நல்ல பல மாற்றங்கள் உருவாகும்!


அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டுப் பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை கூடுதலாக ஒரு சதவீதம் உயர்த்தி அறிவித்திருக்கிறது தமிழக அரசு.  படிப்பும் விளையாட்டும் இரண்டு கண்களாக இருக்க வேண்டுமென்கிற நோக்கத்தில்  தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பை உரிய கவனத்துடன் நடைமுறை சாத்தியமாக்கும்போதுதான் நல்ல பல மாற்றங்கள் உருவாகும்.

பள்ளி - கல்லூரிகளில் விளையாட்டும் உடற்பயிற்சியும் கட்டாயப் பாடமாக்கப்பட்டு அதில் பெறுகின்ற மதிப்பெண்ணும் தேர்ச்சிக்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே ஒரு மனிதனை முழுமையாக்கிவிடாது. ஆரோக்கியமான சிந்தனையும்  - வளர்ச்சியும், ஆரோக்கியமான உடல் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

பரந்து விரிந்த விளையாட்டு மைதானங்களே பள்ளிக்கூடங்களுக்கான அடையாளமாக இருந்தது ஒரு காலம். ஆனால் இன்றோ, புறா கூண்டுகள் போல நெருக்கமான அடுக்குமாடி கட்டிடங்கள் மட்டுமே பணம் காய்க்கும்  பள்ளிக்கூடங்களின் அடையாளமாய் தெரிகின்றன. இந்தக் கட்டிடடங்களுக்குள் நாள் முழுவதும் மாணவர்களை அடைத்துவைத்து கல்வியைத் திணிப்பது மட்டுமே பள்ளிகளின் வேலையாகிவிட்டது.

இதனால், வெளி விளையாட்டு என்பதையே மறந்து அலைபேசிக்குள்ளும் கணினிக்குள்ளும் தங்களது விளயாட்டு மைதானத்தைக் குறுக்கிக்கொண்டு மெய்நிகர் உலகத்தில் ஆழ்ந்து கிடக்கிறது இளைய சமுதாயம். உடம்பில் வெயிலே படாமல், வியர்வையே சிந்தாமல் இப்படி முடங்கிக் கிடப்பதால் அவர்கள் பலவிதமான உடல் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். இன்னும் சிலரோ, விதம்விதமான மனச் சிக்கல்களுக்கு உள்ளாகி சமூகச் சீர்கேடுகளிலும் சிக்கிக் கொள்கிறார்கள்.

x