கோவையின் மேற்கே கேரள எல்லையில் பதுங்கிக் கிடக்கும் மலைப் பகுதிகளில் வியாபித்து நிற்கும் ஆனைகட்டிக் காடுகளின் வழியாகச் சாலையில் பயணித்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் மரங்களின் பசுமை. திக்கெட்டும் நாசியைத் துளைக்கும் மூலிகை வாசம். அதையும் தாண்டி, துணுக்காய் நம் காதில் வந்து விழுகிறது ஆலமரமேடு டீக்கடை ஒன்றிலிருந்து அந்த கானம். கரடுமுரடான ஆண்குரலில் மிதந்துவந்த கானம்.
கடையில் கூடியிருந்த நான்கைந்து பேருக்கு நடுவே கைகளை விரித்துத் தாள லயத்தோடு பாடிக்கொண்டிருக்கிறார் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான கரட்டி.
‘நாம இருப்பது சோலை நாடே-ராகி
புட்டு, அவரை தந்தே நாடே!
நமக்கே நாடுதான் அய்யா மேலை நாடே-நாம
இருப்பது சோலை நாடே!
தானேதானேன்னா தானேனான்னா-ஏலே,
லேலேலோ தில்லாலே லோலோ!
அய்யா நாடு கெட்டுப்போச்சு தில்லாலே லோ லோ-ஊரும்
கெட்டுப்போச்சு தில்லாலேலோலோ!
அய்யா போகப்போக ரஜினிக் கடை-போயிப்
பார்த்தா ரொட்டிக்கடை
அய்யா போகப் போகக் கள்ளுக்கடை
குடிக்கக் குடிக்கக் கொண்டாட்டம்தான்-குடிச்சுப்
பார்த்தா திண்டாட்டம்தான்.
நமக்கு நாடுதாய்யா மேல நாடே-நாம
இருப்பது சோலை நாடே!’
ஊரைப் பற்றி, ஊரில் வாழும் மக்களைப் பற்றி, அவர்களின் வாழ்க்கை பற்றி, தொழில் பற்றி எதைப் பற்றிக் கேட்டாலும் பாடலில் பற்றிக்கொண்டு தாள லயத்தோடு பாட ஆரம்பித்துவிடும் கரட்டிக்கு வயது 50. மகன் - மருமகள், மகள் - மருமகன் என வாழ்ந்து கொண்டிருக்கும் இவருக்கு மாடு மேய்ப்பதும் கிடைத்த கூலிக்குப் போவதும்தான் தொழில். என்றாலும் அட்டப்பாடி பகுதியில் இருளர் பழங்குடியின மக்களின் சீர்முறை, கல்யாணம், இறப்பு, பிறப்பு என்று எது நிகழ்ந்தாலும் அங்கே இருளர் இன மொழியில் (நமக்கு 90 சதவீதம் புரியாது) பாட்டுக் கட்டுவது கரட்டிதான்.