ரஃபேல்... ஆயுதபாணி... அஷ்டாவதானி!


எஸ்.எஸ்.லெனின்

இந்திய அரசியல் வானில் நிலைகொண்டிருக்கும் வலுவான புயல் சின்னமாகி இருக்கிறது, ரஃபேல் போர் விமானங்களுக்கான கொள்முதல் ஒப்பந்த விவகாரம். அரசியல் அக்கப்போர்களுக்கு அப்பால் இந்த ரஃபேல் போர் விமானங்களில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆவல் எழுகிறதா?

ரஃபேல் போர் விமானங்களின் சுவாரசியப் பின்னணி 70-களின் இறுதியில் தொடங்குகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல்வேறு நாடுகளும் தங்கள் ராணுவ வலிமை மற்றும் தளவாடப் பெருக்கத்தில் கவனம் செலுத்த, அப்போரில் பலமாக அடிவாங்கிய பிரான்ஸ் தனது அடியை நிதானமாகவே முன்னெடுத்தது. நாட்டின் விமான மற்றும் கப்பற்படையை நவீனப்படுத்தும் முயற்சிகளில், எதிர்காலத்திற்கான போர் விமானம் ஒன்றை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சிகளும் ஆரம்பித்தன. இடையில் செலவுகளைக் குறைப்பதற்காக இத்திட்டத்தில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், மேற்கு ஜெர்மனி எனத் தனது ஐரோப்பிய நண்பர்களைக் கூட்டு சேர்த்துக்கொண்ட பிரான்ஸ் சில பிணக்குகளால் பிற்பாடு அதிலிருந்து கழன்றுகொண்டது.

ரஃபேல் போர் விமானத் திட்டத்தினை வடிவமைத்து நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ‘மார்செல் தஸ்ஸோ’ என்பவர் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. 1986 ஜூலையில் மாதிரி விமானமான ‘ரஃபேல் ஏ’ மணிக்கு 1300 கி.மீ வேகத்தில் வானில் தாவிப் பறந்தது. ரஃபேல் ஆராய்ச்சிகளை முன்னிறுத்தி 40 ஆண்டுகளுக்கான நீண்டகாலத் திட்டத்தை அதிகாரபூர்வமாக அறிவித்ததுடன், அதற்கான நிதியையும் பிரான்ஸ் அரசு தாராளமாக ஒதுக்கியது. நாட்டின் தலைசிறந்த பொறியாளர்களின் 20 ஆண்டுகால உழைப்பில் மேம்படுத்தப்பட்ட ரஃபேல் விமானங்கள் தயாராயின. அவை 2004-ல் பிரெஞ்சு கப்பற்படையிலும் விமானப்படையிலும் இணைந்தன. இப்படித்தான் ‘மீடியம் மல்ட்டிரோல் காம்பேக்ட் ஏர்கிராப்ட்’ என்ற வகையிலான நவீன போர் விமானங்களாக ரஃபேல் உருவெடுத்தது. வானில் பறந்தபடியே வான் மற்றும் நிலத்தில் தாக்குதல் நடத்துவதுடன், சாதாரண ஏவுகணைகள் முதல் அணு ஆயுதங்கள் வரை ஏந்திச் செல்வது, எதிரிகளின் ரேடார் கண்களில் சிக்காது உளவு பார்ப்பது என ரஃபேலின் சூரதீரங்கள் நீள்கின்றன. போர் விமானங்களின் செயல்திறனைக் கணிப்பதற்கு அதன் முந்தைய போர்முனை அனுபவங்களே உரைகல்லாகும். அந்த வகையில் லிபியா, மாலி, ஈராக், சிரியா என யுத்த பூமிகளில் ரஃபேல் துவம்சம் செய்திருக்கிறது.

x