பறையிசையுடன் கல்யாணம்... மாட்டு வண்டியில் ஊர்கோலம்..!


கே.கே.மகேஷ்

“வெளிநாட்டுப் பிரதமரெல்லாம் போவாங்களே, அந்த மாதிரி நீளமான காரு. சுத்தி கையில (டம்மி) துப்பாக்கியோட பத்துப்பன்னெண்டு கருப்புப்பூனைப் படை ஆட்க. காது கிழியுற மாதிரி நாசிக் டோன் மேளம். கல்யாண ஊர்வலத்தைச் சும்மா தெறிக்கவுடுறோம், சரியா?” என்று மாப்பிள்ளையின் தோழர்கள் வற்புறுத்த... கடைசியில் நடந்ததோ வேறு.

பறையிசை முழங்க மாட்டுவண்டியில் பொண்ணு - மாப்பிள்ளை ஊர்வலம். முன்னே கண்டாங்கிச் சேலை கட்டிய பெண்கள் அணிவகுக்க... நடுவில், ஜல்லிக்கட்டுக்காளை. கூடவே, கரகாட்டம், ஒயிலாட்டம். குலவை ஒலிக்க கல்யாணம். “இது மணமேடையா, பாரதிராஜா படத்துக் கிராம செட்டா?” என்று வியக்கவைத்த உள் அலங்காரம் என்று பிரமாதப்படுத்திவிட்டார் கமுதி ஒத்தவீடு கிராமத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை மு.விஜயகுமார்.

மதுரை வில்லாபுரத்தில் நடந்த இந்தத் திருமணம், நாமும் இதே பாணியில் கல்யாணம் பண்ணணும் என்று நிறைய இளைஞர்களுக்கு ஆசையை ஏற்படுத்திவிட்டது. திருமணம் முடிந்து நாட்கள் கடந்திருந்த சூழலில் மணமக்களைச் சந்திக்கச் சென்றோம். “கல்யாண ஊர்வலத்தைப் பார்த்திருப்பீங்க. நிச்சயதார்த்தம் எப்படி நடந்துச்சுன்னு கேட்கலியே?” என்று ‘விருந்தாடி’ வந்திருந்த ஒரு அக்கா கேலியாகச் சிரிக்க, புதுமாப்பிள்ளை விஜயகுமார் பேசத் தொடங்கினார்.

x