம் சொல்லிக்குடுத்துட்டதால நான் படிக்கக்கூட இல்ல. கரகாட்டத்தைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. ஊள்ளூருலயும் அக்கம் பக்கத்துலயும் நடக்கும் திருவிழாக்கள்ல கரகம் ஆடிட்டு இருந்தேன். அப்பா, அம்மா இறந்துட்ட பிறகு அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்றதுன்ற நிலைக்கு வந்துட்டேன். இந்த உலகமே இருண்டு போன மாதிரி இருந்துச்சு. சொந்த பந்தங்களும் கண்டுக்கல.

கரகம் ஆட அனுமதிக்கல

திருப்பதி ஏழுமலையான் வேடம் போட்டுத்தான் நான் வழக்கமா கரகம் ஆடுவேன். பெருமாள் மேல அவ்வளவு பக்தி, நம்பிக்கை. யாருமே இல்லாம நின்ன சமயத்துல பெருமாளே கதின்னுட்டு 1982-ம் வருசம் திருப்பதிக்கு வந்துட்டேன். பாஷை புரியாத இந்த ஊருல எப்படிப் பொழைக்கப் போறோம்னு உள்ளுக்குள்ள ஒரு பயம் இருந்தாலும், பெருமாள் நம்மள கைவிட மாட்டார்ங்கிற தைரியமும் இருந்துச்சு.

அந்தப் பெருமாளுக்கு முன்னாடி போய் நின்னு, ‘கடவுளே உன்னை நம்பி உன்னோட ஸ்தலத்துக்கு வந்துட்டேன்; எனக்கு இனி நீதான் கதி’ ன்னு சொல்லி கண்ணீரோட வேண்டிட்டு வந்தேன். பிறகு, கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையில் கோயில் திருவிழா நடப்பதை தெரிஞ்சு நானாவே அங்க போய் கரகம் ஆடினேன். அதைப் பார்த்த சிலர், அந்த ஊரில் நடந்த மத்த சில விழாக்களுக்கும் கரகம் ஆட அழைச்சாங்க. வயித்துப் பாட்டுக்காக அங்கேயே சில நாட்கள் தங்கியிருந்து கரகம் ஆடினேன். அந்தச் சமயத்துல திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வந்துச்சு. அப்பவும் திருமலைக்கு சென்று, மாட வீதிகளில் கரகம் ஆடினேன். ஆனா, பாதுகாப்பு கருதி என்னை தேவஸ்தான அதிகாரிகள் கரகம் ஆட அனுமதிக்கல. ‘காசெல்லாம் வேண்டாம் சார் சுவாமிக்கு முன்னாடி என்னைய கரகம் ஆட அனுமதிங்க சார்’னு எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன். அப்படியும் அனுமதிக்காததால அழுதுகிட்டே ராஜம்பேட்டைக்கே வந்துட்டேன்.

ஸ்பெஷல் கரகம்

எனக்குன்னு ஸ்பெஷலா ஒரு கரகம் தயார் செஞ்சுக்கணும்னு நினைச்சேன். அதுபடியே, சுழலும் அஞ்சு அடுக்கு கொண்ட வித்தியாசமான கரகத்தை நானே தயாரிச்சேன். அதுக்கு பெருமாள் கரகம்னே பேரு வெச்சேன். அந்தக் கரகத்தை வெச்சுக்கிட்டு, அன்னமைய்யா பிறந்த ஊரான தாளப்பாக்கம், நந்தலூரு சோமலிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பலகோயில் விழாக்களில் கரகம் ஆடினேன். அதுல கிடைச்ச வருமானத்துல வயித்தைக் கழுவுனேன். கொஞ்ச நாள் கழிச்சு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு வந்தப்ப திருப்பதியில பிரம்மோற்சவம் நடந்துட்டு இருந்துச்சு. அப்பவும் நானாகவே போய் மாடவீதிகள்ல கரகம் ஆடுனேன். அதைப் பார்த்துட்டு அப்போதைய கோயில் அதிகாரி லட்சுமிபதி, பிரம்மோற்சவ விழாக்களில் மாட வீதிகளில் சுவாமி முன் கரகம் ஆட எனக்கு அனுமதி வழங்கினார்.

1998ம் வருசம், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துல இருக்கிற தர்ம பிரச்சார பரிஷத் பிரிவுல சேர்ந்தேன். அதுலருந்து கடந்த இருவது வருசமா பிரம்மோற்சவத்திலும் திருமலை, திருச்சானூர், கோவிந்தராஜர் கோயில், நிவாச மங்காபுரம், நாராயண வனம், அப்பலைய்ய குண்டா என அனைத்து தேவஸ்தான கோயில் பிரம்மோற்சவத்திலும் நான் கரகம் ஆடிட்டு இருக்கேன். ஆரம்பத்துல சுமார் பத்து வருசம் என்னோட ஆத்ம திருப்திக்காக ஊதியம் வாங்காமத்தான் ஆடுனேன். அதுக்கப்புறம்தான் என்னை ஊக்குவிக்கும் விதமாக ஒரு நாளைக்கு 100 ரூபாய் அன்பளிப்பா குடுக்க ஆரம்பிச்சாங்க. இப்ப அது 750 ரூபாய்ல வந்து நிக்குது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்ல வெள்ளிக்கிழமைகள்ல தாயார் வீதியுலா நடைபெறும். அங்கயும் இப்ப கரகம் ஆடிட்டு இருக்கேன்.

பொண்ணு குடுக்க மாட்டாங்க கரகம் ஆடுறவங்களுக்கு பொண்ணு குடுக்க யோசிப்பாங்க. அது எனக்கும் நடந்துச்சு. கரகம் ஆடுறதோட மட்டுமில்லாம சொந்த பந்தம் எதுவுமே இல்லாத எனக்கு யாரும் பொண்ணு தர மறுத்துட்டாங்க. அதுக்காக நான் கவலைப்படல. பெருமாள் வேஷம் போட்டு கோயில்கள்ல கரகம் ஆடி சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்துல சின்னதா ஒரு வீட்டுமனையை வாங்கினேன். மனை இருக்குன்னதும் பொண்ணு குடுக்க முன்வந்தாங்க. அப்படித்தான் லட்சுமி எனக்கு மனைவியா வந்தாங்க. என் மனைவிக்கும் கரகம் கத்துக் குடுத்தேன். எங்களுக்கு இப்ப மூணு மகள்கள் இருக்காங்க. நான் படிக்கமுடியலைன்னாலும் அவங்கள நல்லா படிக்க வெச்சுட்டு இருக்கேன். அவங்களுக்கும் கரக கலையைச் சொல்லிக் குடுத்துருக்கேன். மூத்தவள் ஜெயலட்சுமி இப்ப நடந்த பிரம்மோற்சவத்துல என்னோட சேர்ந்து மாட வீதியில கரகம் ஆடுனா. வாங்கிப்போட்ட வீட்டு மனையில சின்னதா ஒரு வீடும் கட்டியாச்சு. இது எல்லாமே அந்த ஏழுமலையானோட மகிமைதான்” என்று சொன்ன கிருஷ்ணன் நிறைவாக, “எனக்கு இப்ப 60 வயசாகிருச்சு. இன்னமும் உடம்புல தெம்பு இருக்கு. அது இருக்கிற வரைக்கும் பெருமாளுக்காக கரகம் ஆடுவேன். அதுக்கப்புறம் அந்தப் பெருமாள் என்ன நினைக்கிறாரோ, அதுபடி நடக்கட்டும்” என்று முடித்தார்.

(முகங்கள் வரும்...)

x