நீரோடிய காலம் 4: மயிலாடுதுறையின் பிரபலம்!


சமீப காலமாக, தஞ்சைப் பகுதியில் பயணங்கள் மேற்கொள்ளும்போது சில விஷயங்கள் சட்டென்று புலப்படும். சிற்றூர்களிலும் கிராமங்களிலும் மக்கள் மிகச் சிறிய, எளிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். தொலைக்காட்சி, கைபேசி, இருசக்கர வாகனங்கள், கணிசமான மாடிவீடுகள் என்று நவீனம் பல இடங்களில் எட்டிப்பார்த்தாலும் வாழ்க்கை இன்னும் சிறியதாகத்தான் இருக்கிறது. அதுவே ஒரு தனி அழகையும் இந்தப் பகுதிகளுக்குத் தருகிறது.

சிறுசிறு கடைவீதிகள், அவற்றிலுள்ள டீக்கடைகள், ஜவுளிக்கடைகள், கூடவே புதிதாக வந்துசேர்ந்த பானிபூரி கடைகள் எல்லாம் மனிதர்களை இன்னும் அங்கெல்லாம் உயிரூட்டிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக, டீக்கடையில் ஆட்கள் அரசியல் பேசிக்கொண்டும், உள்ளூர் வம்பு பேசிக்கொண்டும் இருப்பதைப் பார்ப்பது ஆசுவாசம் வருகிறது. நவீன சாதனங்கள் மனிதர்களின் நேரடி உரையாடலை இன்னும் அபகரித்துவிடவில்லை என்று ஒரு நிம்மதி!

இது ஒரு நாணயத்தின் பூப் பக்கம். தலைப் பக்கத்தில் பார்த்தால் தஞ்சைப் பகுதிகள் யாவும் பெருங்காயம் இருந்த டப்பாவாகத்தான் இன்று காட்சியளிக்கின்றன. பெரிய அளவுக்கு நிலம் உள்ளவர்கள், பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பியவர்கள், பிள்ளைகளைத் தகவல்தொழில்நுட்பம், தொழில் மேலாண்மை போன்ற படிப்புகளைப் படிக்க வைத்து வேலைநிமித்தம் வெளியூர்அனுப்பியவர்கள் வாழ்க்கையில் பெரிய சிக்கல் இல்லை. அதுவும் மயிலாடுதுறையின் சுற்றுப்புறம் போன்று இன்னும் விவசாயம் உயிரைப் பிடித்துக்கொண்டிருக்கும் இடங்களில் பயணிப்பது என்றுமே சற்று நம்பிக்கை தருவது. அதே நேரத்தில், அதே சுற்றுப்புறங்களில் நிலமற்ற விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிள்ளைகளைப் படிக்க வைக்கவோ வெளிநாடு அனுப்பவோ வசதியற்றவர்கள் போன்றோரின் முகத்தைப் பார்த்ததுமே பெரிய இருட்டின் சுவடு புலப்படுகிறது. பீடி இழுத்து இழுத்து ஒட்டிப்போன கன்னங்கள், சவரம் செய்து சில நாட்கள்ஆனதைக் காட்டும் முள்தாடி, ஒடுங்கிப்போன கண்கள், வாங்கிய அன்று மட்டும் வெள்ளையாக இருந்திருக்கக்கூடிய வேட்டி, சட்டைகள் எல்லாமே சீரழிவின் பிம்பத்தை நமக்குச் சட்டென்று காட்டிவிடுகின்றன. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இந்தத் தோற்றமும் வாழ்க்கையும் அழகாகவும் எளிமையாகவும் தெரியலாம். ஆனால், இது தேர்ந்தெடுத்துக்கொண்ட எளிமை அல்ல. அவர்கள் மீது வந்து விழுந்த ஏழ்மை. கூடவே, சீரழிவின் இந்தத் தோற்றத்தை மேலும் மோசமானதாக ஆக்கிவருகிறது குடி!

மயிலாடுதுறையை நோக்கிச் செல்லும் சாலை கொடுத்த காட்சிகளும் எண்ணங்களும் இப்படி!

வழியில் அய்யனார் கோயில் ஒன்று கண்ணில் பட்டது! எந்த ஊருக்குப் போனாலும் அய்யனார் கோயிலைத் தேடிக்கொண்டு போய்விடுவார் பேராசிரியர் தங்க. ஜெயராமன். காரை நிறுத்தச் சொல்லிவிட்டு இறங்கினோம்.

தடித்த, உயரம் குறைந்த கால்களுடன் பெரிய குதிரை ஒன்று நின்றுகொண்டிருந்தது. அந்தக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு சேவகர்கள் இரண்டு பேர் நின்றார்கள். குதிரைக்கும் கோயிலுக்கும் நடுவே குளம் ஒன்று இருந்தது.

தங்க.ஜெயராமன் அய்யனாரைக் கும்பிட்டுவிட்டு வந்தார். குதிரைச் சிலையையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவர், “இது பழங்காலச் சிலை கிடையாது. அய்யனார் கோயில் குதிரைகளையெல்லாம் மண்ணில் செய்து சுடுவதும் இல்லன்னா சுதையில செய்யுறதும்தான் வழக்கம். இது சிமெண்ட்டுல செஞ்சிருக்காங்க. ஆனாலும், தோற்றத்துல மட்டும் பழங்காலஅய்யனார் குதிரை மாதிரி பண்ணிருக்காங்க. நல்ல விஷயம்தான்” என்றார்.
 “எப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டேன்.

“பாருங்க ஆசைத்தம்பி, நம்ம மரபுக் கலைகள்ல மிகைதான் பிரதானம். யதார்த்தத்துக்கு இடம் ரொம்பக் கம்மி. கோயில் சிலைகள்ல உள்ள பெண்களோட ஸ்தனம், இடை, ஆண்களோட புஜம் எல்லாத்தையும் பார்த்தா தெரியும். அதெல்லாம் இயல்பா இருக்காது. ஆனால், அவ்வளவு அழகா இருக்கும். அது மாதிரி, அய்யனார் கோயில் குதிரைச் சிலையெல்லாம் குதிரையை அச்சடிச்ச மாதிரி இருக்காது. காலெல்லாம் தடிப்பா இருக்கும். அதோட சிரிப்பு, மனுச சிரிப்பு மாதிரி நக்கலும் உக்கிரமும் கலந்து இருக்கும். ஆனா, இப்ப உள்ள கோயில்ல எல்லாம் சிலைகளை யதார்த்தமா இருக்குற மாதிரி செஞ்சி வைக்கிறாங்க. அதுக்கு அய்யனார் கோயில் குதிரைகளும் பலி ஆயிடுச்சு. அது நல்லா இருக்குறது இல்ல”என்றார்.

அய்யனாருக்கு விடைகொடுத்துவிட்டு மறுபடியும் காரில் வந்து உட்கார்ந்துகொண்டோம். போகும் வழியில் அருகில் ஒரு பெரிய ஊர் இருப்பதற்கான தடயங்கள் அதிகரித்துக்கொண்டே வந்தன. இருந்தாற்போல் இருந்து மயிலாடுதுறையும் வந்துவிட்டது.

ஆடிப்பெருக்குக்கு முந்தைய நாள் என்பதால் கடைத்தெருவில் ஓரளவு கூட்டம். உச்சிவெயில் நேரத்தையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆடிப்பெருக்குக்கான சாமான்களை வாங்க வந்திருந்தார்கள். காரை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு வீதியில் நடந்தோம்.
பாரம்பரிய மிக்க ஒரு ஊரின் கடைவீதி. குவித்து வைக்கப்பட்டிருந்த மல்லிகையின் வெண்பச்சை, கதம்பமலர்களின் கதம்ப நிறங்கள், பேரிக்காயிலேயே தளிர் பச்சையும் கடும் பச்சையும், காதோலை-கருகமணி பாக்கெட்டுகளின் மினுக்காட்டம், வரும் போகும் மக்களின் ஆடை வண்ணங்கள் என்று எல்லா வண்ணங்களையும் அடிக்கும் வண்ணங்களாக ஆக்கிக்கொண்டிருந்தது வெயில்.

கடைவீதி கிளைவிரிக்கும் இடத்தில் ‘விக்டரி கிளாக் டவர்’ என்ற மணிக்கூண்டு, வெயிலுக்கு எதிராகஉயர்த்தப்பட்ட கைபோன்று நின்றுகொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து பெற்ற வெற்றியொன்றின் நினைவாக ஹாஜி ஜனாப் எஸ்.ஈ. அப்துல் காதிர் சாஹிப் என்பவர் அளித்த பரிசுதான் இந்த மணிக்கூண்டு. மதறாஸ் மாகாணத்தின் அன்றைய கவர்னர் சர். ஆர்தர் ஹோப் கே.சி.ஐ.ஈ.சி.ஐ.ஈ என்பவர் 29-11-1943-ல் திறந்துவைத்திருக்கிறார்.

இடையே ஒரு வடக்கிந்தியச் சிறுவன் ‘பர்தேசி பர்தேசி ஜானா நஹி’யைத் தன் ஊதலில் வடியவிட்டுச் சென்றுகொண்டிருந்தான். ஊர்ப்பக்கமெல்லாம் நிறைய பிஹாரிகளும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தென்பட ஆரம்பித்திருக்கிறார்கள். திருவிழாக்களில் முன்பு நம்மூர் ஆட்கள் விற்றுக்கொண்டிருந்ததையெல்லாம் இப்போது அவர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். கூடவே, சிற்றூர்களிலும் பானிபூரி கடைகள். வழக்கமாக, தெற்கின் மீது வடக்கு செலுத்தும் ஆதிக்கம் நமக்கு கோபத்தை வரவழைப்பதுதான். ஆயினும், பிழைப்புக்காக இங்கு வந்து ஊதல்களில் ‘பர்தேசி பர்தேசி ஜானா நஹி’யையும், வாய்க்குள் போட்ட பிறகு கண்களை ஒரு நிமிடம் மூடவைத்து சொர்க்கத்தைக் காட்டும் பானிபூரியையும் விற்கும் அடித்தட்டு வடக்கிந்தியர்கள் மீது கோபம் வருவதில்லை.

ஒருங்கிணைந்த தஞ்சையின் மற்ற பகுதிகளைவிட மயிலாடுதுறைப் பகுதிதான் கலைவளமும் நிலவளமும் அதிகம் கொண்டது என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். தமிழ்க் கவிகளின் உச்சமாகக் கருதப்படும் கம்பர் பிறந்த தேரெழுந்தூர் அருகில்தான் இருக்கிறது. திரைத்துறை, கலைத்துறை எழுத்துத் துறை என்று பார்த்தால் மயிலாடுதுறையிலோ சுற்றுவட்டாரங்களிலோ பிறந்த பிரபலங்களின் பட்டியல் எம்.கே. தியாகராஜ பாகவதரில் தொடங்கி, காளி.என். ரத்தினம், டி.ராஜேந்தர், வழுவூர் ராமையா பிள்ளை, கல்கி, கோமல் சுவாமிநாதன், ஞானக்கூத்தன் என்று நீளும்.

இங்கிருந்து சென்றிருக்கும் பிரபலங்களுக்கு இணையாக இங்கேயே இருக்கும் பிரபலமும் உண்டு. அதுதான் மயிலாடுதுறையின் காவிரிப் படித்துறை. காவிரிப் பாலத்துக்கு கிழக்கில் பார்த்தால் தெரியும் படித்துறை. அதை துலா ஸ்நான கட்டம் என்பார்கள். இங்கு துலா மாதத்தில் (ஐப்பசியில்) ஆண்டுதோறும் காவிரியில் புனித நீராடுவார்கள். அதன் இறுதி நாளுக்குக் கடைமுகம் என்று பெயர். மயிலாடுதுறையின் மதிப்பு மிகுந்த மாதானத் தெரு இங்கு வந்து காவிரிக் கரையில் முடியும். துலா மாதத்தில் மயூரநாத சுவாமி இங்கு வருகைதர, தீர்த்தவாரி நடக்கும். பாலம் தாண்டி காவிரியின் வலது புறம் காவிரிக் கரையோடு பூம்புகார் சாலை. இடதுபுறம் திரும்பிச் சென்றால் திரு இந்தளூர் பரிமளரெங்கநாதர்.

அடுத்த நாள், ஆடிப்பெருக்கின் காலைப் பொழுதில் வந்திருந்தால் கூட்டம் சொல்லி மாளாமல் இருந்திருக்கும். முந்திய நாள் என்பதாலும் உச்சிப்பொழுது என்பதாலும் காவிரியை இடையூறு செய்யாமல் மனிதர்கள் விட்டிருந்தார்கள். காவிரிஓடும் அழகை, சாய்ந்த பார்வையில்படித்துறைகள் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தன. காவிரிக் கரையைஒட்டி இருக்கும்  ஒருசில கட்டிடங்களும் சந்தன நிறத்தில் பழமையின் அழகைக் காவிரியின் தண்ணீரில் பிரதிபலித்துக்கொண்டிருந்தன. காவிரிக்கு மூக்கடைப்பு வந்தால் போட்டுக்கொள்வதற்கேற்ப கரையை ஒட்டியே, சாலையோரத்தில் ‘டி.டி. பட்டணம் பொடி’ என்ற பெயர்ப் பலகையுடன் ஒரு பொடிக்கடை இருந்தது. பொடி போடுவது ஆபத்தானது என்றாலும் பொடிக்கடையின் அழகே தனிதான் இல்லையா!

வழியெல்லாம் காவிரியென்றாலும்  நமது பயணத்தின் இலக்கு கொள் ளிடம் கடலில் கலக்கும் இடமல்லவா... மயிலாடுதுறையிலிருந்தும் புறப்பட்டோம்!

(சுற்றுவோம்...)

-ஆசை

x