ஆர்.ஷபிமுன்னா
மக்களவைத் தேர்தலின் முன்னோட்டமாகக் கருதப்படும் சத்தீஸ்கர், ம.பி. மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டன. இதனுடன் தெலங்கானாவுக்கும் மிசோராமுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுவிட்டது. கடைசியாக நடைபெற்ற கர்நாடக மாநிலத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்குப் பிறகு அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் எனக் குரல்கள் எழுந்தன. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என நிரூபிக்கும் வகையில் இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரங்கள் உணர்த்துகின்றன.
வழக்கமாக அடம்பிடிக்கும் காங்கிரஸ் இந்த முறை கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாகச் செயல்படத் தயாரானது. ஆனால், முதல் கட்சியாக மாயாவதியின் பகுஜன்சமாஜ், காங்கிரஸுடன் கூட்டுசேர மறுத்துத் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. அதேபோல் அகிலேஷின் சமாஜ்வாதியும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் தனித்துப் போட்டி என அறிவித்துவிட்டன. இந்தச் சூழலைப் பார்த்தால் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் இணைவது கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், இந்த நிலையிலும் சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் மாநிலங்களில் ஆளும் கட்சியான பாஜகவின் வெற்றிக்குக் கடும் சவாலாய் நிற்கிறது காங்கிரஸ்.
சத்தீஸ்கர்: சூழ்ச்சிகளின் நடுவே…