அகதியாய் போனவர் ஆலயம் கட்டிய கதை!- அசாத்திய மனிதர் ஆறுமுகம் பாஸ்கரன்


ஒரு நாட்டைவிட்டு இன்னொரு நாட்டுக்கு அகதியாய் செல்பவர்கள் அடுத்த வேளை பிழைப்புக்கு என்ன வழி என்றுதான் பார்ப்பார்கள். ஆனால், ஆறுமுகம் பாஸ்கரன் அதையும் கடந்து சாதித்தவர்!

இலங்கையில் யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள ஜெப்னாலில் வசித்தது ஆறுமுகம் பாஸ்கரன் குடும்பம். அங்கு நடந்த இன மோதல்களைத் தொடர்ந்து, இவரது குடும்பம் தாய்த் தமிழகத்துக்கு அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தது. கடலூர் மாவட்டத்தின் குறிஞ்சிப்பாடி முகாம் இவர்களை அரவணைத்துக் கொண்டது. அங்கிருந்து கொண்டு இவர்கள் நாட்களை நகர்த்திய வேளையில், முகாமிலிருந்த இளைஞர்கள் சிலர் அகதிகளாக ஜெர்மனிக்குப் புறப்பட்டார்கள். 

அப்புறம் நிகழ்ந்தவற்றை ஆறுமுகம் பாஸ்கரனே இங்கே விவரிக்கிறார். “ஜெர்மனியில் ஹம் என்ற இடத்தில் தங்கிக்கொண்டு அரசு தந்த அகதிகளுக்கான உதவித்தொகையின் மூலம் காலத்தை ஓட்டினேன். கிடைத்த சிறுசிறு வேலைகளையும் செய்தேன். ஒருவழியாக எனக்கான நிரந்தர வருமானத்தை ஏற்படுத்திக் கொண்டேன். நாங்களிருந்த பகுதியில் சுமார் 300 தமிழ்க் குடும்பங்கள் இருந்தன. அவர்களின் வறுமையை சாதகமாகப் பயன்படுத்தி அவர்களை மதம் மாற்றும் முயற்சிகள் நடந்தன. அப்போதுதான் இந்துப் பாரம்பரியத்தைக் காக்க நாமும் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலைக்கு நான் உந்தப்பட்டேன்.
ஆரம்பத்தில், நான் தங்கியிருந்த இடத்தில் சாமி படங்களை வைத்து பூஜைகளைச் செய்ய ஆரம்பித்தேன். அதற்கு இறை நம்பிக்கை உள்ள அனைவரையும் அழைத்தேன். அப்படி வந்தவர்களுக்கு இந்து மதத்தின் அருமை பெருமைகளை எடுத்துச் சொன்னேன். இதற்காக இந்து சமயம் சார்ந்த நூல்களையும் வாங்கிப் படித்தேன். இந்து சமய கோட்பாடுகளை அச்சிட்டும், நகல் எடுத்தும் வீடுவீடாகச் சென்று விநியோகித்தேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு, மதம் மாறியிருந்த தமிழர்கள் பலரும் மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பினார்கள்.

நாங்கள் அனைவருமாகச் சேர்ந்து 1989-ல் அங்கே சின்னதாய் ஒரு காமாட்சி அம்மன் கோயிலைக் கட்டினோம். அந்தச் சமயத்தில்தான் காஞ்சி மகாபெரியவரின் ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. படிக்கப் படிக்க அவரின்பால் பக்தி அதிகரித்தது. பல விஷயங்களில் தெளிவும் கிடைத்தது. காமாட்சியம்மன் மீதும் தீராத பக்தி வந்தது. இதற்கிடையில், எங்கள் கோயில் இன்னும் பிரபலமானதால் 1993-ல் இந்தியாவிலிருந்து மரத்தால் ஆன ரதம் ஒன்றை வரவழைத்து ரத உற்சவம் நடத்தினோம். அப்போதே அந்த உற்சவத்தில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு ஹம் நகருக்கு வெளியிலிருந்தும் பக்தர்கள் வர ஆரம்பித்தார்கள். அதனால், கோயிலை இன்னும் விஸ்தரிக்க முடிவு செய்தோம். அதற்காக ஒரு இடத்தை வாங்கி, கட்டுமான திட்டம் வரைந்து ஜெர்மனி அரசுக்கு அனுப்பினோம்.

x