இந்தப் பணம் இருந்தா புள்ளைங்களுக்கு ஏதாச்சும் செய்யலாம்!- இப்படியும் ஒரு ஆசிரியர்


கா.சு.வேலாயுதன்

இவரைப் போல் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் இருந்தால் கல்வி வளர்ச்சியில் தமிழகம் எங்கோ போய்விடும் என்று தோன்றியது, சதீஷ்குமாரைப் பார்த்தபோது. திருச்சி, லால்குடி, பூவாளூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் சதீஷ்குமார் ‘சாட்டை’ திரைப்படத்தில் வரும் சமுத்திரக்கனியை ஞாபகப்படுத்துகிறார். கோவிந்தராஜூலு - வனசாட்சி மெமோரியல் டிரஸ்ட்டின், ‘எஸ்.ஜெகன்னாதன் நினைவு நல்லாசிரியர் விருது’ பெறுவதற்காக கோவை வந்திருந்த அவரைச் சந்தித்தேன். “இதுக்கு முன்னே தேடி வந்த விருதையெல்லாம் நான் வாங்கப் போகலை சார். ரூ.50 ஆயிரம் விருதுத் தொகைதான் நான் இங்கே வரக் காரணம். அதுல என் பள்ளிக்கூடப் புள்ளைகளுக்கு ஏதாச்சும் செய்யலாம் இல்லீங்களா?” என்று பேச ஆரம்பித்தார்.

சதீஷ்குமாருக்கு ரங்கம் பூர்வீகம். அப்பா நேர்மையான, போலீஸ்காரர். அவரிடம் கற்றுக்கொண்ட நேர்மைதான் தனக்கு இன்றுவரை துணையாக இருக்கிறது என்று நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட சதீஸ்குமார், பூவாளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2008-ல் பணி நியமனம் செய்யப்பட்டார். அப்போது அப்பள்ளியின் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 986. அது வேகமாகக் குறைந்து 315-க்கு வந்துவிட்டது. மாணவர் எண்ணிக்கை சரியக் காரணம், அருகில் உள்ள ஊர்களில் தனியார் பள்ளிகள் நிறைய வியாபித்திருந்ததுதான். அப்பள்ளிகளில் உள்ள வசதிகள் இங்கேயும் இருந்தும், அது மக்களுக்குத் தெரியவில்லை. எனவே, அதைச் சரிப்படுத்த நான்காண்டுகளுக்கு முன்பு புதுவிதமான சாட்டையைக் கையில் எடுத்தார் ஆசிரியர் சதீஷ்குமார்.

தனியார் பள்ளிக்கு நிகராக பூவாளூர் பள்ளியிலும் தரமான கல்வி, வசதியான வகுப்பறைகள், சுகாதாரமான சூழ்நிலை, இலவசமாகப் புத்தகங்கள், புத்தகப் பை, தரமான சீருடை, காலணிகள், வண்ணப் பென்சில்கள், ஜியோமெட்ரிக் பாக்ஸ், பஸ் பாஸ், முட்டையுடன் சத்துணவு போன்றவை அளிப்பது குறித்து ஃபிளக்ஸ் போர்டுகள் வைத்து விளம்பரம் செய்தார். இதைத் தனது முகநூல் பக்கத்திலும் பதிவேற்றினார். தனது பள்ளியில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர கடைகடையாய், வீடு வீடாய்ப் போய் உதவிகளைக் கேட்டு பள்ளிச்சூழலையே மாற்றினார் சதீஷ்குமார்.

x