அரியநாச்சி 12- வேல ராமமூர்த்தி


மூக்கிலே கோபம்... நாக்கிலே வீம்பு..!

ஜெயிலுக்குள், தோட்டத்தைக் கொத்திக் கிளறி, பயிர், களைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள் கைதிகள். மரத்தடியில் அமர்ந்திருக்கும் வெள்ளையத் தேவனுக்கு, கைதிகளைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு. அவர் பல மாதிரியான யோசனையில் வெளி வானத்தைப் பார்த்து அமர்ந்திருந்தார்.
 “நேத்து பாண்டிப் பய வந்தான். கல்யாணத் தாக்கல் சொல்ல வந்தவன், சரியா மொகம் குடுத்துப் பேசலே. பருசம் போட அக்கா அரியநாச்சி வந்துச்சாடான்னு கேட்டதுக்கு, பதிலே சொல்லலே. இந்தக் கல்யாணத்திலே மாயழகிப்பிள்ளைக்கு சம்மதமான்னு கேட்டதுக்கும் பதில் சொல்லாமல் மழுப்பினான். ஊர்லெ என்ன நடக்குது! சின்னப் பிள்ளைக கூடி கிளியாந்தட்டு ஆடுற மாதிரிலெ இருக்கு!”
வெள்ளையத் தேவனுக்கு நெஞ்சு குமையுது.

தரையைக் கொத்தி பண்படுத்துகிற பாவனையில், நேரத்தை போக்கிக் கொண்டிருந்த கைதிகளில் ஒருவன், வெள்ளையத் தேவனைப் பார்த்து, “நம்ம பெருசுக்கு  எப்போ பார்த்தாலும் ஊரு நெனைப்புதான்..!” என சக கைதிகளிடம் சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.
கையில் லத்திக்கம்போடு வெள்ளையத் தேவனுக்கு அருகில் வந்த ஜெயில் வார்டர், “என்ன தேவரே… சூப்பிரண்டு அய்யாவைப் பார்க்கணும்னு சொன்னீங்க…! அய்யா ஆபீஸுலதான் இருக்காரு. போயி பாருங்க” என்றார்.

“அய்யா இருக்காரா?” கேட்டுவிட்டு எழுந்து, அலுவலகம் நோக்கி நடந்தார்.
வாசலில் நின்ற காவலர், “என்ன தேவரே?” என்றார்.
தலை நீட்டி வாசலுக்கு உள்ளே கூடி பார்த்த வெள்ளையத் தேவன், “எசமானைப் பாக்கணும்…” என்றார்.
“அய்யா… வேலையா இருக்காரே தேவரே..!”
உள்ளிருந்தே காதில் வாங்கிய சிறைக் கண்காணிப்பாளர், “தேவருக்கு என்னவாம்..? உள்ளே வரச் சொல்லு…” என உத்தரவிட்டார்.
வெள்ளையத் தேவன் மெல்ல உள்ளே நுழைந்தார்.
“என்ன தேவரே எப்பிடி இருக்கீக?”
“இருக்கேன் அய்யா... ” ரெண்டு கைகளையும் தூக்கிக் கும்பிட்டார்.
“சொல்லுங்க என்ன விவரம்?” தலை நிமிராமலே கேட்டார்.
“ஏம்பொண்ணு கல்யாணம் வர்ற வெள்ளிக்கிழமை அய்யா. தாயில்லாத பிள்ளை. லீவு கேட்டிருந்தேன்.”
“கல்யாணப் பத்திரிகை கொடுத்திருக்கீகளா..?”
பின் தலையைச் சொரிந்தார். “பத்திரிகைலாம் அடிக்கல. என்ன அவசரமோ தெரியலே...  பேசி முடிச்சு ஒரு வாரத் துக்குள்ளே கல்யாணத்தை வைக்கிறான்ங்க!”
அதிகாரி கோபத்தோடு நிமிர்ந்து பார்த்தார். “ஏந்தேவரே... ஒங்க வகையறாக்களுக்கு எதை எடுத்தாலும் அவசரம் பதற்றம்தானா…? ஒரு பொண்ணோட கல்யாண காரியத்திலே பத்திரிகைகூட அடிக்காம அப்பிடி என்னய்யா அவசரம்..?”
“எங்க ஊருப் பயலுகளை பத்தி எசமானுக்கு நல்லா தெரியும். மூக்குலே கோபத்தையும் நாக்குலே வீம்பையும் வச்சுக்கிட்டே அலைவான்ங்க. சின்னப் பயலுக கூடிச் செய்யிற காரியம், சிந்தாமச் செதறாம நடக்குமாங்கிற பயம் ஒரு பக்கம் குத்திக்கிட்டே இருக்குது எசமான்!”
“சின்னப் பயலுகள ஏன் சொல்றீங்க? ஒரு பெரிய மனுசன் நீங்க… ஒண்ணுக்கும் ஆகாத காரியத்துக்கு ஒரு கொலையப் பண்ணிட்டு உள்ளே வந்தீங்களே... ஒங்களை என்ன சொல்றது?” உதட்டோரம் சிரித்தார் அதிகாரி.
வெள்ளையத் தேவன் கவிழ்ந்தவாறு நின்றார்.
“சர்க்கார் ஜெயிலைக் கட்டுனதே நமக்குதான்னு ஊரு முளைக்கொட்டுத் திண்ணையிலே உக்கார்ந்து பெருமையா பேசுவீங்களாமே...” நக்கலாகச் சிரித்தார். “அதைக் கேக்குற இளவட்டப் பயலுக வெட்டிக்கிட்டு குத்திக்கிட்டு சாகத்தான் செய்வான்.”
வெள்ளையத் தேவனுக்குக் கண் கலங்கியது. “ஏம்மகன் ஒத்தப் பய. அவன்தான் எல்லாத்தையும் இழுத்துப் போட்டுச் செய்யணும். ரெண்டு நாள் முன்னக் கூடியே எனக்கு லீவு கெடச்சு, நான் போனா நல்லா இருக்கும் எசமான்.”
அதிகாரி காதில் வாங்கிக்கொண்டே, தன் மேஜையின் மீதிருந்த ஒரு கோப்பில் இருந்து, காகிதம் ஒன்றை உருவினார். “தேவரே இது என்ன தெரியுமா..?” என்றார்.
“தெரியலையே அய்யா…”
“இன்னும் ஒரு வாரத்திலே முன்னாள் முதலமைச்சரோட பிறந்த நாள் வருது. நன்னடத்தையின் பேரில் இருபத்தாறு ஜென்மக் கைதிகளை விடுதலை செய்யிறதுக்கான அரசாங்க உத்தரவு. நம்ம ஜெயில்லெ இருந்து விடுதலையாகப் போகிற கைதிகளில் நீங்கதான் முதல் ஆளு!”
கண்ணீரோடு வெள்ளையத் தேவன் கையெடுத்துக் கும்பிட்டார்.
“ம்ம்ம்… இப்போ வந்து லீவு கேட்டா… எப்பிடி? ஒரு பத்து நாள் பொறுத்துக்கங்க. ஒரேயடியா விடுதலையாகி போயி உங்க மக்களோடேயே இருக்கலாம்…” என்றபடியே நிமிர்ந்து பார்த்தவர், “தேவரே… என்ன சின்னக் குழந்தை மாதிரி அழுதுக்கிட்டு… சந்தோசமா போங்க” எழுந்து வந்து வெள்ளையத் தேவனின் தோளைத் தொட்டார்.
காய்ந்து கிடந்த கணக்குப்பிள்ளை ஊரணிக்குள் சிலம்பாட்டம் பழகிக்கொண்டிருந்த இளவட்டங்கள், பொழுது இருட்டவும் ஆட்டத்தைக் கலைத்து விட்டுக் கிளம்பினார்கள். கரை ஏறி, ஒற்றைப் புளிய மரம் தாண்டி, நல்ல தண்ணீர் கிணறு வழியாக வந்தார்கள். கருப்பையா, ஊடே வந்தான். ரெண்டு மூனு நாளா கருப்பையா கல்யாணப் பேச்சுதான் இளவட்டங்களுக்கு.
“அடேய்… எளவட்டங்களா… இந்தக் கருப்பையா பய சிங்கப்பூரு செண்டுப் பவுடரை எங்கயோ தேடிப் பிடிச்சுக் கொண்டுவந்து மாயழகிப்பிள்ளய மலத்திட்டான்டா…”
“டேய்… முறை கெட்ட பயலே… மாயழகி, உனக்குத் தங்கச்சிடா!”
“ஏந்தங்கச்சியவா நான் சொன்னேன்? மச்சினன் கருப்பையாவை நக்கலடிக்கிறேன்.”
“நக்கலடிச்சது போதும். கல்யாணம் முடியவும் மச்சினன்மார் அடிக்கிற ‘நலுங்கடி’ அடி. அதை, கருப்பையா தாங்குறானான்னு பார்ப்போம்.”
“டேய்… கூறுகெட்ட முண்டைகளா… சத்தம் போடாம வாங்கடா. தண்ணிக் கெணத்துக்கு பொண்ணுக வருதுக...” என கருப்பையா சொன்ன தும் எல்லோரும் சத்தம் காட்டாமல் நடந்தார்கள்.
இடுப்பில் குடங்களோடு வரும் குமரிப் பெண்கள், சிரிப்பும் கேலியுமாய் பேசிக்கொண்டு வந்தார்கள். யாரோடும் பேசாமல் இடது ஓரமாய் மாயழகி வந்தாள். எதிரே இளவட்டங்களைப் பார்த்ததும் அடக்க ஒடுக்கமாய் ஒதுங்கி நடந்தார்கள்.
கருப்பையா, மாயழகியைக் கண் கோதினான். சீவி சிங்காரித்து வரும் குமரிகளுக்கு மத்தியில் எந்தப் பூச்சும் இல்லாமல் நடந்து போனாள்.
குமரிகள் கடந்து நாலு எட்டு போனதும் கள்ள ராமன் கேட்டான். “ஏன்டா கருப்பையா… பொண்ணுக எல்லாம் எம்புட்டு ஜோடனைலெ போறாளுக… ஏங்கொழுந்தியா மாயழகி மட்டும் மொகத்திலே பவுடர்கூட பூசாமல் போகுதே…! அதெல்லாம் நீ வாங்கிக் குடுக்கிறதில்லையா…? பருசம் போட்டாச் சுன்னாலே பாதி பொண்டாட்டிடா…”
“நான் ஒரு நல்ல மகராசனுக்கு வாக்கப்பட்டு வந்தேன். தாயில்லாத என் தங்கச்சியும் இந்த வீட்டுக்கு வாக்கப்பட்டு வந்தால்… அக்காவுக்கு அக்காவா ஆத்தாவுக்கு ஆத்தாவா இருந்து நல்லது கெட்டது பாத்துக்கிறலாம்னு ஆசைப்பட்டேன். கூடப் பெறந்த பாவிப் பய மண்ணை அள்ளிப் போட்டுட்டான்…” ஒருக்களித்துப் படுத்துக் கிடக்கும் அரியநாச்சியின் கண்களில் நீர் ஓடியது.
“அடியே விடுடீ. பருசம் முடிஞ்சு போச்சு… இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு… நீ அழுது பட்டினியா கெடந்து என்னாகப் போகுது? எட்டு, ஒம்பது வருசம் கழிச்சு, ஒரு பிள்ளையை வயித்திலே உண்டாகி இருக்கே… அதுக்கு ஒரு பங்கமில்லாமல் பெத்து போடுற வழியைப் பாரு” இரண்டு நாட்களாக அரியநாச்சியை ஆற்றுவது தான் பூவாயி கிழவிக்கு வேலை.
சோலை வீட்டுக்குள் நுழைவதைப் பார்க் காமலே, “ஏம்புருசனைத் தலை குனிய வச்சுட் டான்ங்களே…!” அரியநாச்சி கண்ணீர் விட்டாள்.
அரியநாச்சியின் தலைமாட்டில் வந்து நின்ற சோலை, “அட விடுங்க மதினி… எங்கண்ணனை தலை குனிய வைக்க இந்த ஆப்பநாட்டிலே எவனும் பெறக்கலே. நான் மாட்டேன்னுதான் சொன்னேன். நீங்கதான் தங்கச்சி தங்கச்சீன்னு ஒத்தக் கால்லெ நின்னீக. கெரகம் வெலகுச்சுன்னு கஞ்சியக் குடிப்பீகளா… என்னமோ… அழுதுக் கிட்டிருக்கீக..!” என்றான்.
உட்கார்ந்த வாக்கில் சோலையைப் பார்த்த பூவாயி கிழவி, “ஏய்யா… மருமகனே..! ஒங்க அண்ணனை எங்கே?” என்றாள்.
“அவரு காலையிலேயே காரேறி சாயல்குடி போயிட்டாரு.”
“பெருநாழிக் காரியத்துக்கு என்ன சொன்னாரு…?”
“விட்டுட்டு வேலையைப் பாருடான்னாரு.”
அரியநாச்சி பக்கம் திரும்பிய பூவாயி, “அப்புறம் என்னடீ… கோபப்பட வேண்டிய ஓம்பு ருசனே பொருப்படுத்தலே…! நீ ஏன் அழுது அழுது நீந்து போறே வா… ஒரு வாய்க் கஞ்சி குடி” சோற்றுத் தட்டை கையில் தூக்கினாள்.
பெருநாழி முத்துமாரி அம்மன் கோயிலை ஒட்டிய கடை, குப்பை ராவுத்தர் கடை. பொண்ணு களுக்கு வேண்டிய அத்தனை அலங்காரப் பொருள்களும் இருக்கிற ஒரே கடை.
கடைக்குள் நுழைந்த கருப்பையா, எல்லா வற்றையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தான்.
குப்பை ராவுத்தர், “ஏப்பா… ஏய்… கருப் பையா… ஏன்… எல்லாத்தையும் போட்டு ஒழப்புறே..? என்ன வேணும்னு சொல்லு. எடுத்து தர்றேன்” என்றார்.
கருப்பையா காதில் வாங்குற மாதிரி இல்லை.
“இவன் யார்டா... கிறுக்குப் பயலா இருக்கான்… என்னத்தை தேடுறான்…?”
கருப்பையா தானே பேசினான். “குஞ்சம்… குஞ்சம்…”
“ஜடைக் குஞ்சமா..?”
“ரிப்பனு…”
“ரிப்பன் என்ன கலரு?”
“எல்லா கலர்லேயும் குடுங்க. ரிப்பனை வெட்டா தீங்க. அப்பிடியே குடுங்க. அப்புறம் குங்குமம்… எல்லா கலர்லேயும் ராவுத்தரே.”
“ஏய்… குங்குமம் எட்டுக் கலர்லேயா இருக்கும்?”
“விலை கூடுன பவுடர் டின் எது? நல்லா வாசமா இருக்கணும்…”
“இது எல்லாமே வாசமா தான் இருக்கும்.”
“எல்லாத்தையும் ஒதுக் குங்க. வளையல் பெட்டி...வாசனைச் சோப்பு...” என்ற வாறு கருப்பையாவே ஒதுக்கி னான்.
பிளந்த வாய் மூடாமல் நின்ற குப்பை ராவுத்தர், “ஏய்ய்...எல்லாத்தையும் அள்ளுறியே...எனக்குப் போட்டியா யாவாரம் பண்ணப் போறியா..?” என்றார்.
ராவுத்தருக்கு காது கொடுக் காத கருப்பையா, தலையில் கட்டி இருந்த துண்டை அவிழ்த்து உதறி விரித்தான். எல்லாவற்றையும் அள்ளிப் போட்டு மூட்டை கட்டினான். தூக்கித் தோளில் வைத்தான்.
“ஏப்பா... ஏய்…! பாதி கடையை மூட்டை கட்டிக் கொண்டு போறியே… காசை எங்கேப்பா…?” பரிதவித்தார் குப்பை ராவுத்தர்.
“காசு என்ன ராவுத்தரே காசு... சாயங்காலம் ஒரு ஆட்டுக் குட்டி. ஒங்க வீட்டிலே நிக்கும். நல்ல இளங்குட்டி. பிரியாணியைப் போடுங்க..!” பவுடர் வாசனையோடு நடையைக் கட்டினான் கருப்பையா.

x